Wednesday, February 3, 2010

தடுப்புக்காவலில் உள்ள புலிச் சந்தேகநபர்களை இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை இலங்கை அரசு காலவரையறையின்றி தடுத்து வைப்பதை நிறுத்த வேண்டும். அவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களை கண்டறிந்த பின்னர் ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் 11,000 பேரை இலங்கை அரசு காலவரையறையின்றி தடுத்து வைப்பதை நிறுத்த வேண்டும். தடுப்புக்காவலில் உள்ளவர்களில் யார் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதை இலங்கை அரசு கண்டறிய வேண்டும். ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற காரணத்தை அரசு தெரிவிக்க மறுத்து வருகின்றது. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அவர்கள் சட்ட உதவிகளை பெறுவதற்கு அரசு அனுமதிகளை வழங்குவதுடன், அவர்களை பார்வையிட சட்டவியலாளர்களை அல்லது குடும்ப உறுப்பினர்களையும் அரசு அனுமதிக்க வேண்டும்.
போர் நிறைவுபெற்றபோது இடம்பெயர்ந்த மக்களில் 250,000 பேரை அரசு பாதுகாப்பு நடைமுறைகளுக்காக முகாம்களில் தடுத்து வைத்திருந்தது. தற்போதும் முகாம்களில் 100,000 மக்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை அரசு வேறு முகாம்களில் தடுத்து வைத்துள்ளது. அதனை புனர்வாழ்வு முகாம்கள் என அரசு தெரிவித்து வருகின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மிகவும் குறைவான தகவல்களே உள்ளன. எனவே அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கோ அல்லது தவறாக நடத்தப்படுவதற்கோ அல்லது காணாமல்போவதற்கோ சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையை தான் பார்க்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அது தொடர்பில் பின்னர் கருத்து தெரிவிப்பதாக அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment