Monday, February 8, 2010

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.

சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது - "உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்" - என்று பதிலளித்துள்ளார்

No comments:

Post a Comment