Friday, February 19, 2010

அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும்.




அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம்.

இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது.

விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீரியம் அனைத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்தது.

அதுவரைக்கும் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய அரசியல் நிகழ்சிநிரலின் ஒரு பகுதியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து ஓர் அரசியல் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்மைப்பு அது, உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வந்தது.

அன்றைய சூழலில் எதிரியின் பிரித்தாளும் தந்திரத்தை உடைக்கும் நோக்கிலேயே புலிகளும் ஜனநாயகத் தளத்திலும் தமக்கான ஒரு குரலை ஒலிக்கச் செய்தனர்.

அன்றைய சூழலில் இது ஒரு சிறந்த தந்ரோபாயமாகவே இருந்தது.

எப்போதும - அவ்வப்போதைய சவால்களை கடத்தல் என்னும் அர்த்தத்திலேயே தந்திரோபாய நகர்வுகளை மட்டுப்படுத்தும் புலிகள், கூட்டமைப்பை வலுவானதொரு மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பாக முன்னெடுக்க முயலவில்லை. தமக்கான தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பையும் கூட்டமைப்பிற்கு வழங்கவில்லை.

இந்த நிலைமை கூட்டமைப்பை வெறுமனே புலிகளுக்கான முகவர் அமைப்பாக மட்டுப்படுத்தியது.

இன்று - விடுதலைப் புலிகள் இலங்கை அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் சூழலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் முதலாக ஜனநாயக வரம்பிற்குள் தனித்துவமான ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே - உறுப்பினர்கள் மத்தியில் கருத்தொற்றுமையற்றுப் பிளவுபட்டுக் கிடந்த கூட்டமைப்பு - இறுதியில் குறிப்பிட்ட சிலரை வெளியேற்றுவதன் மூலம் தம்மை மீள நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

ஆனால் - கூட்டமைப்பினர் இது தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் சில இருக்கின்றன.

அறியக் கிடைக்கும் தகவல்களின் படி கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டோர் தீவிர தமிழ் தேசியக் கருத்து நிலையை முன்னிறுத்தி தனியாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது.

தற்போதைய இலங்கை அரசியல் சூழலில் எந்தவொரு அமைப்பும் தீவிர தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னிறுத்தி இயங்குவது சாத்தியமற்ற ஒன்று எனினும், அவ்வாறு இயங்க முற்படுவோர் துணிச்சலானவர்களாகவும் தமது கொள்கையிலிருந்து தடம்புரளாதவர்களாகவும் சாதாரண மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்படலாம்.

எனவே - அவர்கள் தேர்தலில் வெல்லுவார்களா இல்லையா என்பது இங்கு விடயமல்ல; தமிழ் மக்களுக்கான அரசியல் மேலும் பிளவுறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்பதே இங்கு கருத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.

கொழும்பின் இராஜதந்திரம் பற்றி நம்மை விட வேறு எவரும் அறிந்துவிடப் போவதில்லை; ஆனாலும், நாம் அது பற்றி எந்தளவு தூரம் சிந்தித்துச் செயற்படுகிறோம் என்பது கேள்விக் குறியே!

மகிந்த ராஜபக்ச இரு வருடங்கள் ஆட்சியில் நீடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தேர்தலை அறிவித்தார். இது வெறுமனே அவரது ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவா, அல்லது தமிழரின் அரசியலையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவா?

நமது அரசியல் சூழலில் ஏற்பட்ட குழப்பங்கள் ஒரு நிலையை அடைவதற்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாதளவிற்கு அவசர தேர்தலொன்றை தமிழ்த் தலைமை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருகிறது.

மக்கள் முள்ளிவாய்க்கால் அனுபவங்களிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை முழுமையாக மீள் ஒழுங்கமைத்துக் கொள்ள அவகாசமற்ற சூழலிலேயே இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

இது கூட ஏன் கொழும்பின் ஒரு இராஜதந்திரமாக இருக்கக் கூடாது?

தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் அரசியலானது கொழும்பின் பிரித்தாளும் மூளைக்கு மேலும் ஆட்படக் கூடும். தமிழ்த் தேசிய அரசியலை மிதவாத தமிழ்த் தேசிய அரசியல் - தீவிர நிலைப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் என்ற வகையில் கொழும்பு பிரித்தாளுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இதனை எந்தளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பிரிவினர் உணர்ந்திருக்கிறனர் என்று தெரியவில்லை.

எனவே - உடனடியாக - தாம் ஏன் சிலரை வெளியேற்றுகிறோம்...? அவர்களை வெளியேற்றுவது எதிர்கால கூட்டமைப்பின் மக்கள் நலன் சார் அரசியலுக்கு எந்த வகையில் அவசியமானது...? அவர்களை வெளியேற்றாவிட்டால் எதிர்காலத்தில் என்ன வகையான சவால்களை கூட்டமைப்புச் சந்திக்க நேரிடும்..? போன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உண்டு.

இதனை கூட்டமைப்பு விரைந்து செயற்படுத்த வேண்டும்.

இன்று விலக்கப்படவுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கடந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் தங்களது தீவிர விசுவாசிகள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள், இதன் காரணமாகவே அவர்கள் மக்களால் பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறானவர்கள் தீடீரென நீக்கப்படும் போது மக்கள் மத்தியில் இது குறித்து குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு அத்துடன் அவர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடுமிடத்து, தாங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்தாலேயே ஓரங்கட்டப்படுவதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.

விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்த வரைக்கும் தம்முடன் இணைந்திருந்து விட்டு அவர்கள் இல்லை என்றதும் தம்மைப் புறந்தள்ளுவதாக அவர்கள் பிரச்சாரப்படுத்தலாம்.

எனவே - கூட்டமைப்பு தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சனைகளையும் அவ்வாறானதொரு அரசியலை முன்னெடுப்பது தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்பதையும், அகம் - புறம் சார்ந்து விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது.

ஒரு புறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொள்கை நிலைப்பட்டுப் பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் அது சார்ந்த அரசியலும் உள்ளது.

மறுபுறம் - கடந்த காலத்தில் புலிகளைக் காரணம் காட்டி நாட்டை விட்டு வெளியேறிய சக்திகள் அனைத்தும் மீண்டும் தம்மை அரசியலில் உறுதிப்படுத்துவதற்காக களமிறங்கியிருக்கும் சூழல், மேலும் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பிறிதொரு அணியாக இறங்கவுள்ள நிலைமை உள்ளது.

இப்படியாக ஒரு வகையில் குழம்பிய குட்டையாகக் காட்சியளிக்கிறது தமிழ் மக்களின் அரசியல். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களே வெற்றியாளர்களாகக் கொண்டாடப்படுவர். இதிலும் வெல்லப்போவது சிங்கள ராஜதந்திரம் தானா?

ஆபிரிக்க மார்சியரான அமில்கர் கப்ரால் தனது ஏகாதிபத்தியம் தொடர்பான உரையாடல்களில் ஆபிரிக்க பழமொழியொன்றைப் பயன்படுத்துவார்.

அதாவது ‘அரிசி பானைக்குள்ளே தான் வேகிறது’ என்பது தான் அப் பழமொழி.

ஏகாதிபத்தியம் பற்றி உரைப்போர் அதற்கான இடைவெளி நம் மத்தியில் தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்னும் அர்த்தத்திலேயே இந்த மொழியை பயன்படுத்துவார் அவர்.

நமது அரசியல் பலவீனமடைந்து கிடக்கிறது என்று கூக்குரல் இடுவோர் அதற்கான இடைவெளிகளை நாமே ஏற்படுத்திக் கொடுகிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்.

நாம் பலவீனமடைவதற்கான இடைவெளி நம் மத்தியில் இருக்கும் போது நாம் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருப்பதே நமது அரசியலாக இருக்கும்.

எனவே நம்மை சிதைக்கும் வகையிலான இடைவெளிகளை அகற்றுவது குறித்தே தற்போது தமிழ்த் தேசிய சக்திகள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இல்லையேல் மீண்டும் பழைய கதை தான்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மீண்டும் தவறிழைக்குமாயின் - சமூகத்தில் பணியாற்றும் கருத்துருவாக்கப் பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஈவிரக்கமற்ற முறையில் விமர்சிக்க வேண்டும்.

* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமாவார். கட்டுரை பற்றிய கருத்து எழுதுவதற்கு: arinanthan@gmail.com

No comments:

Post a Comment