Friday, February 26, 2010

தமிழர்கள் - தமிழ்க் கட்சிகள் - புலம்பெயர் தமிழர்கள் - புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள்

ஏதிர்வரும் இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தாயகத்தில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால் எவர் வெல்வதற்கு தகுதியானவர்கள் என்பதை வடகிழக்கு தமிழர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

எவர் வெற்றியடையா விட்டாலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைய வேண்டுமென்ற இலங்கையரசின் சூழ்ச்சிக்கு முண்டு கொடுக்கும் நடவடிக்கையை சில தமிழ் அரசியல்வாதிகள் செய்து வருகின்றார்கள்.

எதிர்காலத்தில் தமிழர்களுக்கு தலைமைதாங்கி அவர்களின் உரிமையை வென்றெடுக்கும் தலைமையை இனங்கண்டுள்ள தமிழர்கள் மத்தியில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களை திசைதிருப்பும் விதமாகவும் அரசியல் சூழ்ச்சிகள் இலங்கை அரசாங்கத்தினால் இடம்பெறுவதும் அந்த சூழ்ச்சிகளுக்கு துணைபோகும் தமிழ் குழுக்கள் நாளுக்கு நாள் புதிய அறிக்கைகளை ஊடகங்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழர்களும் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

முள்ளிவாய்க்காலுடன் தமிழரின் எதிர்காலம் சூனியமாகி விட்டதாக யாருமே அச்சமோ தயக்கமோ கொள்ளக்கூடாது. வரலாறு என்பது ஒரு கொள்கையை வாழையடி வாழையாக ஒருவர் மாறி ஒருவர் கையில் முன்னெடுப்பதற்கு கொடுத்திருக்கின்றதே தவிர ஒருவரே எக்காலத்திற்கும் தலைமை தாங்கும் நிலையைக் கொடுத்ததில்லை.

2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் கூறிய புலம்பெயர் மக்கள் குறிப்பாக "இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" எனக் கூறிருந்தார்.

ஒரு வேண்டுகோள் அல்லது அறைகூவல் என்பதற்கப்பால் ஒவ்வொரு தமிழரின் சுயமான கடமையாக தமிழ் இன விடுதலைக்காக உழைப்பது மிக முக்கியமானதாகும்.

தாயகத்தில் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையாக இருப்பது "தமிழத் தேசியக் கூட்டமைப்பே“ ஆகும். இந்த தலைமைத்துவத்தோடு இணைந்து செல்ல வேண்டிய பொறுப்பை தாயக மக்கள் சரியாகவே செய்வார்கள். தாயகத்திலிருக்கும் இந்த தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழருக்கு உண்டு.

புலம்பெயர் தமிழர்கள் இந்த நிலையிலிருந்து நழுவி அத்தலைமைத்துவ நடவடிக்கைகளை தூர நோக்குடன் பார்க்காது "இந்தியாவிற்கு விலை போனவர்கள்“ என்ற தோரணையில் கருத்துக்களை முன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியா ஈழத்தமிழருக்குச் செய்த தரோகத்தனத்தை நாம் மறப்பதற்கில்லை. ஆனால் உலக அரசியல் இராஜதந்திர அணுகுமுறையை நாம் மிக கவனமாக உன்னிப்பாக கவனித்து அதற்கமைய எமது கருத்து வெளிப்பாடுகளை வெளிக் கொணர வேண்டும்.

இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை இல்லை என்று எந்த அரசியல் விற்பன்னராலும் அடித்துச் சொல்ல முடியாது. இந்தியா எமக்கு துரோகம் செய்துவிட்டது, எனவே இந்தியாவை நிராகரிப்போம் என்பது தமிழரின் விடுதலையை வெகு சீக்கரத்தில் பெற்றுவிட வாய்ப்பாகும் எனச் சிந்தித்தால் அது தூர நோக்கற்ற சிந்தனையேயாகும்.

உலக நாடுகள் எவற்றுக்காயினும் நாம் கொடுக்கும் விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள் இந்தியாவின் ஆலோசனைக்குட்படுகின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. எம்மிடம் காணப்படும் குறைபாடுகள் என்னவெனில் அவசரமாக, அவன் கள்ளன்! விலை போகிவிட்டான்! இவன் துரோகி! என்று சொல்வதே.

எவர் எதை முன்னெடுத்தாலும் தமிழர் சுதந்திரமாக வாழும் தீர்விற்கான கொள்கை சிதையாமல் அப்படியே இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ வேலைத்திட்டம், வட்டுக்கோட்டைத் தீர்மான வேலைத்திட்டம், உலகத்தமிழர் பேரவை வேலைத்திட்டம் என்பன ஒரு இலக்கை நோக்கிச் சென்று ஒரு இடத்தில் சங்கமிக்கும் மாபெரும் வேலைத்திட்டங்களாகும்.

இந்த மூன்று அமைப்புகளும் தமக்குள் புரிந்துணர்வுடன் தம் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில தனிமனித விருப்பு வெறுப்பு இந்த அமைப்புகளின் நடவடிக்கையை குழப்புவதாக அமையக்கூடாது.

புலம்பெயர் தமிழர்களிடம் இருக்க வேண்டியது ஒற்றுமை. ஒற்றுமையே. அதுதான் மிக முக்கியமானது. அதுதான் மிகப் பெரிய பலம்.

இன்று புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகு காத்திரமான அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் மக்களால் ஆரம்பித்திலேயே ஏன் மேற்கொள்ள முடியவில்லை என்பதை புலம்பெயர் தமிழர்கள் தமக்குள்தானே கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும்.

இனிமேலும் தடைகளை குழப்பங்களை விளைவித்து சலிப்பையேற்படுத்தவதையும், திசை மாற்றுவதையும் விட்டு விட வேண்டும். தடைகளைப் போட்டவர்கள் யார் என்பதையும் சிந்தியுங்கள்.

புலம்பெயர் தமிழரின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் மேலே கூறிய மூன்று செயல்திட்ட அதன் நிர்மாணர்களை ஒருவருடன் ஒருவர் மோதவிடுவதில் இலங்கையரசு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை நாம் உணர வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இன்னும் பலமாக செயல்பட வேண்டும் என டேவிட் மிலிபாண்ட் கூறியதன் எதிரெலியாக அதைக் காட்டிக் கொள்ளாமல் “International Crisis Group“ வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த அறிக்கையில் கூறப்பட்ட மையக் கருத்து என்னவெனில், ”புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக முறையில் மேற்கொண்டு வரும் தமிழீழம் நோக்கிய செயல்பாடே இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணம்“ என்பதாகும்.

இந்த அறிக்கைக்கான காரணம் என்னவெனில், புலம்பெயர் தமிழரால் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளினால் உலக நாடுகளில் தமிழரின் ஜனநாயக ரீதியான விடுதலை நோக்கிய செயல்பாடுகளை உலக நாடுகளால் நிராகரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதும் அதனை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன என்பதேயாகும்.

இந்த அறிக்கையானது, புலம்பெயர் தமிழர்கள் எந்தச் செயல்பாடுகளையும் செய்யாது இருக்க வேண்டுமென்பதேயாகும்.

இந்த அறிக்கை எவ்வாறெனில், உடனடியாகக் கொல்லாத விசத்தைப் போன்றது. உடல் அப்படியே இருக்க உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக படிப்படியாக செயலிழக்கச் செய்யும் விசம் போன்றது.

ஓவ்வொரு புலம்பெயர் தமிழனும் ஒரு இராஜதந்திரி போல் செயல்பட வேண்டும்.

எனவே "தமிழத் தேசியக் கூட்டமைப்பு", "நாடு கடந்த தமிழீழம்“, "வட்டுக்கோட்டைத் தீர்மான வேலைத்திட்டம்“, "உலகத்தமிழ் பேரவை“ போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு வலுச் சேர்க்க வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்கள் உணர வேண்டும்.

-அங்கயற்பிரியன்-
malarvannan48@gmail.com

No comments:

Post a Comment