Friday, February 12, 2010

திருத்தல யாத்திரையில் திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையுறை ஈசன் அருணாசலேஸ்வரரையும் சிவ சக்தியான அம்பிகை உண்ணாமுலைத் தாயாரையும் தரிசிக்கும் பாக்கியம் பெரும் பேறு என்றே சொல்லலாம். மானிடராய் பிறந்த ஒவ்வொருவரும் தாம் பிறந்த பலனையடைய வேண்டுமாயின் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை சென்று பரப்பிரமம்மான பரமேஸ்வரனைத் தரிசனம் செய்து வந்தால் நிச்சயம் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும். வேண்டுவன யாவும் கிடைக்கும். பரமன் அருட் பெருங்கடல் வெகுவிரைவில் தன் அன்பை, கருணையை, அருளை அள்ளிச் சொரிந்து விடுவார். இக் கலியுகத்தில் இன்றும் அன்றும் என்றும் அருளை அள்ளிக் கொடுக்கும் திருவண்ணாமலையானைத் தரிசிக்கும் அரும் பேறை அவரருளாலேயே பெற்ற அடியேன் அவர் பாதாரவிந்தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். அண்ணலின் அடி முடி தேடி அன்னமாகவும் பன்றியாகவும் வடிவெடுத்து சென்று பிரமாவும் பரந்தாமனும் தமது அகந்தை நீங்கி ஒன்றேயான பரப்பிரம்மத்தின் அடி பணிந்த தலம் அக்னித் தலம் திருவண்ணாமலை.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னித் தலமான திருவண்ணாமலையை ஒரு முறை சென்று தரிசித்தவர், இறை ஈர்ப்பால் மீண்டும் மீண்டும் செல்வர். தம்மை அறியாமல் அங்கேயே நிரந்தரமாய் தங்கியிருக்கவும் விரும்பி விடுவார்களென்பது திண்ணம். அப்படி அங்கே என்ன இருக்கிறது என்று தானே சிந்திக்கிறீர்கள்? அங்கே தத்ரூபமாய் தன் அருளைத் தன்னைக் காண வேண்டுமென்ற தாகத் தவிப்போடு வரும் அடியவருக்கு தாயாய் அரவணைத்துத் அவர் தம் தாகம் தீர்த்து அருளைப் பொழிகிறார் அண்ணாமலையார்.

அதனால் தானோ என்னமோ மகான்களும் ரிஷிகளும் ஞானிகளும் திருவண்ணாமலையை நாடிச் சென்று அங்கேயே தங்கி நிரந்தரமாயிருந்து மக்களுக்கு நல்லுபதேசமும் நல்லாசியும் வழங்கிக் கொண்டிருந்தார்கள் இருக்கின்றனர். பகவான் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், யோகிராம் சரத்குமார் உமாதேவி அம்மையார், மாதா தேவகி போன்றோர். மாதா தேவகி இன்றுமிருக்கிறார். ஒருமுறை பகவான் ரமணரிடம் ஒருவர் கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்டபோது, அவர் தன்னையுமறியாமல் கடவுள் திருவண்ணாமலையில் இருக்கிறார் என்று கூறினார். கூறிய உடனேயே தான் ஒரு தேவ ரகசியத்தைத் தம்மை அறியாமலே கூறி விட்டேனே எனத் திகைத்தார் என்பதை யாவருமறிவர்'' ரிஷிகளின் எண்ணம் சொல், செயல் மூன்றும் சத்தியமானது. தெய்வ வாக்குகளாகும்.

இந்துக்களின் தலை நகரம், சைவத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்றே சொல்லி விடலாம். திருவண்ணாமலை தென் கைலாயம், அனற்கிரி, திருவருணை, சிவலோகம், முக்திபுரி கௌரி நகரம் என அதன் மகிமையைக்கொண்டு பல பெயர்களால் அழைப்பர். அண்ணாமலையுறை அண்ணலை, திருவண்ணாமலை மகாதேவர், அண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார் எனப் பல பெயர்களால் அழைத்தாலும் ஸ்ரீ அருணாசலேஸ்வரர், அருள் மிகு அண்ணாமலையார் என்பதே அவரது பிரபல்யமான பெயர்களாகும். அங்கு அருளாட்சி செய்கின்ற அன்னை உண்ணாமுலை நாச்சியாருக்கும், அபித குசாம்பாள், உலகுடைய பெருமான் நம்பிராட்டியார் எனப் பல பெயர்களுண்டு. தங்கள் அன்புக்கும் இறைவனின் அரும் பெரும் கருணையருளுக்கும் மேற்படி மக்கள் பற்பல பெயர்களால் அப்பனையும் அம்மையையும் அழைத்தாலும் அண்ணலின் மகிமைகருதி வர்ணனைப் பெயர்களாக கலியுக மெய்யன், வினை தீர்க்க வல்லன், மலை மேல் மகுந்தன், மன்மத நாதன், தியாகன், தேவராயன் எனவும் பல பெயர்களால் அழைப்பர். இங்கு தல விருட்சகமாக மகிழ மரமுள்ளது. அனல் வடிவமாய் எழுந்த சிவன், அடி முடி காணாது தோற்ற அன்னம், பன்றி, பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ ஆகியவை பொறிக்கப்பட்ட லிங்கோற்பவர். எல்லா சைவத் திருக்கோவில்களிலும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது. சிவராத்திரியில் லிங்கோற்பவருக்கு, நடக்கும் விசேட பூஜை முறைகளாலும் நாம் திருவண்ணாமலையின் மகிமையை உணரலாம். உலகிலேயே முதன் முறையாகத் தோன்றிய மலை, திருவண்ணாமலை தான் என்பதை உலக விஞ்ஞானிகளும் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனரென்பதை அங்குள்ள ஒரு பெரியவர் மூலமறிந்தபோது சிவனே அளப்பரிய அருட் கடலே உன் சர்வலோக வியாபகத்தை யாரறிவார் அப்பனே என மெய்சிலிர்த்தேன்.

சித்தர்களின் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் தான் இடைக்காடர் என்ற சித்தர் பிறந்தார். சிவத் தலமான திருவண்ணாமலையில் தான் திருப்புகழ் அருணகிரிநாதர் பிறந்தார். இவரின் தாயான முத்தம்மை வணங்கிய பிள்ளையார் கோவில் முத்தம்மை விநாயகர் கோயில் என வழங்கப்படுகிறது. அருணகிரி நாதருக்காக முருகப் பெருமான் இரண்டு முறை உருவத்தோடு காட்சி தந்த இடமும் இதே திருவண்ணாமலை தான். தீவிர முருக பக்தர்கள், யாவரும் வணங்க வேண்டிய முக்கிய தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றென்றால் மிகையாகாது. ஆறுபடை வீட்டுடன் திருவண்ணாமலையையும் சேர்க்கலாமென்பது அடியேன் கருத்து. அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ் மொத்தம் 71. இதையொட்டியும் திருவண்ணாமலை முருகனின் பெருமையை விளங்க முடியும். முருகன் கோயிலில் மகிமை பொருந்திய மகான் சேஷாத்திரி சுவாமிகளின் திருவுருவப் படம் திருச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த வல்லாள மகாராஜனுக்கு அண்ணாமலையான் மகனாகவே இருந்து புத்திர சோகம் தீர்த்தார். இன்றும் இறைவன் வல்லாள மகாராஜனுக்குத் திதி கொடுக்கிறாரென்பது ஐதீகம்.

திருவண்ணாமலையில் கிரிவலம் என்பது மிகவும் விசேஷமானது. கிரிவலம் பிரம்மமுகூர்த்த நேரமான அதிகாலையில் செய்வது சிறந்தது. அதுவும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செய்வோரின் எண்ணிக்கையை அளவிட முடியாது. வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவான் கண்டாய் என்றபடி தாம் வேண்டியவற்றைப் பெறுவதற்காக மக்கள் சுகமான நித்திரையையும் துறந்து நித்திய சுகமான இறையருளைப் பெற கிரிவலம் செய்கின்றனர். பௌர்ணமி நாட்களில் செய்யும் கிரிவலம் விசேடமானதெனக் கூறப்படுகிறது.

பௌர்ணமி நாளொன்றிலேயே திருவண்ணாமலையைச் சென்றடைந்த அடியேனும் மகளும் அந்த அற்புதனின் அருட் கடாட்சத்தால் அன்று கிரிவலம் வரும் பாக்கியத்தைப் பெற்றோம். கிரிவலத்தின் போது ஐம்புலன்களில் ஒன்றான கண்கட்கு கிடைத்த காண்பரிய காட்சியைக் கடவுளை கண்டேன். அடுத்த புலனான மூக்கிற்கு கிடைத்த அதியுயர் மலர்களின் வாசனையா? இல்லை இல்லவே இல்லை. மகான்கள் ரிஷிகள் சித்தர்கள் இன்றும் வாழ்கின்ற எந்தை அக்னி ரூபமாய் நிற்கும் மலையல்லவா? அவரின் அற்புத வாசனையை அடியேன் நுகர்ந்து, அதனையே சுவாசமாக்கி என் ஆத்மாவுக்குள் அவனே ஒளியான அக்னியான அவனின் ஒரு சிறு ஒளிக் கதிரின் சிறு துகளான பொறியான அடியேனின் ஆத்மாவுக்குள் இழுத்துக் கொண்டேன். ஓம் என்ற காதிற்கு கிடைத்த பிரணவ ஒலியும் அருணாசலா சிவாயநம என வாய் சொன்ன சிவநாமமும் இவற்றினால் மெய் அடைந்த புளகாங்கிதமும் ஐம்புலன் நுகர்ச்சி இதுவல்லவா என ஆனந்தமடைந்தேன்.

அடியேனின் கற்பனையோ என்னவோ? அதனையே எண்ணி அருட் பெரும் ஜோதியை கண்டு அளவில்லாத ஆனந்தத்தை அடைந்தேன் என்றால் மிகையாகாது. என்ன சுகந்தம்? இது ""காறும் அப்படியொரு வாசனையை அடியேன் அனுபவித்ததேயில்லை மகளைக் கேட்டேன். மற்றையோரைக் கேட்டேன். தமக்கு மணக்கவில்லை என்றார்கள். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா என என் மகள் சொன்னார். எது எப்படியோ என் சிவன் சித்தம். கைலாயமலை இறைவனின் இருப்பிடமாகும். ஆனால் திருவண்ணாமலையோ இறைவன். மலையே இறைவன். இது நூறு வீத உண்மை. பகல் நேரத்தில் சூரிய ஒளியில் சூரியனே இறைவன் தானே. அந்தத் திருவண்ணாமலையை அடியேன் பார்த்த போது பரவசமடைந்தேன். தக தகவென செக்கச் சிவந்த நிறத்தில் அக்னியாகவே அம் மலை காட்சியளித்தது. கண்ணால் கண்ட நிதர்சன உண்மை. இவற்றைக் காண திருவண்ணாமலையில் குறைந்தது பத்துப் பதினைந்து நாட்களாவது தங்கியிருக்க வேண்டும். அதிசயங்களை அற்புதங்களைக் காணலாம்.

கிரி வலம் வரும்போது எட்டுத் திசைகளிலும் இருக்கும் நந்திகள் மலையைப் பார்த்த வண்ணமுள்ளன. லிங்கத்தை பார்த்து அமர்ந்திருப்பது நந்தியின் அமைப்பு முறை. இதனால் மலையை லிங்கம் என்பதில் சிவன் என்பதில் என்ன சந்தேகம். மலையைச் சுற்றி எட்டு மைல்கள் நடக்க வேண்டும். எட்டுத் திசைகளிலும் அட்டதிக்கு பாலகர்களான இந்திரன், அக்னி, வாயு, நிருதி வருணன், குபேரன் ஈசானன் ஆகியோர் வைத்து வணங்கிய எட்டு லிங்கங்களும் இவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டு மலை சுற்றும் பாதையிலேயே அருட் காட்சியளிக்கின்றனர்.

மலை சுற்றும்போது அவர்கள் யாவரையும் முறையே வணங்கி வணங்கி தான் மலை சுற்ற வேண்டும். ஈசான்ய லிங்கம் மட்டும் சுடுகாட்டின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து தனியாக உள்ளது. சூரியலிங்கம் சந்திரலிங்கம் ஆகியனவும் மலை சுற்றும் பாதையிலேயே அமைந்துள்ளன.

மலை சுற்றும் வீதிக்கு திரு விக்கிரமபாண்டியன் ஏழாம் திரு வீதி என்று பெயர். மலை சுற்றும் வழியில் மூலிகை மணம், மிகுந்த வாசனையுடைய மலர்களின் மணம், விபூதி மணம் வீசுவதை மலை சுற்றுவோர் உணரலாம். வேறு எந்த நினைவுமின்றி புற உலக நினைவின்றி அக உலகில் அணுவுக்குள் அணுவானவனும் அன்புக்கு அடிமையானவனுமான அண்ணாமலையானை அகத்திருத்தி அவனருட் பார்வைக்காக ஏக்கமுற்று தாகத் தவிப்போடு அவன் நினைப்பாகவே மலை வலம், அவனையே வலம் வந்தால் நிச்சயமாக அவனின் கருணை, அன்பு, அருள், ஈடிணையற்ற மனச் சாந்தி, அமைதி கிட்டி ஆனந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணத்தை மலை வலம் வரும்போது மனதினில் நினைத்து வலம் வரலாம். அல்லது அருணாச்சலா என்ற நாமத்தையே நினைத்தும் வரலாம். சோணை நதி தோப்புப் பகுதி மலை சுற்றும் பாதையில் அழகாக அமைந்துள்ளது.

இங்கு கோயில் கொண்டுள்ள விநாயகர், கிருஷ்ணர் கோயில்கட்குச் கொஞ்ச தூரம் தள்ளி அண்ணாமலையைப் பார்த்தால் மலையின் தோற்றம் அதிசயம் ஆனதாக இருக்கும். இமய மலையில் இது போன்ற அமைப்பு உள்ளதாகச் சொன்னார்கள்.

இந்த இடத்தில் உஷ்ணக் காற்று வீசுகிறது. இறைவனின் இடப்பாகம் பெறத் தவமிருந்து வென்றாள் பார்வதிதேவி. மலை சுற்றி வரும் வழியில் ரிஷப வாகனத்தில் வந்து ஆட்கொள்வேன் என்றார் சிவன். மலை சுற்றி வரும் வழியில் நிருதி லிங்கத்தினை அடையுமிடத்தில் தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் மலைச் சரிவின் ஒரு விளிம்பில் ரிஷப வாகன தலைப்பாகம் மட்டும் தெரியும். செங்கம் சாலையிலிருந்து பார்த்தாலும் இந்தக் காட்சி இன்றும் தெரிகிறது. வேறிடத்தில் நின்று பார்த்தால் தெரியாது. இந்த இடத்தில் தான் சிவன் தேவியை ஆட் கொண்டு இடப்பாகம் தந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்த சக்தி, சக்தியின்றேல் சிவமில்லை. சிவமின்றேல் சக்தியில்லை என்கின்ற தார்ப்பரியமுடைய சிவ சக்தி, உலக மக்களுக்குத் தம் திருவிளையாடல்களைப் புரிய வைக்கும் நிகழ்வுகள் தான் இவை. மலை வலம் வருவோர் கட்டாயம் காண வேண்டிய அரும் பெரும் காட்சியிது.

திருவண்ணாமலை செல்வோர் அனைவரும் இந்தக் காட்சியைக் காண வேண்டும். ஆஞ்சநேயர் சன்னதியும் மலை வலம் வரும் வழியில் உண்டு. இராமலிங்க வள்ளலார் ஆசிரமங்கள் இரண்டு மலை சுற்றும் வழியில் உண்டு. கௌதம ஆசிரமத்திற்கு எதிரில் மலை மூன்று பிரிவாகக் காட்சி தரும். இதைத் திரிமூர்த்தி தரிசனம் என்பர். மலை வலம் வருவோர் விழுந்து வணங்க வேண்டிய இடமிது.

வீரகேசரி வாரவெளியீடு

No comments:

Post a Comment