Monday, February 1, 2010

சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவது தமது நோக்கம் அல்ல: இரா.சம்பந்தன் பா.உ

சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவது எமது நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிரான நடவடிக்கை எதனையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறோம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மற்றும் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் ஆகியோர் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவே தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவுக்கும் தனக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் போலியான பிரசாரங்களை முன்வைத்து வருகிறது.

எனினும் தற்போது நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையானதும் கௌரவமானதுமான சமாதானம் ஒன்றை கொண்டு வரவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் பொது மக்கள் மத்தியில் இவ்வாறாக போலியான பிரசாரங்களை கூறி, அவர்களுக்கு இடையில் பிரிவினைகளை தோற்றுவிப்பது நாட்டின் சமாதானத்துக்கு ஏற்புடையதாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், இரண்டு தரப்பினருடனும், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஒரே விடயமே இருதரப்பிடமும் முன்வைக்கப்பட்டதே தவிர மாறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இரண்டு தரப்பினரில் சரத் பொன்சேகா தமது கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினார் எனக்குறிப்பிட்ட சம்பந்தன், இதன் போது தாங்கள் தேசத்துரோகமான கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை என குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கான சுதந்திரமான அரசியல் தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பிலான கோரிக்கைகளையே நாங்கள் முன்வைத்தோம். எனவே தயவு செய்து போலி பிரசாரங்களை சிங்கள மக்கள் நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமது பிரசாரங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும், பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் ஜனாதிபதி தேர்தல் நாளன்று மக்கள் வாக்களிக்க முடியாதவாறு பல்வேறு சதிகளை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில் பொது மக்கள் அச்சுறுத்தப்பட்டனர் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

எனினும் இவற்றுக்கு மத்தியில் பொது மக்கள் தமக்கு வாக்களித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் ஜனாதிபதியின் இணைப்பாளர் இனியபாரதி, தாம் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்வது தொடர்பில் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிநாடு பிரித்துப் பெறும் எண்ணம் இல்லை என தெரிவித்த அவர், கடந்த 1971ம் ஆண்டு, தனி நாட்டு கோரிக்கையுடன் தேர்தல் பிரசாரம் செய்யும் வேட்பாளருக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்துமாறு தாம் அறிக்கை விட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே இலங்கைக்குள், தமிழ் மக்கள் சுதந்திரமாக தமது உரிமைகளை அனுபவித்து கௌரவமாக வாழ வேண்டும் என்பதையே தாம் விரும்புவதாகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு அங்குள்ள மக்கள் சிறந்த பதிலை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அரசாங்கம் அவசரமான அரசியலமைப்பு சீர்திருத்தம் என்ற அழுத்தத்தை எதிர்க்கட்சிகள் மீது திணிக்காது, அது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment