Saturday, May 8, 2010


பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி

[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 05:50.42 PM GMT +05:30 ]
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!

‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம்.. இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’

‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’

‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’

‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’

‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’

‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத்திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’

‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’

‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.

உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.

தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.

இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!

ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.

‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.

ஜூனியர் விகடன்