Sunday, January 31, 2010

புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ?




ஏதோ நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார். நெருப்பில்லாமல் புகைக்க முடியாது.
இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு அவசர விஜயம்..
தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும் பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது. இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது. தனது உயிரைப் பாதுகாக்கும்படி அவர் இந்தியா தவிர்ந்த மற்றய உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இலங்கை செல்லும் இந்திய பாதுகாப்பு செயலர் இந்தப் புகையையும் பகையையும் போக்க முயலக்கூடும்.

புதுமாத்தளன் போரில் பாரிய மர்மமான நிகழ்வுகள் நடைபெற்றதாக மக்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மைகள் வெளி வந்தாலும் அவை பொய்போலவே மாறிவிடக் கூடியவாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சகல வதந்திகளும் மர்மக் கதைகள் போல ஊர்ஜிதம் செய்யப்படாதவாறு உலா வருகின்றன. இதில் மறைந்திருக்கும் உண்மையும் பொய்யாகிவிடக்கூடிய அபாயமுள்ளது.

மர்மங்களில் முக்கியமானது வே. பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்தினரும் எங்கே என்ற கேள்வியாகும். இதற்கான பதிலை தேர்தல் காலத்தில் வெளியிடாமல் தேர்தலை நடாத்தியது சரத் பொன்சேகாவிற்கு பெரும் பின்னடைவை தந்தது. தற்போது செல்வாக்கு இழந்துவிடக்கூடிய அபாயத்தில் உள்ள சரத் பொன்சேகா உண்மைகளை வெளியிட்டால் சிறை செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் வழங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு.
தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம் தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

“எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது”இப்போது என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்” என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது”எதிர்க்கட்சித் தலைவரை அல்லது என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது”என சரத் பொன்சேகா கூறினார்

No comments:

Post a Comment