Saturday, February 6, 2010

மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) - சிறி லங்காவின் ஆறாவது அரசுத் தலைவர் தேர்தல் சில படிப்பினைகள்

சிறி லங்காவில் நடந்து முடிந்த ஆறாவது அரசுத் தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்குக் குறைவான வாக்குகளும், சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் அவருக்குக் கூடுதலான வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தல் முடிவானது, சிறி லங்கா என்பது இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை மற்றுமொருமுறை உணர்த்தி நிற்கிறது. அத்துடன், தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப் பட்டதை அடுத்து தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விடுவார்கள், சிங்கள தேசத்துக்கு அஞ்சி ஒடுங்கி சரணாகதி அடைந்து விடுவார்கள் என்ற சிங்களப் பேரினவாதிகளின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி உள்ளது.

இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச படுதோல்வியத் தழுவுவார் என்றே தமிழ் மக்களில் அநேகர் எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்தார்கள் என்பதை விட விரும்பினார்கள் என்பதே மிகப் பொருத்தமானது. அதற்கு எதிர்மாறாக, விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிக்கக் காரணமாய் அமைந்த மகிந்தவிற்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் படியான தோல்வி ஒன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சிந்தனையே சிங்கள மக்களில் அநேகர் மகிந்தவிற்கு வாக்களிக்கும் நிலையைத் தோற்றுவித்தது எனலாம். வழக்கமாக ஐ.தே. கட்சியின் செல்வாக்குப் பிரதேசங்கள் எனக் கருதப்படும் இடங்களில் கூட இம்முறை மகிந்த ராஜபக்சவிற்குக் கிடைத்த அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைக் கொண்டு இதனை ஊகித்துக் கொள்ளலாம்.

சிங்கள, தமிழ்த் தேசங்களின் சிந்தனையோட்டத்தில் நிலவும் முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டுள்ள இந்தத் தேர்தல் மூலம், விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியல் தோற்கடிக்கப்பட்டமை சிங்கள மக்களுக்கு எத்துணை தூரம் மகிழ்ச்சியான விடயம் என்பதுவும், தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதை தற்போதைய நிலையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதுவும் நன்கு வெளிப்பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளமை உணர்த்தப் பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியற் சக்திகளுக்கு ஆதரவு வழங்கவும், பேரினவாதிகளின் பின்னே செல்லும் கைக்கூலிகளை நிராகரிக்கவும் தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் இத்தேர்தல் வெளிப்படுத்தி உள்ளது.

1949 முதல் தமிழ் மக்களின் குரலாகப் பரிணமித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பரிணாமம் பெற்றுள்ள கட்சிக்கு என்றென்றும் தமிழ் மக்களின் ஆதரவு தொடரவே செய்கின்றது என்பது இத்தேர்தலில் மீண்டும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அக்கட்சி பின்பற்றி வரும் கொள்கையே இதன் பிரதான காரணம் எனினும், ஏனைய தமிழ் விரோதக் கட்சிகள் மீதான வெறுப்பும் ஒரு உபரிக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இம்முறை தமிழ் மக்கள் வாக்களித்த விதத்தை உற்று நோக்கும் போது ஒருவிடயம் நன்கு புலனாகின்றது. கிழக்கு மாகாணத்தில் - குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் - தமிழ் மக்கள் உற்சாகமாகவும், உறுதியாகவும், தைரியமாகவும் கலந்து கொண்ட அளவிற்கு யாழ் குடாநாட்டு மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டவில்லை. அச்சுறுத்தல் காரணமாகவே யாழ் குடாநாட்டு மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை விடவும் அக்கறையின்மை காரணமாகவே அவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறுவதே பொருத்தமானது.

ஏனெனில், அச்சம் காரணமாக வாக்களிப்பைத் தவிர்ப்பதானால் மட்டக்களப்பு மக்களும் வாக்களித்திருக்க முடியாது. மாறாக, அவர்கள் அச்சமடையவும் இல்லை, கருணா குழுவினரால் வீசியெறியப்பட்ட எலும்புத் துண்டுகளான ஆயிரம் ரூபாய், சாராயப் போத்தல் என்பவற்றால் சலனம் அடையவும் இல்லை. கைத்துப்பாக்கியை நெற்றியில் வைத்து அச்சுறுத்திய நிலையிலும் கூட அதனைக் கவனத்தில் கொள்ளாமல் மகிந்தவிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.

‘மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே கருணா குழுவினர், துரோகிகள்’ என முத்திரை குத்தும் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசியவாதிகள்(?) சிலர் இதன் பிறகாவது தமது திருவாய்களை மூடிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம், மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும் கூட, தமிழர் விகாரத்தைக் கையாளும் விடயத்தில் தனது அணியில் உள்ளவர்கள் எவருமே பொருத்தமான நபர்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருப்பார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடாத்தி தமிழர் விவகாரத்தைக் கையாளப் போவதாக அவர் அறிவித்திருப்பதை இதன் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மகிந்தவின் இந்த அறிவிப்பு ஈ.பி.டி.பி.யினருக்கு ஏற்படுத்தியுள்ள உதறலின் வெளிப்பாடாகவே டக்ளஸ் தேவானந்தாவின் பதவி விலகல் நாடகத்தையும், யாழ் குடாநாட்டில் வலிந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பையும் நோக்க வேண்டியுள்ளது. இடது சாரித் தத்துவத்தைக் கரைத்துக் குடித்த டக்ளசுக்கு தமிழ் மக்களின் இதயத் தடிப்பை அறிந்து கொள்ள முடியாமற் போயுள்ளமை விந்தையிலும் விந்தை.

தமிழ்த் தேசியத்தையே தாம் ஆதரிப்பதாக தேர்தல் முடிவு மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளமை மகிந்த தரப்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகவே கோப்பாய் மற்றும் சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்கள் அடித்து நொருக்கப் பட்டுள்ளன. ஆனால், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் மனங்களில் இருந்து பிரபாகரனின் நினைவை அகற்றிவிட முடியும் என மகிந்தவோ, டக்ளசோ, கருணாவோ நினைத்தால் முடிவில் எமாந்தே போவார்கள் என்பது நிச்சயம்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்திருந்தாலும், தமிழ்த் தேசிய அரசியலின் இதயம் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டில் தமிழ் மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்களித்திருந்தமை பாராதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம். அதிலும், வாக்களித்திருந்தோரில் இளையோரின் பங்களிப்பு மிக மிகக் குறைந்திருந்தமையானது விசேட கவனத்துக்கு உரியது.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு சக்தியாக விளங்கி வந்த இளையோர், மாறியுள்ள காலச் சுழலில் அரசியலை விட்டுத் தூரப் போக நினைப்பது ஆபத்தான அறிகுறி.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக பணி காத்திருக்கின்றது. குடாநாட்டில் வாக்களிக்க மனமின்றி இருக்கும் 75 வீதமான மக்களையும் அடுத்துவரும் பொதுத் தேர்தலுக்கு இடையில் வாக்களிக்கும் மனோ நிலைக்குக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய முகங்களையும் - அடிப்படைக் கோரிக்கையோடு சமரசம் செய்யாத வகையில் - புதிய கோசங்களையும் அறிமுகஞ் செய்ய வேண்டும்.

ஒரு அரசியல் இயக்கத்தின் வெற்றி அடித்தட்டு மக்களை அதிகளவில் வென்றெடுப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய ஒரு சக்தியாக விளங்குவதாககத் தெரியவில்லை. எனவே, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இச் சந்தர்ப்பத்தில் அதன் தலைவர்கள் விரைவாகவும், விவேகமாகவும் செயற்படுவதே சாலச் சிறந்தது.

சண் தவராஜா

No comments:

Post a Comment