Thursday, January 28, 2010

தான் 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்த போதும் தமது வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன : சரத் பொன்சேகா

தாம் இராணுவப்புரட்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டதாக அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

தாம் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இருந்து இந்த திட்டத்தை தாம் வகுத்ததாக அரசாங்கம் நினைக்கிறது.எனினும் தாம் அவ்வாறான திட்டம் ஒன்றை கொண்டிருக்கவில்லை என சரத் பொன்சேகா இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

“அன்னம்” சின்னத்தின் கீழ் தாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்த அவர், தாம் மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையான மாற்றம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றிப்பெற்ற போதும் அந்த முடிவுகள் அழிக்கப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்போது நான்கு பொலிஸ்காரர்கள் மாத்திரமே தமது பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தமக்கு 70 பேர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர் எனினும் நாட்டின் ஜனாதிபதி நாட்டின் ச்ட்டத்தை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் தம்மை சித்திரவதை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தமது வீட்டையும் எதிர்க்கட்சி தலைவரின் வீட்டையும் சோதனையிடுவதற்கும் தமது கடவுச்சீட்டை தடைசெய்வதற்கும் தம்மையும் தமது மருமகனையும் ரகசிய பொலிஸாரின் முன்னிலையில் ஆஜர்செய்வதற்கும் திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்த அவர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பவும் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட வாக்கு எண்ணும் பணிகளின் போது தாம் மஹிந்த ராஜபக்சவை காட்டிலும் 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா,இந்த வாக்கு எண்ணிக்கை அப்படியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு - கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் வாக்காளர்கள் தமக்கு அளித்த வாக்குகளை மாற்றியமைத்து மக்களுக்கு காட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இது நாட்டில் மீண்டும் பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்கும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர அநுரதப்புரம், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட செயலகங்களில் வாக்கு எண்ணுபவர்கள் பலர் துரத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வாக்குப்பெட்டிகளை தம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளரின் தலைக்கு குறிவைத்து துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக, தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறை ஒன்று தேர்தல்கள் திணைக்களத்தில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர முதல் தடவையாக தேர்தல்கள் ஆணையாளரின் கையொப்பமில்லாமல் தேர்தல் முடிவுகள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு வாசிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளர்.

No comments:

Post a Comment