Thursday, February 11, 2010

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத்தமிழர்கள் பெறுகின்ற போதுதான் சர்வதேசம் தமிழர்கள் பக்கமாக திரும்பும்

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத் தமிழர்கள் எப்போது பெறுகின்றார்களோ அப்போதுதான் அந்த சர்வதேச அரசியல் தமிழர்கள் பக்கமாக திரும்பும், அதுவரை அது கொழும்புடன்தான். ஆனாலும் நமது சூழலில் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்து மிகவும் எழுந்தமானமான பார்வையே நிலவி வருகிறது.

"முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம் என்று சொல்லுவோர் இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.

எனது நோக்கில், மோசடி குறித்த வாதங்கள் மிகவும் பலவீனமானதென்றே சொல்வேன். 18 லட்சம் வாக்குகளை ஒரு வேட்பாளர் மோசடி மூலம் பெற்றுக் கொண்டார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக தெரியவில்லை. இவ்வாறான புரிதல்கள் சிங்கள மக்களின் மனோநிலை, சரத் பொன்சேகா குறித்து தென்பகுதியினர் மத்தியில் நிலவிய அபிப்பிராயங்கள் எவற்றையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. எனினும் தேர்தல் மோசடி குறித்த அபிப்பிராயங்கள் விரைவில் இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் விடைபெறக் கூடும் அல்லது மேலும் சூடுபிடிக்கலாம்.

சிங்கள மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் பெருவாரியாக திரு.மகிந்த ராஜபக்சவையே விரும்பினர். இதனை சிங்கள தேசியவாதத்தின் பின்புலத்திலேயே நாம் நோக்க வேண்டும். குறிப்பாக விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பின்னனியில் சிங்கள தேசியவாதம் பெறும் புதிய பொலிவு அதாவது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக பலமாக இருந்த சூழலில் சிங்கள தேசிவாதம் ஒருவகை தோல்வி மையவாதத்திற்குள் நிலை கொண்டிருந்தது. ஆனால் புலிகளின் தோல்விக்கு பின்னர் அது புதிய பொலிவுடன் எழுச்சியடைந்துள்ளது.

எழுச்சியடைந்த தேசியவாத்திற்கு யார் அதிகம் உரித்துடைவர்கள் என்பதே தேர்தலின் பிரதான கோசமாக இருந்தது. இதற்கு தானே காரணம் என்று திரு.மகிந்தவும் இல்லை நான்தான் காரணம் என்று ஜெனரல் பொன்சேகாவும் உரிமை கோரினர். இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது எனது நண்பர் ஒருவர் சொன்னார், சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு மரபு இருக்கிறது அரசனா தளபதியா என்று வந்தால் அவர்கள் எப்போதுமே அரசனையே ஆதரிப்பர். இறுதியில் சிங்கள மக்கள் செய்ததும் அதனைத்தான்.

இலங்கை அரசியலைப் பொருத்தவரையில் தேர்தலுக்கு பின்னர் கவனம் பெறும் முக்கிய விடயம் சர்வதேச அரசியலில் இலங்கை பெறும் முக்கியத்துவம் ஆகும். இனிவரப் போகும் காலங்களில் இலங்கைக்குள் நிகழப் போகும் அனைத்தையும் மேற்படி சர்வதேச அரசியலே தீர்மானிக்கும். எப்போதுமே ஒரு தேசத்தின் அரசியல் என்பது ஒரே நேரத்தில் தேசிய அரசியலாகவும், பிராந்திய அரசியலாகவும், சர்வதேச அரசியலாகவும் இருப்பதே அரசியலின் இயங்கு விதியாகும். அரசியலை தனித்துப் பார்ப்போர் தோற்றுப் போகும் இடமும் இதுவே. இன்று இலங்கையின் அரசியல் என்பது இலங்கையின் அரசியலாக இருக்கும் அதேவேளை அது பிராந்திய அரசியலாகவும் இருக்கிறது, அதே பிராந்திய அரசியல் பிறிதொரு வகையில் சர்வதேச அரசியலாகவும் இருக்கிறது.

இலங்கை அரசியல் பிராந்திய அரசியலாக மாறும் போது, இந்திய-சீன முரண் அரசியல் களமாக உருமாறுகிறது இலங்கையின் அரசியல். அதே பிராந்திய அரசியல் அமெரிக்க நலன்சார் அரசியலுடன் முரண்படும் போது அதுவே சர்வதேச அரசியலாகிறது. இந்த முரண் அரசியல் நகர்வின் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதால் இதில் எவர் மோதிக் கொண்டாலும் நன்மை அடையப்போவது கொழும்பாகவே இருக்கும்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெளியான அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றிய அறிக்கைகள் மறைமுகமாக ஒரு செய்தியை தெளிவுபடுத்தியிருந்தன அதாவது இலங்கையுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பதே அந்த மறைபொருட் செய்தி. மறுபுறத்தில் இது வெள்ளிடைமலையாக்கும் அரசியல் என்னவென்றால் வென்றவர்களை வாழ்த்தி அரவைணைத்துக் கொள்ளுதலே இன்றைய உலக ஒழுங்காக இருக்கின்றது என்பதையே. இது குறித்துரைக்கும் மேலதிக விடயம்,

இதுவரை மேற்கு இலங்கை தொடர்பில் கூறிவந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ‘நலன்சார் அரசியல்’ என்னும் தந்திரோபாயத்தால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும் என்பதைத்தான். நலன்சார் அரசியலுக்கு அது தேவைப்பட்டால் மீண்டும் துசு தட்டப்படலாம். ஏற்கனவே அமெரிக்க செனட் இலங்கை தொடர்பில் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இலங்கையில் அமெரிக்காவின் செவ்வாக்கை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அணுகுமுறையொன்று தேவை, அது பொருளாதார, வணிக, பாதுகாப்பு ஊக்குவித்தல்கள் மூலம் அடையப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த செனட், மனித உரிமைகளைப் பொருத்தவரையில் அவை முக்கியம் என்றாலும் அமெரிக்காவின் கொள்கையை இந்த ஒரு தனி விடயம் மட்டுமே தீர்மானிக்காது. உண்மையான சீர்திருத்தத்தை கொடுப்பதற்கு அதற்கு திறமையில்லை இப்பகுதியில் அமெரிக்க புவிசார் மூலோபாய நகர்வுகளை அது குறைத்துவிடும்’ என்றும் பரிந்துரைத்திருந்தது.

இவ்வளவுதான் எங்கள் பக்கம் திரும்பும் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சர்வதேச அரசியல். இது, நேற்று இன்று நாளை என்னும் வகையிலான ஒரு தொடர் கதை அரசியல். இதில் அப்படி நடக்கலாம் இப்படி நடக்கலாம் என்பதெல்லாம் நம்மை நாமே ஆற்றுப் படுத்திக் கொள்வதற்கான நமது எழுத்துக்களே!

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் காய்களாகும் தகுதியை ஈழத் தமிழர்கள் எப்போது பெறுகின்றார்களோ அப்போதுதான் அந்த சர்வதேச அரசியல் தமிழர்கள் பக்கமாக திரும்பும், அதுவரை அது கொழும்புடன்தான். ஆனாலும் நமது சூழலில் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்து மிகவும் எழுந்தமானமான பார்வையே நிலவி வருகிறது. இது இறுதியில் ஒரு அறிக்கையை வைத்து சிந்திக்கும் அளவிற்கு சுருங்கிவிடுவதுண்டு.

இதற்கு சிறந்த உதாரணம் ஹிலாறி கிளிண்டனின் ‘எல்லா பயங்கர வாதத்தையும் ஒன்றாக நோக்க முடியாது’ என்ற கூற்றும் நம்மவர்கள் அது பற்றி சிறுப்பிள்ளைத்தனமாக மேற்கொண்ட விவாதங்களையும் குறிப்பிடலாம். அமெரிக்கா என்ற ஒரு தேசத்தின் கொள்கை நிலைப்பாடு ஹிலாறியின் ஒரு கூற்றினாலோ அல்லது ஒபாமா பற்றி வைக்கோ ஒரு நூலை வெளியிடுவதாலோ மாறிவிடாது என்பது முள்ளி வாய்க்காலுக்கு பினர்தான் பலருக்கு விளங்கியது.

முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம் என்று சொல்லுவோர் இலங்கை சர்வதேச அரசியல் நகர்வின் சதுரங்கமாக மாறப் போகிறது என்பது குறித்து அவதானிப்பது அவசியம். வெறுமனே மேற்கின் வீதிகளில் ஒரு சுலோகத்தை தூக்கிக் கொண்டு நிற்பதன் மூலம் இந்த சதுரங்கத்தை ஆட முடியாது.

யதீந்திரா

No comments:

Post a Comment