Wednesday, January 27, 2010

கண்ணாடிக் குவளைகளில் தமிழினத்தின் வாழ்வு (வீடியோ இணைப்பு)

கனடாவில் உள்ள வன்கூவர் [Vancouver] நகரில் அமைந்துள்ள மானிடவியல் அரும்பொருள் காட்சியகத்தில் [Museum of Anthropology] நேற்றுமுன்தினம் [23-01-10] ஈழத் தமிழரான ஓவியர் தாமோதரம்பிள்ளை சனாதனனின் படைப்புகள் கண்காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கண்காட்சி எட்டு மாதங்கள் வரையில் தொடரும் என்றும், வன்கூவரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கவும், பார்க்கவும் உலகெங்கும் இருந்து வருவோருக்கு நெஞ்சு கனக்கும் அரிய நிகழ்வாக இது இருக்கும் என்றும் ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓவியர் சனாதனனால் 2009 செப்ரெம்பரில் கனடிய தமிழர் பேரவையின் [Canadian Tamil Congress - CTC] வன்கூவர் கிளை, அந்த பகுதி தமிழ் சமூகத்தின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த படைப்பு வேலைத்திட்டம் தற்போது முடிக்கப்பட்டு 'இல்லம்' [ Imag(in)ing 'Home' ] என்னும் தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் சமூகத்தின் 300 தனி நபர்களின் நினைவுகளின் எச்சங்களாக உள்ள அவர்களின் பாவனைப் பொருட்களை ஒரு கூட்டு நினைவுத் தொகுப்பாக இணைத்து படைப்பாக்கம் செய்துள்ளார் ஓவியர் தா.சனாதனன்.

இதில் இவரது கலைத்திறன் என்பது - ஒவ்வொரு பாவனைப் பொருளும் கண்ணாடிப் போத்தலுக்குள் அடைக்கப்பட்டிருப்பது என்பது தான்.

கண்ணாடிப் போத்தல் என்பது உறைந்த நினைவென்றும், கனவாகிவிட்ட வாழ்வென்றும் குறியீடாகி நிற்க, நினைவுகளை தாங்கி நிற்கும் தனித்தனி பாவனைப் பொருட்கள் வரலாற்றின் சமூக கூட்டு நினைவை கிளர்த்தி விடுகின்றன.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள ஐவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் தனது "கலாநிதி" பட்டத்தை பெற்ற தாமோதரம்பிள்ளை சனாதனன் யாழ்ப்பாண பல்கலைகழக நுண்கலைத்துறை ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.

No comments:

Post a Comment