Friday, February 26, 2010

ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் மட்டும் கரையேறுவது சாத்தியமாகாது! - ஈழநாடு (பாரிஸ்)

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இரண்டாவது அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஒரு முனைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியமும் இப்போது பலத்த சிதைவினை எதிர் கொள்ள வேண்டிய நிலையை அடைந்துள்ளது.

தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்படக் கூடாது என்று கருதுபவர்களும் முடிவெடுக்க முடியாத நிலையில் திக்கு முக்காடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்ட அமைப்புக்கெதிராக ஒட்டுக் குழுக்களே போட்டியிட்டன என்பதற்கு மாறாகத் தற்போது, தமிழீழ அரசியல் களம் பலமாகச் சிதறிக் கிடக்கின்றது.

சிங்கள தேசத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சிலரைப் பிரித்தெடுக்க முடிந்திருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார பீடத்தினர் மேலும் சிலரை வெளியே அனுப்பிச் சிதைவுகளைத் தாமாகவே உருவாக்கியும் உள்ளார்கள். சிங்கள தேசத்தால் வாங்கப்பட முடிந்த சிவானந்தன் கிஷோரும், கே. தங்கேஸ்வரியும் அரச தரப்பு வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள். அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆபத்துக்களும் சேதங்களும் அதிகம் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன், பத்மினி, இறுதியாக வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பல் போன்றவர்களது தனிப்பட்ட செல்வாக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் பெரும் சேதத்தை உருவாக்கலாம்.

இவர்களில், சிவாஜிலிங்கமும், சிறிகாந்தாவும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், கஜேந்திரன், பத்மினி ஆகியோரது வெளியேற்றத்திற்கான காரணங்கள் உண்மைத் தன்மை இல்லாததாகவே தெரிகின்றது. இந்த இருவருக்கும் எதிரான கூட்டமைப்புத் தலைமையின் பிடிவாதம் காரணமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த வெளியேற்றமும், வெளியேறலும் கூட்டமைப்பால் நியாயப்படுத்த முடியாமல் போனால், கூட்டமைப்புக் குறித்த நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகப் போய்விடும். தீவிர தமிழ்த் தேசியவாதிகளான கஜேந்திரனும், பத்மினியும் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாகிப் போய்விடும்.

கடந்த காலத்தில், தமிழ் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி ஒரே அணிக்கு வாக்களிப்பதையே தமது பலமாகக் கருதியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறாக எடை போட்டு விட்டதாகவே கருதத் தோன்றுகிறது. அந்த மக்களது ஒற்றுமைக்கு ஏற்ற படியான சரியான நெறிப்படுத்தப்பட்ட கொள்கைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. ஒற்றுமையின் பெயரால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களின் இலட்சியப் பாதையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் வேடமேற்றுக் காமடி அரசியல் நடாத்தியமையும் தமிழீழ மக்கள் மறந்துவிடவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியை தனது சொத்தாக மாற்றி, கொழும்பில் கோலோச்ச நினைத்த ஆனந்தசங்கரிக்கு நேர்ந்த அவலத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. இலட்சியம் தொலைக்கப்பட்ட அணிக்கு ஒற்றுமையின் பெயரால் அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது டக்கிளசிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

தற்போது ஒற்றுமை என்பதை விடவும் இலட்சியம் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீதையாக மாறித் தனது  தூய்மையை நிரூபிக்காவிட்டாலும், தமிழ் மக்களிடம் எழுந்துள்ள கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கொடுத்தே ஆகவேண்டும்.

1) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், முள்வேலி முகாமுக்குள் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களையும் சென்று பார்ப்பதற்கே சிங்கள அரசு மறுத்த போது, அந்த மக்களுக்காக போராடத் தவறியது ஏன்?

2) இறுதி யுத்த காலத்தில் போர்க் குற்றம் புரிந்ததாக மனச்சாட்சியுள்ள நாடுகளாலும், அமைப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மகிந்த சகோதரர்களோடும், சரத் பொன்சேகாவோடும் ஜனாதிபதித் தேர்தலின்போது சமரசம் காண முற்பட்டதும், சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்கியதும் எதற்காக?

3) விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியத்திற்கான பலமான சக்தியாக எழுந்து நிற்கும் புலம்கெயர் தமிழ் அமைப்புக்களது அழைப்புக்களை உதாசீனம் செய்தது எதற்காக?

4) தமிழின அழிப்புப் போரை பின்நின்று நடாத்தியதோடல்லாமல், அதை நெறிப்படுத்திய இந்தியா தமிழீழ மக்களை இறுதி யுத்தத்தின்போது காப்பாற்ற முனைந்த மேற்குலகையும் தடுத்து நிறுத்தியது. அத்துடன் நிறுத்திவிடாமல், மனச்சாட்சியே இல்லாமல் மேற்குலகால் ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர முற்பட்ட சிறிலங்கா அரசுக்கெதிரான குற்றப் பிரேரணையையும் முறியடித்தது. அந்த இந்திய அரசின் நெறிப்படுத்தலுடனான உங்களது அரசியல் பயணம் தமிழீழ மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது?

5) கஜேந்திரன், பத்மினி போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு இந்தத் தேர்தலில் இடம் கொடுக்காமல் மறுத்தது இந்திய நிர்ப்பந்தத்தினால் என்ற குற்றச்சாட்டை எவ்வாறு நிராகரிக்கப் போகின்றீர்கள்?

6) முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான இன்று வரையான காலப் பகுதியில் அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களுக்கான உங்களது நகர்வு போதுமானது என்று எண்ணுகிறீர்களா?

இப்படி எத்தனையோ கேள்விகள் தமிழீழ மக்கள் மனங்களில் உள்ளன. அதற்குச் சரியான பதில்களைக் கொடுக்கத் தவறினால் ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் நீங்கள் கரையேறுவது சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது.

யுத்தத்தின் இறுதி நாள் மே 18 ல் நடந்ததை விவரிக்கிறார் கோத்தபாய

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்பும் சில மேற்குல நாடுகள் யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

"தெஹல்கா' இணையத்தளத்திற்கு அளித்துள்ள ஒரு நீண்ட பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள கோத்தபாய, ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு காட்டமான பதில்களை வழங்கியுள்ளார்.

இந்தப் பேட்டியின் இறுதியில் இறுதி யுத்தம் குறித்த ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. சரத்பொன்சேகாவை சம்பந்தப்படுத்தி கோத்தபாயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி இது தான்:

கேள்வி: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை நீங்கள் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டீர்கள் எனச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: முன்னர் அவர் வேறு எதையோ தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அரசியல் தீர்வு குறித்துப் பேசுகிறார். சரணடைய வந்தவர்களைச் சுடுமாறு நானே உத்தர விட்டேன் என்கிறார். அவரது பழைய பாடசாலையில் ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு கேட்டதன் மூலம் அரசியல் தலைமை அவர்களைப் பாதுகாக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். யுத்த நிலைமையில் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றார்.

கேள்வி: உண்மையில் என்ன நடந்தது?

பதில்: பிரபாகரன் கொல்லப்பட்ட மே 18ல் நடந்தது இதுதான்.

மிகச் சிறிய பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களில் 200 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

நள்ளிரவிற்குப் பின்னர் இது இடம்பெற்றது. இந்தச் சூழ்நிலையை மனதில் கற்பனை செய்து பாருங்கள்.

கடும் இருட்டில் அடர்ந்த காடுகளுக்குள் இருந்து அவர்கள் வருகின்றனர். சில விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். பிரபாகரன் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றார். அவரது மகன் வேறு திசையில் சென்றார்.

அதேவேளை, சரணடைந்த 10 ஆயிரம் உறுப்பினர்கள் வேறு திசையிலிருந்து வந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இளம் இராணுவ வீரர் ஒருவரால் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரை இனங் கண்டு அவரைச் சுட்டுக்கொல்லும் அல்லது உயிருடன் விடும் முடிவை எவ்வாறு எடுக்க முடியும்?

இவ்வாறு கோத்தபாய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

தமிழர்கள் - தமிழ்க் கட்சிகள் - புலம்பெயர் தமிழர்கள் - புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள்

ஏதிர்வரும் இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தாயகத்தில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால் எவர் வெல்வதற்கு தகுதியானவர்கள் என்பதை வடகிழக்கு தமிழர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

எவர் வெற்றியடையா விட்டாலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைய வேண்டுமென்ற இலங்கையரசின் சூழ்ச்சிக்கு முண்டு கொடுக்கும் நடவடிக்கையை சில தமிழ் அரசியல்வாதிகள் செய்து வருகின்றார்கள்.

எதிர்காலத்தில் தமிழர்களுக்கு தலைமைதாங்கி அவர்களின் உரிமையை வென்றெடுக்கும் தலைமையை இனங்கண்டுள்ள தமிழர்கள் மத்தியில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களை திசைதிருப்பும் விதமாகவும் அரசியல் சூழ்ச்சிகள் இலங்கை அரசாங்கத்தினால் இடம்பெறுவதும் அந்த சூழ்ச்சிகளுக்கு துணைபோகும் தமிழ் குழுக்கள் நாளுக்கு நாள் புதிய அறிக்கைகளை ஊடகங்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழர்களும் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

முள்ளிவாய்க்காலுடன் தமிழரின் எதிர்காலம் சூனியமாகி விட்டதாக யாருமே அச்சமோ தயக்கமோ கொள்ளக்கூடாது. வரலாறு என்பது ஒரு கொள்கையை வாழையடி வாழையாக ஒருவர் மாறி ஒருவர் கையில் முன்னெடுப்பதற்கு கொடுத்திருக்கின்றதே தவிர ஒருவரே எக்காலத்திற்கும் தலைமை தாங்கும் நிலையைக் கொடுத்ததில்லை.

2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் கூறிய புலம்பெயர் மக்கள் குறிப்பாக "இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" எனக் கூறிருந்தார்.

ஒரு வேண்டுகோள் அல்லது அறைகூவல் என்பதற்கப்பால் ஒவ்வொரு தமிழரின் சுயமான கடமையாக தமிழ் இன விடுதலைக்காக உழைப்பது மிக முக்கியமானதாகும்.

தாயகத்தில் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையாக இருப்பது "தமிழத் தேசியக் கூட்டமைப்பே“ ஆகும். இந்த தலைமைத்துவத்தோடு இணைந்து செல்ல வேண்டிய பொறுப்பை தாயக மக்கள் சரியாகவே செய்வார்கள். தாயகத்திலிருக்கும் இந்த தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழருக்கு உண்டு.

புலம்பெயர் தமிழர்கள் இந்த நிலையிலிருந்து நழுவி அத்தலைமைத்துவ நடவடிக்கைகளை தூர நோக்குடன் பார்க்காது "இந்தியாவிற்கு விலை போனவர்கள்“ என்ற தோரணையில் கருத்துக்களை முன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியா ஈழத்தமிழருக்குச் செய்த தரோகத்தனத்தை நாம் மறப்பதற்கில்லை. ஆனால் உலக அரசியல் இராஜதந்திர அணுகுமுறையை நாம் மிக கவனமாக உன்னிப்பாக கவனித்து அதற்கமைய எமது கருத்து வெளிப்பாடுகளை வெளிக் கொணர வேண்டும்.

இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை இல்லை என்று எந்த அரசியல் விற்பன்னராலும் அடித்துச் சொல்ல முடியாது. இந்தியா எமக்கு துரோகம் செய்துவிட்டது, எனவே இந்தியாவை நிராகரிப்போம் என்பது தமிழரின் விடுதலையை வெகு சீக்கரத்தில் பெற்றுவிட வாய்ப்பாகும் எனச் சிந்தித்தால் அது தூர நோக்கற்ற சிந்தனையேயாகும்.

உலக நாடுகள் எவற்றுக்காயினும் நாம் கொடுக்கும் விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள் இந்தியாவின் ஆலோசனைக்குட்படுகின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. எம்மிடம் காணப்படும் குறைபாடுகள் என்னவெனில் அவசரமாக, அவன் கள்ளன்! விலை போகிவிட்டான்! இவன் துரோகி! என்று சொல்வதே.

எவர் எதை முன்னெடுத்தாலும் தமிழர் சுதந்திரமாக வாழும் தீர்விற்கான கொள்கை சிதையாமல் அப்படியே இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ வேலைத்திட்டம், வட்டுக்கோட்டைத் தீர்மான வேலைத்திட்டம், உலகத்தமிழர் பேரவை வேலைத்திட்டம் என்பன ஒரு இலக்கை நோக்கிச் சென்று ஒரு இடத்தில் சங்கமிக்கும் மாபெரும் வேலைத்திட்டங்களாகும்.

இந்த மூன்று அமைப்புகளும் தமக்குள் புரிந்துணர்வுடன் தம் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில தனிமனித விருப்பு வெறுப்பு இந்த அமைப்புகளின் நடவடிக்கையை குழப்புவதாக அமையக்கூடாது.

புலம்பெயர் தமிழர்களிடம் இருக்க வேண்டியது ஒற்றுமை. ஒற்றுமையே. அதுதான் மிக முக்கியமானது. அதுதான் மிகப் பெரிய பலம்.

இன்று புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகு காத்திரமான அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் மக்களால் ஆரம்பித்திலேயே ஏன் மேற்கொள்ள முடியவில்லை என்பதை புலம்பெயர் தமிழர்கள் தமக்குள்தானே கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும்.

இனிமேலும் தடைகளை குழப்பங்களை விளைவித்து சலிப்பையேற்படுத்தவதையும், திசை மாற்றுவதையும் விட்டு விட வேண்டும். தடைகளைப் போட்டவர்கள் யார் என்பதையும் சிந்தியுங்கள்.

புலம்பெயர் தமிழரின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் மேலே கூறிய மூன்று செயல்திட்ட அதன் நிர்மாணர்களை ஒருவருடன் ஒருவர் மோதவிடுவதில் இலங்கையரசு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை நாம் உணர வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இன்னும் பலமாக செயல்பட வேண்டும் என டேவிட் மிலிபாண்ட் கூறியதன் எதிரெலியாக அதைக் காட்டிக் கொள்ளாமல் “International Crisis Group“ வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த அறிக்கையில் கூறப்பட்ட மையக் கருத்து என்னவெனில், ”புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக முறையில் மேற்கொண்டு வரும் தமிழீழம் நோக்கிய செயல்பாடே இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணம்“ என்பதாகும்.

இந்த அறிக்கைக்கான காரணம் என்னவெனில், புலம்பெயர் தமிழரால் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளினால் உலக நாடுகளில் தமிழரின் ஜனநாயக ரீதியான விடுதலை நோக்கிய செயல்பாடுகளை உலக நாடுகளால் நிராகரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதும் அதனை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன என்பதேயாகும்.

இந்த அறிக்கையானது, புலம்பெயர் தமிழர்கள் எந்தச் செயல்பாடுகளையும் செய்யாது இருக்க வேண்டுமென்பதேயாகும்.

இந்த அறிக்கை எவ்வாறெனில், உடனடியாகக் கொல்லாத விசத்தைப் போன்றது. உடல் அப்படியே இருக்க உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக படிப்படியாக செயலிழக்கச் செய்யும் விசம் போன்றது.

ஓவ்வொரு புலம்பெயர் தமிழனும் ஒரு இராஜதந்திரி போல் செயல்பட வேண்டும்.

எனவே "தமிழத் தேசியக் கூட்டமைப்பு", "நாடு கடந்த தமிழீழம்“, "வட்டுக்கோட்டைத் தீர்மான வேலைத்திட்டம்“, "உலகத்தமிழ் பேரவை“ போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு வலுச் சேர்க்க வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்கள் உணர வேண்டும்.

-அங்கயற்பிரியன்-
malarvannan48@gmail.com

யாழ். மற்றும் திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. பொருளியல் ஆசிரியர் சின்னத்துரை வரதராஜனை தலைமை வேட்பாளராகக்கொண்டு இந்த வேட்புமனுப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள்.

1. முதன்மை வேட்பாளர் -சின்னத்துரை வரதராஐன் (யாழ். மாவட்டத்தின் முன்னணி பொருளியல் ஆசிரியர்) முகவரி- இல 76-2 கண்டி வீதி, யாழ்ப்பாணம்.

2. கலாநிதி.விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி ( முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்) முகவரி-நீலிப்பந்தனை காரைநகர்.

3. வைத்தியகலாநிதி.கந்தசாமி திருலோகமூர்த்தி - முகவரி-கண்ணன் ஆலய வீதி, கிளிநொச்சி.

4. திரு.சந்தனம் ஸ்ரீபன் ( கடற்தொழில்) முகவரி-10-5 மத்திய கிழக்கு வீதி, குருநகர்.

5. பெயர்-நடேசு துரைராஜா ( விவாகப் பதிவாளர்) முகவரி-தவமகால், அல்வாய்

6. பெயர்-நாகலிங்கம் குழந்தைவேலு - முகவரி- 63-2 காங்கேசன்துறை வீதி, கொக்குவில்.

7. பெயர்-விஸ்வலிங்கம் மணிவண்ணன் ( மாணவன்) முகவரி-ஐயனார் கோவிலடி, கொக்குவில் மேற்கு கொக்குவில்.

8. பெயர்-பிரான்சிஸ் வின்சன் டீ போல்; (வியாபாரம்) முகவரி- றெஸ்கொட், கடற்கரைவீதி, பருத்தித்துறை.

9. பெயர்- செல்லத்துரை சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்) முகவரி- பெரியமாவடி, சாவகச்சேரி.

10. பெயர் - திருமதி. பத்மினி சிதம்பரநாதன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) முகவரி- 19 பழம் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

11. பெயர் - செல்வராசா கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) முகவரி – துன்னாலை மத்தி, கரவெட்டி.

12. பெயர் - கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் (பொதுச் செயலாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். சட்டத்தரணி) முகவரி – 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.

இதேவேளை,தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட இடதுசாரி முன்னணியின் கீழ் நல்லதம்பி ஸ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோரும் இன்று தமது வேட்புமனுக்களை யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள்.

1. பெயர் - சண்முகராசா கௌரி முகுந்தன் ( திருகோணமலை நகரசபை தலைவர்) முகவரி – 18-5 பட்டணத்தெரு, திருகோணமலை

2. பெயர் - தங்கவேலாயுதம் காந்தரூபன் ( திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர்) முகவரி – 2 ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு

3. பெயர் - உமாகாந்தி ரவிக்குமார் ( குச்சவெளி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர்) முகவரி – அலஸ்தொட்டம், திருகோணமலை

4. பெயர் - கண்மணிஅம்மா இரத்தினவடிவேல் ( சமூகசேவை) முகவரி – 654 முருகன்கோவில் வீதி, அன்புவழிபுரம்

5. பெயர் - பிலிப்பையா ஜோன்சன் (ஒப்பந்தகாரர்) முகவரி – பாலத்தடிச்சேனை, தோப்பூர்

6. பெயர் - தில்லையம்பலம் ஹரிஸ்ரன் (ஓய்வூதியர்) முகவரி – 142 கடல்முக வீதி. திருகோணமலை

7. பெயர் - கோணாமலை திரவியராசா (ஓய்வூதியர்) முகவரி – சம்பூர் 5, மூதூர்


தமிழர் விடுதலைக் கூட்டணி வன்னியில் போட்டி

நேற்று வேட்பு மனுக்கள் கையளிப்பு

Imageவன்னியில் போட்டியிடுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி நேற்று அதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியூடன் கூட்டணியின் வேட்பாளர்களும் நேற்று வவூனியா தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டணியின் முதன்மை வேட்பாளராக செல்வரட்ணம் சுதாகரன் களத்தில் இறங்கியூள்ளார்.

இதேவேளை ஈழ தேசிய ஜனநாயக முன்னணியூம் (ஈ.என்.டி.எல்.எப்.) வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று வவூனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தது.

இந்த முன்னணி இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியூள்ளது. இதன் வேட்பாளா; விவரம்.

1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே. விநாயகமூர்த்தி 3. ஆர். கருப்பையா 4. ஏ. ராமசாமி 5. கே. குணரட்னம் 6. வீ. கனகராஜா 7. ஆர். கணேசன் 8. கே. முருகையா 9. என். சோமசுந்தரம்

தமிழர் விடுதலைக் கூட்டணி

வன்னி மாவட்டம் 1. செல்வரட்ணம் சுதாகரன் (முதன்மை வேட்பாளர்) 2. மாணிக்கவாசகம் ரதிகுமார் 3. ஆறுமுகன் உதயசேகர் 4. கேசவன் சிவகுமாரன் 5. சபாரட்ணம் மைக்கல் கொலின் 6. பிள்ளை அம்பலம் ஜெகதீஸ்வரன் 7. மார்க்கண்டு மங்களராயன் 8. மோகனதாஸ் மகாதேவன் 9. ராசையா ஜெகமோகன்.(எஸ்.டி.எம்.ஐ.11.45)

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு யாழ். செயலகத்தில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ரி.ஸ்ரீகாந்தா ஆகியோர் அதிலிருந்தும் பிரிந்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற புதிய கட்சியொன்றை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிவாஜிலிங்கம் தமது கட்சி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இடது சாரி முன்னணியுடன் இணைந்து குடை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது எனத் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரிலும்,வெளி மாவட்டங்களில் இடதுசாரி முன்னணி என்ற பெயரிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் மேலும் கூறினார்.

யாழ் மாவட்ட வேட்பாளர்விபரம்

1) கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா சட்டத்தரணி( முன்னாள் பா உ)
2) கனகலிங்கம் சிவாஜிலிங்கம்( முன்னாள் பா. உ)
3) வேலுப்பிள்ளை இரத்தினம் ஜெகராசா
4) தமியான் யூலி தயான் (பட்டதாரி)
5) அருமைநாதன் தவநாதன்
6) சுப்பிரமணியம் செல்வநேசன்( பட்டதாரி)
7) பொன்ராஜா பூலோகசிங்கம் (சட்டத்தரணி)
8) கனகசபாபதி நமநாதன் (சட்டத்தரணி)
9) முகமது இஸ்மாயில் உம்மு ஷகிலா
10) விஜயதர்மா கேதீஸ்வரதாசன்
11) சண்முகலிங்கம் சஜீவன் (பட்டதாரி)
12) தியாகராசா இராசரத்தினம்

மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரிக்கு புதிய ஞானோதயம் பிறந்தது?

அரசியல், தேசியம் என்று இன்னும் காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை என மட்டக்களப்பின் முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.தங்கேஸ்வரி கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருணாவுடன் இணைந்து தற்போது மகிந்த அரசுடன் இணைந்துள்ள அவர், எதிர்வரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.இதுதொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல், தேசியம் என்பவற்றுக்கு மேலாக இன்னுமும் பல தேவைகள் உடனடித் தேவையாகா உள்ளன.

இவற்றினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே நான் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றேன், 30 வருட போரில் பாதிக்கப்பட்ட படுவான்கரை மக்களுக்கு தேவையான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதே எனது பிரதான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தனை காலமும் தமிழ்த் தேசியம் குறித்து பேசியவர், முள்ளி வாய்க்காலில் மக்கள் அவலப்பட்டபோது வேதனைப்படாதவர் இப்போதுதான் தமிழ் மக்கள் குறித்து வேதனைப்படுகின்றார் என்று கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள், எல்லாம் கருணாவுடன் இணைந்ததால் வந்த புதிய ஞானோதயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

2010 பொதுத்தேர்தல் களம் ஆரம்பம்: யாழ். மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 324 வேட்பாளர்கள் களத்தில்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறும் ஏழாவது பொதுத்தேர்தலில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தெரிவு செய்வதற்காக இதுவரை இல்லாதவாறு மொத்தம் 324 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

அதே போன்று மொத்தம் 12 சுயேச்சைக் குழுக்கள் தமது வேட்பாளர்களின் நியமனப் பத்திரத்தை நேற்றுத் தாக்கல் செய்தன.

இதேவேளை வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும்.

தமிழ்ப் பகுதிகளில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவது இதற்கு முன்னர் நடைபெற்ற ஆறு பொதுத் தேர்தல் களங்களை விடவும் முற்றிலும் மாறுபட்ட பின்னணி ஒன்றைத் தோற்றுவித்துள்ளதாக நோக்கர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறவிருந்ததால் யாழ். செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கட்சி உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வருகை தந்து கொண்டிருந்தனர். இதனால் யாழ்.செயலகத்தின் முன் வாயில் வேட்பாளர்களால் நிறைந்து வழிந்ததைக் காணமுடிந்தது.

நேற்று நண்பகல் 12மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதும் 12.30 மணி முதல் 1.30மணி வரை வேட்பு மனுத் தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஆட்சேபனைகள் நிறைவு பெற்றதும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான கே.கணேஷ், யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உத்தியோக பூர்வமாக தகவல்களை வெளியிட்டனர்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 16 கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்தன. அவற்றில் 4 சுயேச்சைக் குழுக்களினதும் ஒரு கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விண்ணப்பங்களில் பூரணமான தகவல் வழங்கப்படாமையால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 12 சுயேச்சைக் குழுக்களும் 15அரசியல் கட்சிகளும் போட்டியிடவுள்ளன.

இங்கு தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் விவரம் வருமாறு:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
சோஷலிஸ சமத்துவக்கட்சி,
ஐக்கிய தேசியக் கட்சி,
ஜனநாயகத் தேசியக் கூட்டணி,
ஜனசெத பெரமுன,
ஐக்கிய சோஷலிஸக் கட்சி,
எல்லோரும் மக்கள் எல்லோரும் மன்னர்கள் கட்சி,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி,
தமிழர் விடுதலைக் கூட்டணி,
ஜனநாயக ஐக்கிய முன்னணி,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்,
இடதுசாரி விடுதலை முன்னணி,
ஈழவர் ஜனநாயக முன்னணி.

தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களின் தலைமை வேட்பாளர்களின் விவரம் வருமாறு:

சந்திரலிங்கம் சத்தியசீலன்,
சண்முகநாதன் மனோகரன்,
பர்னாந்து ஜோஸப் அன்ரனி,
கதிரவேல் செவ்வேள்,
அன்ரனி தங்கா துஷாரா,
காசிப்பிள்ளை செந்தில்வேல்,
பொன்னுத்துரை சிவபாலன்,
அருணாச்சலம் சொக்கநாதன் சந்திரன்,
வல்லி நடராசா,
நாகமுத்து தணிகாசலபிள்ளை,
திலக் உடுகம,
முகம்மது அஹீத் தாஹீர்.

அதேவேளை இலங்கையின் நாடாளுமன்றத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும். மொத்தமாக 1867 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 31 பேரே இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கொழும்பில், 22 அரசியல் கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த ஆகக் கூடுதலான 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டாவது கூடிய எண்ணிக்கையான 660 பேர் போட்டியிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு ஐந்து தோ்தல் மாவட்டங்களிலும் களம் இறங்கவுள்ள கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களின் நிலைவரம்:

யாழ்ப்பாணம் - 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக்குழுக்கள் - 324 வேட்பாளர்கள்

வன்னி - 18 அரசியல் கட்சிகள் - 9 சுயேட்சைக்குழுக்கள் - 306 வேட்பாளர்கள்

மட்டக்களப்பு - 17 அரசியல் கட்சிகள் - 27 சுயேட்சைக்குழுக்கள் - 360 வேட்பாளர்கள்

திருகோணமலை - 17 அரசியல் கட்சிகள் - 14 சுயேட்சைக்குழுக்கள் - 217 வேட்பாளர்கள்

திகாமடுல்லை - 17 அரசியல் கட்சிகள் - 49 சுயேட்சைக்குழுக்கள் - 660 வேட்பாளர்கள்

Wednesday, February 24, 2010

என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் த.கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது: அ.விநாயகமூர்த்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. இவ்வாறு த.கூட்டமைப்பு வேட்பாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி யாழ்.செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுயேச்சைக் குழுக்களுக்கு தலா 15 லட்சம் ரூபாவைக் கொடுத்து தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டிவிட்டுள்ளார்.

ஆனால் எந்தவொரு சதித்திட்டங்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைத்துவிட முடியாது.

சலுகைகளை வழங்கி தமிழ் மக்களை விலை மாந்தர்களாக்க நினைக்கிறார் ஜனாதிபதி; அவருடைய நினைப்பு ஒருபோதும் நடைபெறாது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று தமிழ்த் தேசியத்தை சர்வதேசம் எங்கும் பறைசாற்றுவோம்.

எமது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு நிற்கிறார்.

அவரை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்

விஜயகலா மகேஸ்வரன் ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்: இன்று வேட்புமனு தாக்கல்

ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தோ்தலிற்கான நியமனப்பத்திரத்தை யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளது. இப்பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர், தி.மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரன் இரண்டாவது இடத்தையும், பத்திரிகையாளர் க.ஸ்ரீகஜன் மூன்றாவது இடத்தையும் வகிப்பதுடன், மற்றும் சாம்பசிவம் சத்தியேந்திரா, சண்முகசுந்தரம் தவக்குமார், இராசரத்தினம் ஸ்ரீமன் தாமோதரராஜா, நடராசா சண்முகவேல், கணேசன் குலேந்திரராஜா, வேலை மகேந்திரன், யோ. ராயேந்திரா, முகமத் முபீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்

வவுனியாவில் த.தே. கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்

வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்திருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.

அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

த.தே. கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள யாழ் மாவட்ட வேட்பாளர்களின் விபரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் 12 பேரைக் கொண்ட வேட்பு மனுப்பட்டியலை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதன்படி மாவை சேனாதிராஜா தலைமையிலான 12 பேரின் பெயர்கள் இதில் அடக்கப்பட்டிருந்தன.

மாவை சேனாதிராஜா,
ஆறுமுகம் கந்தையா பிரேமசந்திரன்,
கந்தையா சிவஞானம்,
அப்பாத்துரை விநாயகமூர்த்தி,
சூசைப்பிள்ளை சேவியா குலநாயகம்,
ஆறுமுகம் நடேசு இராசேந்திரன்,
கந்தையா அருந்தவபாலன்,
சிவஞானம் ஸ்ரீதரன்,
ஈஸ்வரபாதம் சரவணபவான்,
இராசரத்தினம் சிவசந்திரன்,
ஐங்கரநேசன் பொன்னுத்துரை,
முடியப்பு ரெமீடியஸ்

ஆகியோர் இந்தப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Monday, February 22, 2010

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களை இந்தியா பலிவாங்கியது – த.தே.கூட்டமைப்பு அதற்கு துணைபோனது

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

“இந்த யுத்தத்தை ஆரம்பித்தது இந்தியா தான் என்றுஜனாதிபதி மகிந்த ராஜப்ஷவே சொல்லியிருந்தார்.

உங்களுக்குத் தெரியும், மாவில் அறு பிரச்சினையிலிருந்ததான் இது தொடங்கியது.

அந்த நேரத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டமைப்பின் தூதுக்கழு இந்தியப் பிரதமரை சந்தித்தது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 இற்கும் அதிகமான வெளி நாடுகளுக்குச் சென்று யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த மூவரும் (இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா) இந்தியாவுக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

அவர்களின் குடும்பத்தினர் இந்தியாவில் தான் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு சென்றபோதும் மறந்தும் புதுடில்லிக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

எங்களால் இந்தியாவுக்கு சென்று அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளை சந்திக்க முடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் அந்த முயற்சியை எடுக்கவில்லை?

இதிலிருந்து இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவர்கள் செயற்படுகிறார்கள் என்பது புலனாகிறது.

அதுவரை இந்திய அரசாங்கத்திடம் எதுவும் கோராதவர்கள் 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திப்புக்கான கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக எமது உறுப்பினாகள் 14 பேர் கூடினார்கள். இவர்களில் 13 பேர் அங்கு போகக் கூடாது என எதிர்த்தார்கள்.

இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச் சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோ புதுடில்லிக்குச் சென்றனர்.

நான் இலண்டனிலிருந்து அவசரமாக வந்து, இந்தியா துரோகமிழைக்கிறது. செல்ல வேண்டாம் எனச் சொன்னேன்.

இந்த வேண்டுகோள் எனக்கூடாக விடுதலைப் புலிகளால் இவர்களுக்கு விடுக்கப்பட்டது.

புலிகளால் நேரடியாகவும் கூட அவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் அதனையும் மீறிச் சென்றார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளங்கள்.

இந்திய பொதுத் தேர்தலிலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டது.

இவர்களும் அதில் விரும்பி கலந்துகொண்டார்கள் என்பதுதான் எங்களுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இதைப்பற்றி வேண்டிய நேரத்தில் வாதாடவும் தயாராகவுள்ளோம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா உரையாற்றுகையில்,

சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன பார்வையாளராக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமையாக ஆக்கிரமித்து, படைவழியில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதன் ஊடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் பிராந்திய - உலக வல்லாதிக்க சக்திகளும் போட்ட கணக்குகளை தவிடு பொடியாக்கிவிடக்கூடிய மிகப்பெரும் சக்தியாக இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திகழ்கின்றார்கள் எனக்கூறின் அது மிகையில்லை. இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு மக்களாணை கோரி மேற்குலக தேசங்கள் தோறும் முன்னெடுக்கப்படும் பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை இலட்சிய உறுதியுடன் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்தி வருவது இதற்கு சான்றுபகர்கின்றது.

இவ்வாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகப் புகலிடத் தமிழீழ மக்கள் பரிணமித்து நிற்பதையிட்டு நாம் பெருமிதம் கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறிவைத்து மிகவும் நுண்ணியமான சதிவலைப் பின்னலை சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் வல்லாதிக்க சக்திகளும் வனையத் தொடங்கியிருப்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. 2002ஆம் ஆண்டில் நோர்வே அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மறுகணமே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காகக் களமிறக்கப்பட்ட பன்னாட்டு வலைப்பின்னலை ஒத்தவடிவில் இரண்டாவது சதிவலைப் பின்னல் வனையப்படுகின்றது. இதில் காட்சிகளும், பாத்திரங்களும் மட்டும் மாறியுள்ளனவே தவிர, இதன் இலக்கு என்பது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

தர்மத்தின்பால் நின்று நாம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பொழுதும், எம்மை ஏன் உலகம் புறக்கணித்தது? நீதியின்பால் நின்று போராடிய எமக்குத் துணைநிற்பதை விடுத்து எதற்காக அநீதியின்பால் நிற்கும் சிங்கள தேசத்திற்கு உலகம் துணைபோனது? எமது உறவுகள் வகைதொகையின்றி கொன்றுகுவிக்கப்பட்ட பொழுது ஏன் உலகம் பாராமுகம் காட்டியது? என்ற கேள்விகள் இன்றும்கூட எம்மவரிடையே விடைதெரியாத வினாக்களாகத் தொக்கிநிற்கின்றன.

உலக ஒழுங்கிற்கு இசைவாகத் தமது போராட்ட வடிவத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றியமைக்கத் தவறியமையே இவ்வாறான நிலைக்குக் காரணம் என்று கற்பிதம்செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்திக் குளிர்காய முற்படும் சிறுகூட்டம் ஒருபுறம் கதையளந்து கொண்டிருக்க, தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதிகட்டி, இராசதந்திரப் போராட்டம் என்ற புதிய மாயமானை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மீது ஏவிவிடுவதற்கான முனைப்புக்களில் மற்றுமொரு கும்பல் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள - இந்திய அரசுகளின் திரைமறைவு அனுசரணையுடன் செயற்படும் இக்கும்பல், மே 18இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கிளைகளை மையப்படுத்தி இயங்கிய புகலிடத் தமிழீழ சமூக அமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட காட்சி ஊடகங்கள் வாயிலாக புகலிடத் தமிழீழ மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்தல் போன்ற நாசகார நடவடிக்கைகளை கனக்கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும், இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானம் திகழ்வதோடு, அதனை நகர்த்திச் செல்வதற்காக வலுவான அச்சாணியாகத் தமிழீழ தாயகம், தமிழீழ தேசியம், தமிழீழ தன்னாட்சியுரிமை ஆகிய முப்பரிமாணங்களைக் கொண்ட திம்புக் கோட்பாடு விளங்குகின்றது. இந்த வகையில், பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்ட பிளவுபடாத – ஒன்றுபட்ட தமிழீழ தாயகம், மதபேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழீழ தேசியம், இறையாண்மையை நிலைநாட்டும் தன்னாட்சியுரிமை என்ற மூன்று வலுவான தளங்களில் அர்த்தபரிமாணம் கொண்டுள்ள தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தி, கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றது.

ஒருபுறம், முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக சிங்களம் மார்தட்டிக்கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் பலத்துடன் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம்பெற்றுவிடக் கூடும் என்ற அச்சவுணர்வில் இருந்து அது நீங்கிவிடவில்லை. இவ்வாறான அச்சவுணர்வு சிங்கள அரசை மட்டுமன்றி இந்தியப் பேரரசையும் பீடித்திருப்பதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறான பின்புலத்தில் இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணையை மேற்குலக சனநாயகப் பொறிமுறைகள் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்துவது சிங்கள - இந்திய அரசுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக மாறியிருப்பதே மெய்யுண்மையாகும்.

இதுவே தமிழீழத் தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களை சிறுமைப்படுத்தியும், அதற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைத்தும் தமது நாசகார நடவடிக்கை இயந்திரங்களை சிங்கள - இந்திய அரசுகள் இயக்கி வருவதற்காக நதிமூலமாகத் திகழ்கின்றது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்ற காலநதியை நகர்த்திச் செல்லும் சாரதிகளாக வகிபாகமெடுத்துள்ள புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைப் பலவீனப்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்களுக்கு மாற்றீடான மிதவாதக் கட்டமைப்பு ஒன்றை நிறுவி, அதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிப்பதே சிங்கள - இந்திய அரசுகள் வனையும் சதிவலைப் பின்னலின் மைய இலக்காகத் திகழ்கின்றது.

இதன் முதற்கட்டமாக தமிழீழ தாயக பூமியை மத அடிப்படையில் கூறுபோட்டுத் துண்டாடுவதற்காக கருத்துக்களை விதைத்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் - பரப்புரைப் பணிகளை மேற்குலக சட்டவரையறைகளுக்குள் முடக்குதல், ஆயுதப் போராட்டத்தை அருவருக்கத் தக்க விடயமாக சிறுமைப்படுத்தும் கருத்துக்களைப பரப்புதல் போன்ற செயற்பாடுகளை சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர். புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று தமக்குத் தாமே பட்டமளிப்புச் செய்துகொள்ளும் இவர்கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இலட்சியங்களையும் சிதறடிப்பதை குறியாகக் கொண்டு செயற்படுவதை இவர்களின் அண்மைக்கால அறிக்கைகளும், நடவடிக்கைகளும் புலப்படுத்துகின்றன.

பிராந்திய – உலக வல்லாதிக்க சக்திகளின் கவசப் பாதுகாப்பில் இருந்து எழுந்த படைவலிமையின் ஊடாக இன்று தமிழீழ தாயக பூமியை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ள பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இக்கணம் வரை அழிக்கப்பட முடியாத சக்தியாகவே தொடர்ந்தும் விளங்குகின்றது. நிலங்களையும், தனது இயங்கு தளத்தையும் ஒரு விடுதலை இயக்கம் இழந்தாலும், அதன் அரசியல் இலட்சியங்களும், போராட்ட வடிவமும், மக்களின் உறுதுணையும் அழிக்கப்படாத வரைக்கும் அது தனது பலத்தை இழந்துவிடுவதில்லை. இந்தப் பண்பியல்பே இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான அடித்தளமாகவும் திகழ்கின்றது.

இதேபோன்று, தமிழீழ தேசியத் தலைமையை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிக் கொள்கின்ற பொழுதும், உலகத் தமிழர்களை இயக்கும் மாபெரும் இயங்கு சக்தியாகத் தொடர்ந்தும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்வதை நிகழ்கால சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன. அந்த மாபெரும் சக்தி மீது அசையாத நம்பிக்கை கொண்ட தேசமாகத் தமிழீழ தேசம் திகழ்வதை நிதர்சனப்படுத்தும் சம்பவங்களாகத் தமிழீழத்தில் நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் மீதான புறக்கணிப்பும், புகலிட தேசங்களில் நிகழ்ந்தேறிய தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் ஏகமனதாக வழங்கப்பட்ட மக்களாணையும் விளங்குகின்றன.

இவ்வாறாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறியைப் பாதுகாப்பது இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் முதன்மைக் கடப்பாடாகத் திகழ்கின்றது. இதன் முதற்கட்டமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அரசியற்களத்தைக் கூறுபோட்டு சிதறடிப்பதை இலக்காகக் கொண்டு இயங்கும் கும்பல்களை விழிப்புணர்வுடன் அடையாளம்கண்டு, இவர்களை அந்நியப்படுத்தி, நிரந்தரமாக ஓரங்கட்டுவதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் முன்னுள்ள மிகச்சிறந்த தெரிவாகும். இதனைவிடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம்பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத்தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! (தொடரும்)

-சேரமான்
obama2050@gmail.com

ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.

இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

இன்று 22-02-2010 இந்தியப் பாராளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது.
பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் -

“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்காள நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.

இலங்கை விடயத்தில் இன்று இந்தியாவை ஆளுவோர் இவ்வாறு போடுகின்ற இரட்டை வேடம் ஒன்றல்ல. இரண்டல்ல. பற்பல .

1) ஈழத் தமிழர்களுக்கு உதவி. அதே நேரத்தில் இலங்கை அரசுடன் நட்பு

2) ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு. அதே நேரத்தில் பொன்சேகா மீதும் கரிசனம்

3) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு டெல்லியிலேயே அலுவலகம் அமைத்து கொடுத்து, தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டு கண் போல் பார்த்துக் கொள்ளுதல். அதே நேரத்தில் தன் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப் பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்.

ஆறரைக் கோடிச் சொந்தங்கள் நாம் அருகிலிருந்தும், இந்திய உரலுக்கும், இலங்கை உலக்கைக்கும் இடையில் இடிபட்டுச் சாகிறதே நம் தொப்புள் கொடி உறவினம் ... யாரிதற்கு காரணம் ?

தட்டிக் கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் காங்கிரசுக்காரன் காலை நக்கிக் குடிப்பது நீயா? நானா? எனப் போட்டியிடுகின்றன.

அந்தத் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நத்திப் பிழைப்பது நீயா? நானா? என தமிழீழ ஆதரவு கட்சிகள் என சொல்லிக்கொள்பவை போட்டியிடுகின்றன.

தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் அதிகமாய்ச் சத்தம் போடுவது நீயா? நானா? என போட்டியிடுகின்றன.

தமிழ் நாட்டுத் தலைவர்களின் துரோகத்தையும் , சந்தர்ப்ப வாதத்தையும் , ஒற்றுமையின்மையையும் , கையாளாகத் தனத்தையும் புரிந்துக்கொண்டதால் தான், தன்னையே எரித்துக்கொண்ட மாவீரன் முத்துக்குமார் தன்னுடைய மரணசாசனத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.

தமிழீழ மக்களே தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது ஆனால் என்ன செய்வது? உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே!

ஆம் உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் ஆண்டுக்கு ஒரு முறைதான் பேசுவார். ஆனால் உலகமோ ஆண்டு முழுதும் அந்த ஒப்பற்ற தலைவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும்

ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்களோ ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே யிருகிறார்கள். அதனால் தான் ஆண்டு முழுவதும் ஈழத் தமிழர்களும் இங்குள்ள மீனவர்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்!

சீதையின் மைந்தன்
ஆசிரியர்
கரிகாலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய முகம்கள் பல களத்தில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகம்கள் அறிமுகப் படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக அறி முகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகம்களை களத்தில் இறக்கியுள்ளனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தமிழரசுக் கட்சி செயலாளர் குலநாயகம், சட்டத்தரணி ரெமேடியஸ், யாழ்.பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், யாழ்.பல்கலைக் கழக மாணவன், நல்லூர் ஆசிரியர் ஒருவர், சாவகச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சியின் பாடசாலை அதிபர், தமிழர சுக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பான இறுதி முடிபு இன்று ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்கும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியுடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் உத்தியை அரசு உட்பட பல் வேறு தரப்பினரும் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றினை கருத்தில் கொண்டு யாழ். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்தல் களத்தில் ஈடுபடுத்த கூட்டமைப்பு முடிபு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சிவாஜிலிங்கத்தின் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆளும் தரப்பினர் எவரும் வெற்றி கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது

Friday, February 19, 2010

இலங்கையில் கூகிள் இணையத்தளம் முடக்கப்படும் சாத்தியம்

இலங்கை அரசுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரானவை என சில இணையத்தளங்களை இலங்கை அரசு குறிப்பிட்டுவருகிறது. அந்த தளங்களை இலங்கையில் முடக்குவது குறித்து தகவல்தொடர்பு ஆணையம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன. ஆனால் பொதுத்தேர்தல் நடந்து அதன் முடிவு வெளியாகும்வரை இவ்வாறான இணையங்களை முடக்கும்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் இந்த ஆண்டின் ஒரு செய்தித்தளத்தை 2,00,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்று நிரூபித்தால் மட்டுமே அரச தகவல் திணைக்களத்தில் ஊடக அனுமதியை அந்த செய்தித்தளத்துக்கு வழங்குவதென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேபோன்ற ஒரு ஒழுங்குமுறையை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தபோதும் அது கடுமையாக பின்பற்றப்படவில்லையாம்.

எனவே இப்போதைய ஒழுங்குமுறைகளுக்கு அமையாத செய்தித்தளங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊடக அனுமதியை ரத்துசெய்யும்படி ஊடக திணைக்களத்துக்கு உத்தரவு கிடைத்துள்ளது. அத்தோடு இலங்கையில் இத் தளங்களைப் பார்வையிட முடியாது.

மேலும் புலனாய்வுப் பிரிவுகளால் கூகிள் தளத்தை கண்காணிக்க முடியவில்லை என்ற காரணத்தால் இலங்கையில் கூகிள் வலைத்தள தேடுபொறியை முடக்கும் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ளன. சீனாவும் கூகுள் தளத்தை தனது நாட்டில் கட்டுப்படுத்திவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் அமெரிக்க கம்பனி என்பதால் சீனா இதன் மீது நம்பிக்கை இல்லை என்ற தோற்றப்பாட்டை வெளுக்கொண்டுவர முயல்வதாகச் சொல்லப்படுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. எதை மக்கள் பார்க்கலாம் பார்க்கக் கூடாது என்பதை அரசாங்கமே முடிவு எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

இராணுவச் சட்டத்தின் 57வது பிரிவின் படி பல்வேறு அக்னிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டிவராக சரத் பொன்சேகா


சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு குரல் கொடுக்க முடியாத சர்வதேசம்; எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய சரத் பொன்சேகா இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்ததான பொதுவான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதாகியிருக்கிறார்.

இவரது கைதும் அதற்கான காரணங்களும் அரசாங்கத்தினால் கூறப்படுவது போன்று சரியானதாக இருக்குமா என்பது கேள்வியே. ஆனால் இவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் கையாண்டிருக்கும் வழிமுறைகள் வெளியுலகினால் விமர்சிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.

“சரத் பொன்சேகா அரசியலில் நிலைத்திருக்க விரும்பினால் பல்;வேறு அக்னிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைக் பொறுத்தே அரசின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் அமையப் போகின்றன.” என்று ஜனாதிபதித் தேர்திலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்த பின்னர்- இரு வாரங்களுக்கு முன்னர் இதே பத்தியில் கூறப்படட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சரத் பொன்சேகா அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்திருந்தால் பெரும்பாலும் அவருக்கு இன்றைய நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்காது.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்றதும், தனது பாதுகாப்புக்கு அரசியலில் நீடிப்பது அவசியமானது எனக் கருதியிருந்தார். அதுமட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடக் கூடிய பல கருத்துகளை தெரிவித்ததன் விளைவாகவே அவரது கைது இடம்பெற்றிருக்கிறது.

சரத் பொன்சேகாவை தமக்குச் சவாலான ஒருவராக மகிந்த ராஜபக்ஸ கருதியிருந்தாலோ- அல்லது தனக்கு ஆபத்து என்று கருதியிருந்தாலோ அவரைத் தேர்தலில் போட்டியிடாமலே செய்திருக்க முடியும். ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை ஏற்காமல் இரண்டு வாரங்கள் இழுத்தடித்திருந்தாலே அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ஆனால் அப்படிச் செய்ய அரசாங்கம் முனையவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள அவர் முடிவு செய்திருந்தால் பல்வேறு சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதே உண்மை.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம் இப்போது இலங்கையில் புதியதொரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளது.சர்வதேச ரீதியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத் பொன்சேகாவை விடுவிக்கும்படி எந்தவொரு நாடுமே அழுத்தம் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஐ.நா செயலர் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசியிருந்தார். ஆனால் சரத் பொன்சேகாவை விடுவிக்கும்படி அவர் கூறவில்லை. அது போலவே பல நாடுகள் இதுகுறித்து அரசாங்கத்துடன் பேசியிருந்தன. எதுவுமே சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.

அரசியலில் நீடித்திருந்தால் எந்த வெளிநாடுகளின் மூலம் தனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று கருதினாரோ அவையெல்லாம் இன்று எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. சரத் பொன்சேகாவின் கைதுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள காரணம் வெளிநாடுகளால் வாய்திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கவலை தெரிவித்தது, இந்தியா கவலை வெளியிட்டது- ஆனால் எந்தவொரு கட்டத்திலேனும் அவர்கள் சரத் பொன்சேகாவை விடுவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றும் படி கோரவில்லை. சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும்படியும், நீதியான முறையில் விசாரணைகளை நடத்தும் படியும் தான் சர்வதேச சமூகம் கோரியிருக்கிறது.

மியன்மரில் ஆங் சாங் சூஜியை கைது செய்தபோது உலகநாடுகள் கண்டனம் செய்து கருத்து வெளியிட்டது போன்ற சாதகமான நிலை சரத் பொன்சேகாவுக்கு இருக்கவில்லை.

இதற்குக் காரணம் சரத் பொன்சேகா மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் கோணம் வித்தியாசமானது. அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைது செய்ததாகக் காட்டிக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. அது அவருக்கு சர்வதேச ரீதியாக ஆதரவைப் பெற்றுக் கொடுத்து விடும் என்ற அச்சம் அரசுக்கு இருக்கவே செய்தது. அதனால் தான் எவருமே வாய்திறக்க முடியாத வகையில் இராணுவச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம்.

இராணுவத் தளபதியாக இருந்த போது செய்த குற்றங்கள் தொடர்பாகவே அவரது கைது இடம்பெற்றிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. பாதுகாப்புச் சபையின் இரகசியங்களை வெளியிட்டது, ஆயுதக் கொள்வனவுகளில் ஊழல் செய்தது, படையினருக்குத் துரோகம் இழைத்தது, அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தது, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தது என்று குற்றசாட்டுகளின் பட்டியல் நீளமாக இருக்கிறது.

அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துகளை வெளியிடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குற்றசாட்டை சரத் பொன்சேகா மீது சுமத்துவதையும் காண முடிகிறது. ஆனால் அவர் மீது எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது- எப்படி அவருக்குத் தீர்ப்பு அமையப் போகிறது என்ற கேள்விகளுக்கு சரியான விடை இன்னமும் இல்லை.

இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை செய்த பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதா இல்லையா என்று முடிவெடுக்கப் போவதாகத் தகவல். அதேவேளை இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள்தண்டனையோ- மரணதண்டனையோ கூட விதிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர்

பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவோ அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையை இராணுவ நீதிமன்றம் மூலம் வழங்க முடியும் என்று கூறியிருக்கிறார். அதேவேளை ஓய்வுபெற்ற அவரை எப்படி இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று எழுந்த கேள்விகளுக்கும் இராணுவச் சட்டத்தை தூக்கி காண்பித்துப் பதில் கொடுத்திருக்கிறது அரசாங்கம். இராணுவச் சட்டத்தின் 57வது பிரிவின் படி ஓய்வுபெற்ற ஆறு மாதங்களுக்குள் எந்தவொரு அதிகாரி மீதும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை நடத்த முடியும். சரத் பொன்சேகா ஓய்வுபெற்று ஆறு மாதங்கள் ஆகவில்லை. ஆனால் அவர் இராணுவச் சடடங்களின் கீழ் கடைசி நேரத்தில் பதவியில் இருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

கடந்த ஜுலை 31ம் திகதி அவர் இராணுவ சேவையில் இருந்து விலகி- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார். அவர் மீது எப்படி இராணுவச் சட்டத்தின கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரணில். எனினும் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்து- சேவை நீடிப்பைப் பெற்றபடியே தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா விடயத்தில் அவரை எந்தவகையிலும தப்பவிடக் கூடாது என்ற தீர்மானத்துடனேயே அரசாங்கம் நடவடிக்கைளில் இறங்கியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. அரைகுறையாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதானால் அதை முன்னரே செய்திருக்க முடியும். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதால் தான் மிகவும் நிதானமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இது அரசாங்த்துக்கு சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரத் பொன்சேகா விடயத்தில் தலையிடுவதற்கு- அவரது விடுதலை குறித்து அழுத்தங்களைக் கொடுப்பதற்கு வெளிநாடுகளால் முடியாது போனாலும் அவர் மீதான இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்.போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் எதிர்காலம் குறித்து சர்வதேச ரீதியாக கட்டப்பட்டிருந்த ஒரு கற்பனைக் கோட்டையின் அத்திவாரத்தையே இப்போதைய சம்பவங்கள் அசைக்க ஆரம்பித்து விட்டன.
சரத் பொன்சேகா மீதான நடவடிக்கை சரியா தவறா என்ற விடயங்கள் ஒரு புறத்தில் இருக்க, அவரது கைது ஒரு குழப்பத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது உண்மை.அதுமட்டுமன்றி இது போரைக் காரணம் காட்டி இராணுவம் அபரிமிதமாக வளர்த்தெடுக்கப்பட்டதன் பெறுபேறு என்பது மிகையானதொரு கருத்தாக இருக்க முடியாது.

- கொழும்பிலிருந்து சத்திரியன் -

எதிர்வரும் தேர்தலில் எதை தமிழர் ஆதரிப்பர்: ஜேயானந்தமூர்த்தி விளக்கம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜேயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்: 'கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்தே போட்டியிட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழீழக் கொள்கைக்கு ஆணை வழங்கியிருந்தனர். தற்போது தற்காலிகமாக ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் எமது அரசியல் ரீதியான செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இதைக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்கால் சம்பவத்திற்குப் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டதாக கூட்டமைப்பில் உள்ள சிலர் நினைக்கின்றனர். அதனால் தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் பற்றி கதைக்க முற்பட்டுள்ளனர். எமது தேசியப் போராட்டம் பல அர்ப்பணிப்புகள் தியாகம் என்பனவற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ள முயலக் கூடாது. தற்போது சுயநல அரசியலை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை திசைதிருப்பும் வேலை அக்கட்சியில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் என விளக்கம் கூற இவர்கள் முற்படலாம். அதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்காமல் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின்னர் இது பற்றிப் பேசலாம் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்கள் முன் கூற முற்படுவது தமது பதவியைப் பெறுவதற்கே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது எமது தேசியத்திற்கும் கடந்த 30 வருடகாலமாக உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களுக்கும் எமது இனத்திற்கும் செய்யும் துரோகமாககும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வரலாறு இவர்களை என்றுமே மன்னிக்கப்போவதில்லை' என்று ஜேயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில்: 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தமிழீழக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக அமைக்கபட்ட கட்டமைப்பு. அதனை ஏற்றுக் கொண்டே அதில் இணைந்துள்ள தமிழ் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் அரசியல் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை என்றுமே முன்வைக்கவில்லை என கூறுவது தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும். அது மாத்திரமின்றி என்ன கொள்கைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதன் கொள்கையை கொச்சைப்படுத்தும் செயலாகவுமே பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவின் நலனுக்காக இவர்கள் செயற்படாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானதாகவும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஜேயானந்தமூர்த்தி

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமி;ழ் தேசியக் கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது. அவர்கள் யாருக்கு இடம் கொடுப்பதில்லை என்பதை பார்த்தால் அதிகமானோர் தேசியத்தோடு கொள்கையை இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாறாக கடந்த காலங்களில் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வியாக்கியானம் பேசியவர்களுக்கும் மாற்றுக் கொள்கையுடன் இருந்து செயற்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். தற்போது விடுதலைப்புலிகளுடன் ஆதரவு இல்லாதவர்களே கட்சியில் உள்ளனர் என்பதை காட்டும் செயற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியதாக அது அமைய வேண்டும். இல்லாவிட்டால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எத்தகைய நடவடிக்கைகளும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெனில் புலம் பெயர் மக்கள் எமது தேசிய விடுதலைப்போராட்டத்திலும் சரி தமிழர்களின் அரசியல் கர்வுகளிலும் சரி ஒரு பின்புலமாக உள்ளனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.' என ஜேயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும்.




அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம்.

இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது.

விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீரியம் அனைத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்தது.

அதுவரைக்கும் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய அரசியல் நிகழ்சிநிரலின் ஒரு பகுதியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து ஓர் அரசியல் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்மைப்பு அது, உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வந்தது.

அன்றைய சூழலில் எதிரியின் பிரித்தாளும் தந்திரத்தை உடைக்கும் நோக்கிலேயே புலிகளும் ஜனநாயகத் தளத்திலும் தமக்கான ஒரு குரலை ஒலிக்கச் செய்தனர்.

அன்றைய சூழலில் இது ஒரு சிறந்த தந்ரோபாயமாகவே இருந்தது.

எப்போதும - அவ்வப்போதைய சவால்களை கடத்தல் என்னும் அர்த்தத்திலேயே தந்திரோபாய நகர்வுகளை மட்டுப்படுத்தும் புலிகள், கூட்டமைப்பை வலுவானதொரு மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பாக முன்னெடுக்க முயலவில்லை. தமக்கான தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பையும் கூட்டமைப்பிற்கு வழங்கவில்லை.

இந்த நிலைமை கூட்டமைப்பை வெறுமனே புலிகளுக்கான முகவர் அமைப்பாக மட்டுப்படுத்தியது.

இன்று - விடுதலைப் புலிகள் இலங்கை அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் சூழலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் முதலாக ஜனநாயக வரம்பிற்குள் தனித்துவமான ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே - உறுப்பினர்கள் மத்தியில் கருத்தொற்றுமையற்றுப் பிளவுபட்டுக் கிடந்த கூட்டமைப்பு - இறுதியில் குறிப்பிட்ட சிலரை வெளியேற்றுவதன் மூலம் தம்மை மீள நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

ஆனால் - கூட்டமைப்பினர் இது தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் சில இருக்கின்றன.

அறியக் கிடைக்கும் தகவல்களின் படி கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டோர் தீவிர தமிழ் தேசியக் கருத்து நிலையை முன்னிறுத்தி தனியாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது.

தற்போதைய இலங்கை அரசியல் சூழலில் எந்தவொரு அமைப்பும் தீவிர தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னிறுத்தி இயங்குவது சாத்தியமற்ற ஒன்று எனினும், அவ்வாறு இயங்க முற்படுவோர் துணிச்சலானவர்களாகவும் தமது கொள்கையிலிருந்து தடம்புரளாதவர்களாகவும் சாதாரண மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்படலாம்.

எனவே - அவர்கள் தேர்தலில் வெல்லுவார்களா இல்லையா என்பது இங்கு விடயமல்ல; தமிழ் மக்களுக்கான அரசியல் மேலும் பிளவுறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்பதே இங்கு கருத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.

கொழும்பின் இராஜதந்திரம் பற்றி நம்மை விட வேறு எவரும் அறிந்துவிடப் போவதில்லை; ஆனாலும், நாம் அது பற்றி எந்தளவு தூரம் சிந்தித்துச் செயற்படுகிறோம் என்பது கேள்விக் குறியே!

மகிந்த ராஜபக்ச இரு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தேர்தலை அறிவித்தார். இது வெறுமனே அவரது ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவா, அல்லது தமிழரின் அரசியலையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவா?

நமது அரசியல் சூழலில் ஏற்பட்ட குழப்பங்கள் ஒரு நிலையை அடைவதற்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாதளவிற்கு அவசர தேர்தலொன்றை தமிழ்த் தலைமை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருகிறது.

மக்கள் முள்ளிவாய்க்கால் அனுபவங்களிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை முழுமையாக மீள் ஒழுங்கமைத்துக் கொள்ள அவகாசமற்ற சூழலிலேயே இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

இது கூட ஏன் கொழும்பின் ஒரு இராஜதந்திரமாக இருக்கக் கூடாது?

தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் அரசியலானது கொழும்பின் பிரித்தாளும் மூளைக்கு மேலும் ஆட்படக் கூடும். தமிழ்த் தேசிய அரசியலை மிதவாத தமிழ்த் தேசிய அரசியல் - தீவிர நிலைப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் என்ற வகையில் கொழும்பு பிரித்தாளுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இதனை எந்தளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பிரிவினர் உணர்ந்திருக்கிறனர் என்று தெரியவில்லை.

எனவே - உடனடியாக - தாம் ஏன் சிலரை வெளியேற்றுகிறோம்...? அவர்களை வெளியேற்றுவது எதிர்கால கூட்டமைப்பின் மக்கள் நலன் சார் அரசியலுக்கு எந்த வகையில் அவசியமானது...? அவர்களை வெளியேற்றாவிட்டால் எதிர்காலத்தில் என்ன வகையான சவால்களை கூட்டமைப்புச் சந்திக்க நேரிடும்..? போன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உண்டு.

இதனை கூட்டமைப்பு விரைந்து செயற்படுத்த வேண்டும்.

இன்று விலக்கப்படவுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கடந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் தங்களது தீவிர விசுவாசிகள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள், இதன் காரணமாகவே அவர்கள் மக்களால் பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறானவர்கள் தீடீரென நீக்கப்படும் போது மக்கள் மத்தியில் இது குறித்து குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு அத்துடன் அவர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடுமிடத்து, தாங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்தாலேயே ஓரங்கட்டப்படுவதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.

விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்த வரைக்கும் தம்முடன் இணைந்திருந்து விட்டு அவர்கள் இல்லை என்றதும் தம்மைப் புறந்தள்ளுவதாக அவர்கள் பிரச்சாரப்படுத்தலாம்.

எனவே - கூட்டமைப்பு தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சனைகளையும் அவ்வாறானதொரு அரசியலை முன்னெடுப்பது தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்பதையும், அகம் - புறம் சார்ந்து விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு புறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொள்கை நிலைப்பட்டுப் பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் அது சார்ந்த அரசியலும் உள்ளது.

மறுபுறம் - கடந்த காலத்தில் புலிகளைக் காரணம் காட்டி நாட்டை விட்டு வெளியேறிய சக்திகள் அனைத்தும் மீண்டும் தம்மை அரசியலில் உறுதிப்படுத்துவதற்காக களமிறங்கியிருக்கும் சூழல், மேலும் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பிறிதொரு அணியாக இறங்கவுள்ள நிலைமை உள்ளது.

இப்படியாக ஒரு வகையில் குழம்பிய குட்டையாகக் காட்சியளிக்கிறது தமிழ் மக்களின் அரசியல். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களே வெற்றியாளர்களாகக் கொண்டாடப்படுவர். இதிலும் வெல்லப்போவது சிங்கள ராஜதந்திரம் தானா?

ஆபிரிக்க மார்சியரான அமில்கர் கப்ரால் தனது ஏகாதிபத்தியம் தொடர்பான உரையாடல்களில் ஆபிரிக்க பழமொழியொன்றைப் பயன்படுத்துவார்.

அதாவது ‘அரிசி பானைக்குள்ளே தான் வேகிறது’ என்பது தான் அப் பழமொழி.

ஏகாதிபத்தியம் பற்றி உரைப்போர் அதற்கான இடைவெளி நம் மத்தியில் தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்னும் அர்த்தத்திலேயே இந்த மொழியை பயன்படுத்துவார் அவர்.

நமது அரசியல் பலவீனமடைந்து கிடக்கிறது என்று கூக்குரல் இடுவோர் அதற்கான இடைவெளிகளை நாமே ஏற்படுத்திக் கொடுகிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்.

நாம் பலவீனமடைவதற்கான இடைவெளி நம் மத்தியில் இருக்கும் போது நாம் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருப்பதே நமது அரசியலாக இருக்கும்.

எனவே நம்மை சிதைக்கும் வகையிலான இடைவெளிகளை அகற்றுவது குறித்தே தற்போது தமிழ்த் தேசிய சக்திகள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இல்லையேல் மீண்டும் பழைய கதை தான்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மீண்டும் தவறிழைக்குமாயின் - சமூகத்தில் பணியாற்றும் கருத்துருவாக்கப் பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஈவிரக்கமற்ற முறையில் விமர்சிக்க வேண்டும்.

* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமாவார். கட்டுரை பற்றிய கருத்து எழுதுவதற்கு: arinanthan@gmail.com

இந்திய முதலீட்டை வரவேற்றுள்ள யாழ். வர்த்தகர்கள்

இந்திய முதலீடுகளை யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தினர் வரவேற்க தயாராகவும், விருப்பத்துடனும் இருப்பதாக இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதி மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருக்கின்ற போதும், யாழ். வர்த்தகர்கள் இந்திய முதலீட்டுக்கான ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியாவே உதவி புரிந்ததாகவும், நிலையான ஒரு அரசியல் தீர்வுக்கு இந்தியா முறையாக செயற்படவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் கருதுகின்றனர்.

அத்துடன் தமிழ் மக்கள் வெறுக்கும் அளவுக்கு, தமிழக முதல்வர் மு. கருணாநிதி உச்சக் கட்டத்தில் போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி தமிழ் மக்களை ஏமாற்றியதாகவும் அவர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தின் தலைவர் ஆர். ஜெயகுமார், இந்திய முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களையும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என அந்த செய்தி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய மற்றும் யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தக நலவாய மாநாடு ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 27 – 29ம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமையாக ஆக்கிரமித்து, படைவழியில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதன் ஊடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் பிராந்திய - உலக வல்லாதிக்க சக்திகளும் போட்ட கணக்குகளை தவிடு பொடியாக்கிவிடக்கூடிய மிகப்பெரும் சக்தியாக இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திகழ்கின்றார்கள் எனக்கூறின் அது மிகையில்லை. இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு மக்களாணை கோரி மேற்குலக தேசங்கள் தோறும் முன்னெடுக்கப்படும் பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை இலட்சிய உறுதியுடன் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்தி வருவது இதற்கு சான்றுபகர்கின்றது.

இவ்வாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகப் புகலிடத் தமிழீழ மக்கள் பரிணமித்து நிற்பதையிட்டு நாம் பெருமிதம் கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறிவைத்து மிகவும் நுண்ணியமான சதிவலைப் பின்னலை சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் வல்லாதிக்க சக்திகளும் வனையத் தொடங்கியிருப்பதை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. 2002ஆம் ஆண்டில் நோர்வே அரசின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மறுகணமே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காகக் களமிறக்கப்பட்ட பன்னாட்டு வலைப்பின்னலை ஒத்தவடிவில் இரண்டாவது சதிவலைப் பின்னல் வனையப்படுகின்றது. இதில் காட்சிகளும், பாத்திரங்களும் மட்டும் மாறியுள்ளனவே தவிர, இதன் இலக்கு என்பது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

தர்மத்தின்பால் நின்று நாம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பொழுதும், எம்மை ஏன் உலகம் புறக்கணித்தது? நீதியின்பால் நின்று போராடிய எமக்குத் துணைநிற்பதை விடுத்து எதற்காக அநீதியின்பால் நிற்கும் சிங்கள தேசத்திற்கு உலகம் துணைபோனது? எமது உறவுகள் வகைதொகையின்றி கொன்றுகுவிக்கப்பட்ட பொழுது ஏன் உலகம் பாராமுகம் காட்டியது? என்ற கேள்விகள் இன்றும்கூட எம்மவரிடையே விடைதெரியாத வினாக்களாகத் தொக்கிநிற்கின்றன.

உலக ஒழுங்கிற்கு இசைவாகத் தமது போராட்ட வடிவத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றியமைக்கத் தவறியமையே இவ்வாறான நிலைக்குக் காரணம் என்று கற்பிதம்செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்திக் குளிர்காய முற்படும் சிறுகூட்டம் ஒருபுறம் கதையளந்து கொண்டிருக்க, தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதிகட்டி, இராசதந்திரப் போராட்டம் என்ற புதிய மாயமானை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மீது ஏவிவிடுவதற்கான முனைப்புக்களில் மற்றுமொரு கும்பல் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள - இந்திய அரசுகளின் திரைமறைவு அனுசரணையுடன் செயற்படும் இக்கும்பல், மே 18இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கிளைகளை மையப்படுத்தி இயங்கிய புகலிடத் தமிழீழ சமூக அமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட காட்சி ஊடகங்கள் வாயிலாக புகலிடத் தமிழீழ மக்களிடையே குழப்பத்தைத் தோற்றுவித்தல் போன்ற நாசகார நடவடிக்கைகளை கனக்கச்சிதமாக நகர்த்தி வருகின்றது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும், இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானம் திகழ்வதோடு, அதனை நகர்த்திச் செல்வதற்காக வலுவான அச்சாணியாகத் தமிழீழ தாயகம், தமிழீழ தேசியம், தமிழீழ தன்னாட்சியுரிமை ஆகிய முப்பரிமாணங்களைக் கொண்ட திம்புக் கோட்பாடு விளங்குகின்றது. இந்த வகையில், பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்ட பிளவுபடாத – ஒன்றுபட்ட தமிழீழ தாயகம், மதபேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழீழ தேசியம், இறையாண்மையை நிலைநாட்டும் தன்னாட்சியுரிமை என்ற மூன்று வலுவான தளங்களில் அர்த்தபரிமாணம் கொண்டுள்ள தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தி, கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றது.

ஒருபுறம், முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக சிங்களம் மார்தட்டிக்கொண்டாலும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் பலத்துடன் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம்பெற்றுவிடக் கூடும் என்ற அச்சவுணர்வில் இருந்து அது நீங்கிவிடவில்லை. இவ்வாறான அச்சவுணர்வு சிங்கள அரசை மட்டுமன்றி இந்தியப் பேரரசையும் பீடித்திருப்பதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறான பின்புலத்தில் இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணையை மேற்குலக சனநாயகப் பொறிமுறைகள் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்துவது சிங்கள - இந்திய அரசுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக மாறியிருப்பதே மெய்யுண்மையாகும்.

இதுவே தமிழீழத் தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களை சிறுமைப்படுத்தியும், அதற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைத்தும் தமது நாசகார நடவடிக்கை இயந்திரங்களை சிங்கள - இந்திய அரசுகள் இயக்கி வருவதற்காக நதிமூலமாகத் திகழ்கின்றது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்ற காலநதியை நகர்த்திச் செல்லும் சாரதிகளாக வகிபாகமெடுத்துள்ள புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைப் பலவீனப்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்களுக்கு மாற்றீடான மிதவாதக் கட்டமைப்பு ஒன்றை நிறுவி, அதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிப்பதே சிங்கள - இந்திய அரசுகள் வனையும் சதிவலைப் பின்னலின் மைய இலக்காகத் திகழ்கின்றது.

இதன் முதற்கட்டமாக தமிழீழ தாயக பூமியை மத அடிப்படையில் கூறுபோட்டுத் துண்டாடுவதற்காக கருத்துக்களை விதைத்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் - பரப்புரைப் பணிகளை மேற்குலக சட்டவரையறைகளுக்குள் முடக்குதல், ஆயுதப் போராட்டத்தை அருவருக்கத் தக்க விடயமாக சிறுமைப்படுத்தும் கருத்துக்களைப பரப்புதல் போன்ற செயற்பாடுகளை சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகள் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர். புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று தமக்குத் தாமே பட்டமளிப்புச் செய்துகொள்ளும் இவர்கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இலட்சியங்களையும் சிதறடிப்பதை குறியாகக் கொண்டு செயற்படுவதை இவர்களின் அண்மைக்கால அறிக்கைகளும், நடவடிக்கைகளும் புலப்படுத்துகின்றன.

பிராந்திய – உலக வல்லாதிக்க சக்திகளின் கவசப் பாதுகாப்பில் இருந்து எழுந்த படைவலிமையின் ஊடாக இன்று தமிழீழ தாயக பூமியை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ள பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இக்கணம் வரை அழிக்கப்பட முடியாத சக்தியாகவே தொடர்ந்தும் விளங்குகின்றது. நிலங்களையும், தனது இயங்கு தளத்தையும் ஒரு விடுதலை இயக்கம் இழந்தாலும், அதன் அரசியல் இலட்சியங்களும், போராட்ட வடிவமும், மக்களின் உறுதுணையும் அழிக்கப்படாத வரைக்கும் அது தனது பலத்தை இழந்துவிடுவதில்லை. இந்தப் பண்பியல்பே இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கான அடித்தளமாகவும் திகழ்கின்றது.

இதேபோன்று, தமிழீழ தேசியத் தலைமையை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிக் கொள்கின்ற பொழுதும், உலகத் தமிழர்களை இயக்கும் மாபெரும் இயங்கு சக்தியாகத் தொடர்ந்தும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்வதை நிகழ்கால சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன. அந்த மாபெரும் சக்தி மீது அசையாத நம்பிக்கை கொண்ட தேசமாகத் தமிழீழ தேசம் திகழ்வதை நிதர்சனப்படுத்தும் சம்பவங்களாகத் தமிழீழத்தில் நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் மீதான புறக்கணிப்பும், புகலிட தேசங்களில் நிகழ்ந்தேறிய தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களில் ஏகமனதாக வழங்கப்பட்ட மக்களாணையும் விளங்குகின்றன.

இவ்வாறாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறியைப் பாதுகாப்பது இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் முதன்மைக் கடப்பாடாகத் திகழ்கின்றது. இதன் முதற்கட்டமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அரசியற்களத்தைக் கூறுபோட்டு சிதறடிப்பதை இலக்காகக் கொண்டு இயங்கும் கும்பல்களை விழிப்புணர்வுடன் அடையாளம்கண்டு, இவர்களை அந்நியப்படுத்தி, நிரந்தரமாக ஓரங்கட்டுவதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் முன்னுள்ள மிகச்சிறந்த தெரிவாகும். இதனைவிடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம்பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத்தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! (தொடரும்)

-சேரமான்
obama2050@gmail.com

கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்

நுவரெலியா மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முன்மொழிவை அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடைவிலகி அரசங்கத்துடன் இணைந்து கொண்ட எஸ் பி திஸாநாயக்க வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பல உலக சாதனைகளை ஏற்படுத்தியுள்ள முத்தையா முரளிதரனின், புகழைப் பயன்படுத்தி மலையக தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனினும் இதனை முரளிதரன் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்த செய்தியில் உண்மையில்லை என அவருடைய தந்தையார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் முத்தையா முரளிதரன் தொடர்பில் பெரும்பான்மையான மலையக மக்கள் மத்தியில் அதிருப்தியான கருத்துக்களே நிலவுவதாக கூறப்படுகிறது. அவர், தமிழராக இருந்தபோதும் தமிழ் மொழியில் கதைப்பதற்கு தயங்குவதே இதற்கான பிரதான காரணமாகும்.

ஏற்கனவே மற்றுமொரு கிரிக்கட் வீரரான சனத் ஜெயசூரிய மாத்தறையில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில், சிங்கள முஸ்லிம் வேட்பாளர்கள்?

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரண்டு சிங்கள வேட்பாளர்களும், 1 முஸ்லிம் வேட்பாளரும் போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. செய்தித்தளம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும், வன்னியில் இரண்டு சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான வேட்பாளர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகள் இன்று நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கூற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.

பொறுப்புள்ளவர்கள் என்ற அடிப்படையில் தம்மால் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் ஒன்றை திறக்கவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் கட்சி அலுவலகம் திறப்பது தொடர்பில் பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பிலும் புதிய காரியாலயம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

எனினும் கொழும்பில் தமது காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கு யாருடைய அனுமதியையும் கோரத் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பல்வேறு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், மனோகணேசன் உள்ளிட்டவர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மகேஸ்வரனின் சகோதரர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தோ்தலில், முன்னாள் அமைச்சர் ரீ. மகேஸ்வரனின் சகோதரரான விக்னேஸ்வரன் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கை தவிர்த்து தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியாவில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐந்து தமிழர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியில் நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

இதனை தவிர இலங்கையி;ன் எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

முன்னணி கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அதேநேரம் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஆளும் முன்னணியின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முரளீதரன் எனும் கருணா தலைமையில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேலும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் நாளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் இறுதி செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தெரியாது: ஐ.நா.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ எண்ணிக்கை எதனையும் ஐ.நா. கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு நாற்பதாயிரத்துக்கும் இடைப்பட்டது என்று இலங்கையில் ஐ.நா.வின் சார்பாகப் பேசவல்ல முன்னாள் அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை என்று ஜான் ஹோம்ஸ் கூறினார்.

"ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது உண்மை என்றாலும், கொல்லப்பட்டோரின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை" என்றார் ஜான் ஹோம்ஸ்.

போரில் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் சுயாதீன விசாரணை வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துவதாக அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், முன்பை காட்டிலும் முகாமில் இருப்போருக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தாயகக்கோட்பாடுகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள்: ஜெயானந்தமூர்த்தி

தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்தே போட்டியிட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழீழக் கொள்கைக்கு ஆணை வழங்கியிருந்தனர். தற்போது தற்காலிகமாக ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் எமது அரசியல் ரீதியான செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இதைக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டதாக கூட்டமைப்பில் உள்ள சிலர் நினைக்கின்றனர். அதனால் தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் பற்றி கதைக்க முற்பட்டுள்ளனர்.

எமது தேசியப் போராட்டம் பல அர்ப்பணிப்புகள் தியாகம் என்பனவற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ள முயலக் கூடாது. தற்போது சுயநல அரசியலை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை திசைதிருப்பும் வேலை அக்கட்சியில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் என விளக்கம் கூற இவர்கள் முற்படலாம். அதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்காமல் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின்னர் இது பற்றிப் பேசலாம் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்கள் முன் கூற முற்படுவது தமது பதவியைப் பெறுவதற்கே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எமது தேசியத்திற்கும் கடந்த 30 வருடகாலமாக உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களுக்கும் எமது இனத்திற்கும் செய்யும் துரோகமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வரலாறு இவர்களை என்றுமே மன்னிக்கப்போவதில்லை” என்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில்: ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தமிழீழக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்பு. அதனை ஏற்றுக் கொண்டே அதில் இணைந்துள்ள தமிழ் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் அரசியல் நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை என்றுமே முன்வைக்கவில்லை என கூறுவது தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும். அது மாத்திரமின்றி என்ன கொள்கைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதன் கொள்கையை கொச்சைப்படுத்தும் செயலாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவின் நலனுக்காக இவர்கள் செயற்படாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானதாகவும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது. அவர்கள் யாருக்கு இடம் கொடுப்பதில்லை என்பதை பார்த்தால் அதிகமானோர் தேசியத்தோடு கொள்கையை இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாறாக கடந்த காலங்களில் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வியாக்கியானம் பேசியவர்களுக்கும் மாற்றுக் கொள்கையுடன் இருந்து செயற்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். தற்போது விடுதலைப்புலிகளுடன் ஆதரவு இல்லாதவர்களே கட்சியில் உள்ளனர் என்பதை காட்டும் செயற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியதாக அது அமைய வேண்டும். இல்லாவிட்டால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எத்தகைய நடவடிக்கைகளும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெனில் புலம் பெயர் மக்கள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திலும் சரி தமிழர்களின் அரசியல் நகர்வுகளிலும் சரி ஒரு பின்புலமாக உள்ளனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.’ என ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் குமரன் பத்மநாதன்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது.

தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், எதிர்வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு சனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறியவந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, February 17, 2010

சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கம்

எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி கொள்கைகளுக்கு முரணான வகையில் தனித்து சுயாதீனமாக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி கோட்பாடுகளுக்கு முரண்பட்ட வகையில் செயற்பட்ட காரணத்தினால் குறித்த இரண்டு பேரையும் விலக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

குறித்த இருவரும் இடதுசாரி விடுதலை முன்னணி கடசியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமான ரெலோ கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Tuesday, February 16, 2010

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2010, 07:53.53 பி.ப GMT ] கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன.

தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.

அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.

விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது.

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz

சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:57.05 பி.ப GMT ] நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.

அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.

கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.

Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.

Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.

இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

-TVS