Friday, February 19, 2010

தாயகக்கோட்பாடுகளை முன்வைத்தாலே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொள்வார்கள்: ஜெயானந்தமூர்த்தி

தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளை முன்வைத்து த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாட்டை முன்வைத்தே போட்டியிட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் தமிழீழக் கொள்கைக்கு ஆணை வழங்கியிருந்தனர். தற்போது தற்காலிகமாக ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் எமது அரசியல் ரீதியான செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இதைக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டதாக கூட்டமைப்பில் உள்ள சிலர் நினைக்கின்றனர். அதனால் தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் பற்றி கதைக்க முற்பட்டுள்ளனர்.

எமது தேசியப் போராட்டம் பல அர்ப்பணிப்புகள் தியாகம் என்பனவற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ள முயலக் கூடாது. தற்போது சுயநல அரசியலை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை திசைதிருப்பும் வேலை அக்கட்சியில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசியல் ரீதியாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது அரசியல் இராஐதந்திரம் என விளக்கம் கூற இவர்கள் முற்படலாம். அதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைக்காமல் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின்னர் இது பற்றிப் பேசலாம் என கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்கள் முன் கூற முற்படுவது தமது பதவியைப் பெறுவதற்கே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எமது தேசியத்திற்கும் கடந்த 30 வருடகாலமாக உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களுக்கும் எமது இனத்திற்கும் செய்யும் துரோகமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வரலாறு இவர்களை என்றுமே மன்னிக்கப்போவதில்லை” என்று ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில்: ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தமிழீழக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்பு. அதனை ஏற்றுக் கொண்டே அதில் இணைந்துள்ள தமிழ் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் அரசியல் நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை என்றுமே முன்வைக்கவில்லை என கூறுவது தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும். அது மாத்திரமின்றி என்ன கொள்கைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதன் கொள்கையை கொச்சைப்படுத்தும் செயலாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

இந்தியாவின் நலனுக்காக இவர்கள் செயற்படாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானதாகவும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது. அவர்கள் யாருக்கு இடம் கொடுப்பதில்லை என்பதை பார்த்தால் அதிகமானோர் தேசியத்தோடு கொள்கையை இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாறாக கடந்த காலங்களில் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வியாக்கியானம் பேசியவர்களுக்கும் மாற்றுக் கொள்கையுடன் இருந்து செயற்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். தற்போது விடுதலைப்புலிகளுடன் ஆதரவு இல்லாதவர்களே கட்சியில் உள்ளனர் என்பதை காட்டும் செயற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியதாக அது அமைய வேண்டும். இல்லாவிட்டால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் மாறான கொள்கையை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை இவர்கள் கையில் எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்பது எந்தவிதமான குப்பை கூழங்களும் இல்லாத ஒரு சுத்தமான திடல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எத்தகைய நடவடிக்கைகளும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெனில் புலம் பெயர் மக்கள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திலும் சரி தமிழர்களின் அரசியல் நகர்வுகளிலும் சரி ஒரு பின்புலமாக உள்ளனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.’ என ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment