Monday, February 8, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச் சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் இன்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இராணுவ பொலிஸாரினால் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷியவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும், அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.

அடிப்படை உரிமைகளை மீறும் செயல்

இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது என்று கூறும் ரணில் அவர்கள் நடு இரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல் எனவும் கூறுகிறார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது எனவும் ரணில் விக்ரமசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சரத் பொன்சோ கைது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் வெளியிட்ட தகவல்

"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.

"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைதுசெய்வதானால் சிவில் பொலிஸ் மூலம் கைதுசெய்யும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் செல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.

"அவரைத் தரதரவென இழுத்துச் சென்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.

இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.

ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்க்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.

அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இராணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர். பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

No comments:

Post a Comment