மீள் குடியேற்றத்தின் பின் வன்னி மக்கள் சுதந்திரமாக வாழப் போகிறார்களா? என்றால் அங்கேதான் சிங்களம் தனது சாதுரியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது வன்னி மக்களை முடிந்தளவு படிப்படியாக மீள்குடியேற்றுவது, இதனை நிறைவேற்றி உலகநாடுகளின் கண்டனங்கள் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து......
சபாஸ் வேண்டுவது, மக்கள் மீள்குடியமர்ந்தவுடன் களை எடுப்பது, அதாவது இப்போது முகாங்களில் உள்ளவர்கள் காணாமல் போனால் அல்லது அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் வெளிநாடுகளின் ஊடகங்களின் கண்ணுக்கு பட்டுவிடும் செய்திகள் வெளியே தெரியும். அதனால் புலி ஆதரவாளர்களை சுதந்திரமாக ஆனால் ஒரு கண்வைத்து நடமாடவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீள குடியமர்ந்தவுடன் இவர்கள் வெள்ளை வானிலோ அல்லது இனந்தெரியாதோர் பெயரிலேயோ கடத்தப்படுவார்கள். அல்லது திடீர் திடீர் என காணாமல் போவார்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தைபோல் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை வன்னி கொண்டிருக்கவில்லை. பத்தாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்ட வன்னியில் வீடுகளும் அதனை அண்டி காடுகள், பற்றைகள், குளங்கள் உடைய ஒரு இயற்கை அமைப்பை கொண்ட இடம். அதனால் பாலியல் பலத்காரங்கள், காணாமல் போதல்களுக்கு இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்லவேண்டும். மேலும் கடந்த மாதங்களில் மல்லாவி, கனகராயன்குளம், துணுக்காய் போன்ற கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
அவர்களின் வீடுகளை சூறையாடி செல்வது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டு கதவுகள் யன்னல்கள் அதைவிட கொடுமையாக மலசலகூட மாபிள்களைக் கூட களவாடப்பட்டிருக்கிறதாம். மேலும் தங்கள் கண்ணெதிரேயே தங்களின் உறவினர், நண்பர்கள், வீடுகளையுடைத்து யன்னல், கதவு, ஓடு, கல் போன்றவற்றை ஏற்றிச் செல்கின்றார்களாம். வன்னித் தெருக்களெங்கும் சிங்களவர்களின் வாகனங்கள் சாமான்களை ஏற்றி நெடுங்கேணியூடாக டொலர்பாம், கென்பாம் போன்ற சிங்கள கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதாம். வன்னியில் சமாதான காலப்பகுதிகளில் இது ஒரு நிரந்தர சமாதானம் என்று நம்பி மக்கள் பல லட்சம் பெறுமதியான வீடுகளையும் கடைகளையும் கட்டியெழுப்பினார்கள்.மேலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்தொகை பணத்தை வீடுகள் கட்டியெழுப்ப அனுப்பியிருந்தார்கள். பொருளாதார வீழ்ச்சிகளால் மக்கள் அதிகவிலை கொடுத்தே தங்களின் வீடுகளை கட்டியிருந்தார்கள். ஒன்றரை கோடி இரண்டு கோடிக்குமேல் செலவளித்துகூட வீடுகளை பலர் கட்டினார்கள் ஏறகுறைய சமாதான காலத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடைகள் கட்டப்பட்டன. சராசரி ஒருவீட்டுக்கு ஏழு இலட்சம் கணக்குப் போட்டாலும் சும்மார் இருபத்தெட்டு பில்லியன் கோடிக்குமேல் வீட்டுக்குரிய சீமேந்து , கம்பி, ஓடு போன்ற மூலதனத்தை மக்கள் அரச கம்பனிகளுக்கு வழங்கினார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்த தமிழ் மக்களின் பணம் அரச பொருளாதாரத்தை நிமிர்த்தியதோடு இராணுவ கட்டமைப்புக்கும் வன்னி மக்களின் அழிவிற்கும் பெரும் துணையாக அமைந்தது. எங்களின் விரலால் எங்கள் கண்ணை குத்திய கதையாக அமைந்தது. இரண்டாம் தடவையும் காக்கையை ஏமாற்றிய நரியார் போல புலம்பெயர் மக்களின் பணத்தை எப்படி மீண்டும் பிடுங்கலாம் மீள்குடியேற்றத்துக்கு கொடுக்கும் பணங்களை வீடுகட்ட தங்களிடம் தானே மீண்டும் பணத்தை தருவார்கள் என்று கணக்கு போட்டும், தாங்கள் எவ்வளவு கொடுக்கிறோம் மீள்குடியேற்ற மக்களுக்கு என்று வெளிநாடுகளுக்கு காட்டும் ஒருமுகமும் தமிழ் மக்களின் சொத்தை சிங்களவர்களை சூறையாட விடுவதுமூலம் அவர்களிடத்தே ஒரு நல்லபெயரை பெற்று காலப்போக்கில் ஒரு இனக்கலவரத்தை வன்னி மக்களுக்கு எதிராக திருப்பிவிட ஒரு கொம்பு சீவும் நிலையையும் அரசு கட்டவிழ்த்து வருகிறது.
மேலும் புலிகளின் காலப்பகுதிகளில் அரச காரியாலயங்களிலோ, தனியார் நிறுவனங்களிலோ சிங்களவர்கள் இருந்திருக்கவில்லை. நூறு வீதமும் தமிழர்கள்தான் கடமையாற்றி வந்தார்கள். 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து புலிகள் வன்னியை விட்டு செல்லும் வரை யாழில் கூட தமிழர்கள் தான் கடமையாற்றி வந்தார்கள். ஆனால் இப்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக காணும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதிக்கம் வரும் 2010 ஏப்ரல் மாத பாராளுமன்ற தேர்தல்களின் பின் படிப்படியாக கூட்டப்படும். அதாவது மகிந்தவின் ஆட்சிக் காலமான எதிர்வரும் ஆறு வருடங்களில் வன்னி, யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கும்.
அதன் அடிப்படையில் மாவட்ட அரச அதிபர்களோ கச்சேரி உயர் அதிகாரிகளோ சிங்களவர்களாக வரும்போதும், பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள் கடைமையாற்றுவார்கள். இப்படி இவர்கள் கலக்க விட இரண்டு காரணங்கள் இருகின்றன. ஒன்று சகல காரியாலயங்களிலும் சிங்களவர் இருந்தால் புலிகளின் வருங்கால நடமாட்டங்களையும் ஊடுருவல்களை தவிர்க்கலாம் என்பது ஒன்று மறு புறம் , அரச உயர் அதிகாரிகளுடன் கதைப்பதற்கும் அவர்களிடம் அலுவல்கள் பெறவரும் சிங்களவர்களிடம் உரையாடுவதற்கும் சிங்களம் கற்பது அவசியமாகிவிடும். அதனால் பாடசாலைகளிலும் சிங்கள பாடத்திட்டங்களும் ஏன் சிங்களபாடம் ஒரு கட்டாய பாடமாகக் கூட வர வாய்ப்புள்ளது. முப்பது வருடமாக தமிழர்கழுக்கு படை பலம் இருந்ததால் இந்த கனவு சிங்கள அரசுக்கு சிம்ம சொற்பனமாகவே இருந்தது.
மேலும் வன்னியில் கணிசமான பலர் வெளிநாடுகளில் தங்கிவிட்டார்கள். இடம்பெயர்ந்த மக்கள் பலர் இந்தியா சென்றும் பலர் குடும்பமாக கொல்லப்பட்டும் உள்ளனர். இவர்களின் வீடுகள், நிலங்களில் இனி சிங்களவர் குடியமர்த்தப்படுவார்கள், வன்னியில் கடமை புரியும் இராணுவத்தினர் குடும்பங்களும் உறவினரும் கூட வருவார்கள். இவர்களின் வருகையையொட்டி தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புத்த விகாரைகளும் இராணுவத்தினர் நினைவுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன என்பதை நீங்கள் ஓரளவு அறிவீர்கள். இவைகள் ஒரு வெள்ளோட்டம்தான். ஆனால் எங்களால் என்ன செய்ய முடிந்தது? இரண்டு எதிர்குரல் விட்டார்கள். அதோடு சரி. தமிழ் மக்கள்தான் குடியமர்த்தப்படவில்லை. ஆனால் சிங்கள மக்கள் வன்னியில் வாழத்தொடங்கிவிட்டார்கள் என்று எததனை பேர் அறிவார்கள்?
யாழ்பாணம், முல்லைத்தீவு, திருகோணமல, போன்ற கரையோர மாவட்டங்களில் வாழும் பல இலட்சம் தமிழ் குடும்பங்கள் மீன்பிடியைத்தான் தங்களின் பிரதான தொழிலாக கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இதைவிட்டால் வேறெந்த தொழிலும் தெரியாது. ஆனால் இப்போது நடப்பது என்ன? தமிழரை தாயகத்தில் இருந்து துரத்திவிட்டு இப்போது தமிழீழக் கடலில், முல்லைத்தீவு கிழக்கு கடல்வழியாக, நாயாறு, அளம்பில் பகுதிகளால் வரும் சிங்காவர் முல்லைத்தீவு, அளம்பில், செம்மலை, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், பொக்கணை. மாத்தளன், சாலை ஆகிய பகுதிகளில் இரவுபகலாக மீன் பிடித்து செல்கிறார்கள். போதாதற்கு, இந்திய மீனவர்கள் ஒருபுறம். தங்கள் கைவரிசையை காட்டிவருகிறார்கள் ஆனால் இதன் சொந்தக்காரர்கள் வதைமுகாமிலும். முள்வேலி முகாமிலும் ஒருநேர சோத்துக்காக கையேந்தி நிக்கிறார்கள், மீழ்குடியேற்றத்தின் பின் சாத்தியாமா என்றால் அதுவும் எட்டா கனிதான்.
ஏனென்றால் இந்திய சினிமாவில் வரும் தாதாக்கள் போல் சிங்களவர் நடந்து கொள்வார்கள் அடிமைகளாக அவர்களின் சட்டத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டுத்தான் நாம் நடக்கவேண்டும், எதிர்த்து கேட்டால் அவர்களுக்கு துணையாக இராணுவத்தினர் வருவார்கள். அவர்களையும் எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் இரவில் காணாமல் போவார்கள். எனவே அழிந்துபோன குடும்பங்கள் இனியும் அழிந்துபோக பயப்படுவார்கள். ஏனென்றால் பலர் குடும்பங்களில் ஆண்களே இல்லை. இது ஒரு புறம் இருக்க மன்னாரிலே எண்ணெய் கிணறு என்னும் பெயரில் மன்னார் கடல் அன்னியர்களுக்கு போருக்கு பெற்ற கடனுக்கும் நன்றிக் கடனுக்குமாக அடிமை சாசனமாக எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் தமிழரின் காணிகளும் கடலும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். 1983-1984 வரையான காலப்பகுதிகளில் திருகோணமலையை குறிவைத்து இனக்கலவரங்கள் மூலம் பல தமிழர்களைக் கொன்றும் துரத்திவிட்டும் அவர்களின் பாரம்பரிய நிலங்களையும் உடைமைகளையும் சிங்களவர் பிடித்ததுமல்லாமல் இராணுவத்தின் துணையுடன் திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, மணலாற்றிலே உள்ள தற்போது டொலர்பாம், கென்பாம் என்று அழைக்கபடும் வவுனியாவின் வடகிழக்கு பகுதியையும் பிடித்தார்கள். இதனால் தமிழர் தாயகத்தின் இதயபூமி பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைதீவின் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அகதிகளாக வந்தார்கள். இதை குள்ளநரி ஜே ஆர் நடத்தி முடித்தார்.
இனிவரும் காலங்களில் பதவியா டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் குடியமர்த்தபட்ட சிங்கள காடையர்கள் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெடுங்கேணி, மதியாமடு, மரதோடை, ஆனந்தர் புளியங்குளம், பழம்பாசி, தண்டுவான் போன்ற முத்து முத்தாக நெல்விளையும் குளக்காணிகளை அதுவும் மூன்று போக காணிகளை தமிழர்களுக்கு விட்டு வைக்க மாட்டார்கள். இனக்கலவரங்களை தூண்டிவிட்டு மீண்டும் வன்னி மக்கள் மீது இன அழிப்பு படுகொலையை இந்த அரசோ அல்லது வரப்போகும் வேறு அரசோ செய்யத்தான் போகிறது. எங்களின் இனம் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கப்போகிறது இவற்றுக்கெல்லாம் கடந்தகால வாரலாறுகளே சாட்சியாக உள்ளது. தமது பிள்ளைகளையும் தங்களின் போராளிகளையும் பறிகொடுத்த மண்னில் இன்று தமிழரை கொன்றழித்த இராணுவ சிப்பாய்களினது உருவச்சிலைகள் கட்டப்படுகின்றன. சந்திகள் மூலை முடக்குகளெங்கும் இனி அவர்கள் தூபிகள் தான் இன்னுமொருபடியாக தூபிகள் முன் நாம் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை செய்து போகும் தூபிகளும் கட்டப்படுகின்றன. பல செய்தி இணையங்களூடாக நீங்கள் அறிந்ததுண்டுதான். இதைவிட இனியென்ன அடிமை வாழ்க்கையை நாம் அனுபவிப்பது? இதற்குத்தான் முன்னோர்கள் சொல்வார்கள். "அப்பன் செத்தால்தான் அப்பன் அருமை எனவும் உப்பு சமைந்தால் தான் உப்பின் அருமை புரியும்" என்று. புத்திஜீவிகளும், தமிழின துரோகிகளும் இந்த தமிழ் மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? பதவி, பணம் என்னும் எலும்பை விட்டெறிந்தால் சப்பிவிட்டு படுப்பார்கள். அல்லாவிட்டால் இந்தியாவிடமும் நோர்வேயிடமும்தான் முறையிடுவார்கள் அவர்களும் கடைமைக்கு ஒரு கண்டனத்தை வெளியிடுவார்கள். அதோடு சரி.
மேலும் படையினரிடம் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு சிங்கள விகாரைகளில் பிக்குமார்கள் மறுவாழ்வு என்ற பெயரில் அவர்களை பௌத்தத்தையும் சிங்களத்தையும் கற்பித்துவருகிறது, இனி என்னதான் நடந்தாலும் தமிழனுக்கு தட்டிக்கேட்க நாதியில்லை என்ற நிலைக்கு எங்கள் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
இதில் இருந்து எப்படி மீள்வது என்பது போர் வடுக்களையும், போரின் கொடுமையையும் உணர்ந்த தமிழ் இளைஞர்களினதும் புலம் பெயர் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பங்களிப்பிலும்தான் உள்ளது. இன்னும் பதினைந்து வருடங்களில் அழியப்போகும் எம் தமிழ் இனத்தை காப்பதும் எம் மொழியை காப்பதும். உணர்ச்சியுள்ள தமிழர்களில் தான் தங்கியுள்ளது. தர்மி
Wednesday, February 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment