Friday, February 26, 2010

யுத்தத்தின் இறுதி நாள் மே 18 ல் நடந்ததை விவரிக்கிறார் கோத்தபாய

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்பும் சில மேற்குல நாடுகள் யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

"தெஹல்கா' இணையத்தளத்திற்கு அளித்துள்ள ஒரு நீண்ட பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள கோத்தபாய, ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு காட்டமான பதில்களை வழங்கியுள்ளார்.

இந்தப் பேட்டியின் இறுதியில் இறுதி யுத்தம் குறித்த ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. சரத்பொன்சேகாவை சம்பந்தப்படுத்தி கோத்தபாயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி இது தான்:

கேள்வி: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை நீங்கள் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டீர்கள் எனச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: முன்னர் அவர் வேறு எதையோ தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அரசியல் தீர்வு குறித்துப் பேசுகிறார். சரணடைய வந்தவர்களைச் சுடுமாறு நானே உத்தர விட்டேன் என்கிறார். அவரது பழைய பாடசாலையில் ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு கேட்டதன் மூலம் அரசியல் தலைமை அவர்களைப் பாதுகாக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். யுத்த நிலைமையில் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றார்.

கேள்வி: உண்மையில் என்ன நடந்தது?

பதில்: பிரபாகரன் கொல்லப்பட்ட மே 18ல் நடந்தது இதுதான்.

மிகச் சிறிய பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களில் 200 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

நள்ளிரவிற்குப் பின்னர் இது இடம்பெற்றது. இந்தச் சூழ்நிலையை மனதில் கற்பனை செய்து பாருங்கள்.

கடும் இருட்டில் அடர்ந்த காடுகளுக்குள் இருந்து அவர்கள் வருகின்றனர். சில விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். பிரபாகரன் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றார். அவரது மகன் வேறு திசையில் சென்றார்.

அதேவேளை, சரணடைந்த 10 ஆயிரம் உறுப்பினர்கள் வேறு திசையிலிருந்து வந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இளம் இராணுவ வீரர் ஒருவரால் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரை இனங் கண்டு அவரைச் சுட்டுக்கொல்லும் அல்லது உயிருடன் விடும் முடிவை எவ்வாறு எடுக்க முடியும்?

இவ்வாறு கோத்தபாய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment