Thursday, February 11, 2010

சரத் பொன்சேகாவுக்கு மரண தண்டனைக்கான சாத்தியம் உண்டு: லண்டன் ரைம்ஸ்

விடுதலைப்புலிகளை தோற்கடித்ததற்காக கடந்த வருடம் தேசிய கதாநாயகனாகப் புகழப்பட்ட முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது சிறைவைக்கப்பட்டிருப்பதுடன் மரண தண்டனைக்கான சாத்தியப்பாட்டையும் எதிர் நோக்கியுள்ளதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராகச் சதிப் புரட்சியை மேற்கொள்ளத் திட்டமிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேகா பலவந்தமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.பொன்சேகாவின் கொழும்பிலுள்ள பிரசார அலுவலகத்திலிருந்து சடுதியாக இராணுவப் பொலிஸாரினால் அவர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் தொடர்பாக எவ்வாறு சவால் விடுப்பது என்பது பற்றி எதிரணித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஒன்று கூடியிருந்த சமயத்திலேயே அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.தனிப்பட்ட உதவியாளருடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜெனரலின் பேச்சாளர்களில் ஒருவர் த ரைம்ஸுக்குத் தெரிவித்திருக்கிறார்.

கை, கால்களைப் பற்றிப்பிடித்து பொன்சேகாவும் அவரின் செயலாளரும் இழுத்துச் செல்லப்பட்டதாக பொன்சேகாவின் அணியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கிறார்.பொன்சேகா கொண்டு செல்லப்பட்ட விதம் இம்சைப்படுத்தப்பட்டதாகவும் அவமதிக்கப்பட்டதான தன்மையுடையதாகவும் இருக்கின்றது என்று கூறிய அவர், நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதிக்கு எதிராக சதிப்புரட்சிக்குத் திட்மிட்டமை போன்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றத்தில் பொன்சேகா விசாரணை செய்யப்படவிருப்பதை அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தினார். இராணுவத்திலிருந்த போது ஜனாதிபதிக்கு எதிராக அவர் சதியில் ஈடுபட்டிருந்தார். அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் திட்டத்துடன் அதனை மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொன்சேகா கைது செய்யப்பட்டிருக்கின்றமை அசாதாரணமான அரசியல் நாடகத்தின் பிந்திய திருப்பமாக காணப்படுகின்றது.ஆனால் தெற்காசியாவின் நீண்டகால ஜனநாயக நிலைமை தொடர்பாக கவலைகளை இது ஏற்படுத்திருக்கிறது என்று த ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment