Sunday, January 24, 2010

இந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டு

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் பகுதிக்கு அபயம் தேடி வந்த லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களை முட்கம்பி கூட்டுக்குல் முடக்கிவைத்திருந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் மீது பாசத்தை பொழிய தொடங்கிவிட்டது. இந்தக் கபட நாடகத்தையெல்லாம் அரங்கேற்றி தமிழ் மக்களின் வாக்குகளில் குறிவைத்திருக்கும் அரசாங்கத்திற்கு நாட்டின் சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்;தலில் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தோட்டக் கமிடட்டி தலைவர்கள், மற்றும் மகளிர் அணி, இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது : "இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களுக்கு தமது எண்ணத்தை வெளிபடுத்துவதற்கு கிடைத்த அற்புதமான சந்தர்ப்பமாகும். வடக்கிலே உரிமைக்கோரி ஆயுதம் ஏந்தியவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு விட்டார்கள்.தற்போது தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் ஆயுதமான வாக்குரிமையைக் கொண்டு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க துணிச்சலுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் யுத்தம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார். யுத்தத்தில் காட்டிய கரிசனையை யுத்த களத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் விடயத்தில் காட்ட தவறிவிட்டார். பல்லாயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் தவித்தபோது ஐரோப்பிய தமிழர்களால் அனுப்பப்பட்ட கப்டன் அலி கப்பலின் நிவாரணப்பொருட்கள் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்க அரசு எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டிருப்பாரேயானால் இரண்டு வருடங்கள் மீதமிருக்கின்ற போது இந்தத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு காட்டிய அவசரத்தைப்போல், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற பெரும்பான்மையுடன், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் பெற்று இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எல்லா வாய்ப்புக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு இருந்த போதும். பெரும்பான்மை மக்கள் யுத்த பெருமிதத்தில் இருந்து மீள்வதற்கு முன்பு தமிழர்களைக் கொன்று குவித்த இரத்த கறை படிந்த கைகளை காண்பித்து தேர்தல் வெற்றியைத் தட்டிப்பறித்து விடவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.அத்துடன் ஒருபுரத்தில் இனவாதம் பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்சவையும், மறுபுரத்தில் மாற்று இனத்தினரின் உரிமையை மதிக்காத பிக்குகளின் கடசியான ஜாதிக எல உருமயவையும் வைத்துக்கொண்டு ஜனாதிபதியினால் எவ்வாறு இனப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியும்.? தற்போது நடக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக நெருக்கமான போட்டியைக் கொண்டிருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வரலாற்று பாத்திரத்தை வகிக்க போகின்றன.வரலாற்றில் என்றுமே இணைந்து செயற்படாத பல தமிழ் முஸ்லிம் கட்சிகள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் அணியில் ஒரே நோக்கத்தேடு ஒன்றுபட்டுள்ளன. இதனால் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது. சரத் பொன்சேகா ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உட்பட நாம் அவருடன் உடன்பட்டுக்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க நடவடிக்கை எடுப்போம். அதனால் மலையகத்தில் சரத் பொன்சேகாவை முழுமையாக வெற்றிபெற செய்ய வேண்டும்." எனத்தெரிவித்தார்.

No comments:

Post a Comment