Sunday, January 24, 2010

பிரபாகரனை படைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாராயணனை அகற்ற மன்மோகன் விருப்பப்படவில்லை: கசியும் தகவல்கள்

இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அவரது பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். அவரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பணியில் இருத்துவதற்கு காங்கிரஸ் தலைமை தீர்மானித்து பணி நியமனம் வழங்கி விட்டது.மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவரான நாராயணனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மத்திய அரசை தூண்டியது எது என்ற விபரங்கள் இப்போது மெல்லக் கசிய தொடங்கியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.அதில், முதலாவது காரணம், தற்போதைய உள்துறை அமைச்சரும் தமிழ் நாட்டுக்காரருமான ப.சிதம்பரத்துடன் நாராயணனுக்கு உறவுகள் நன்றாக இல்லை என்பது.மும்பையில் பாகிஸ்தான் ஆதரவு ஆயுதப் படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.பதவியேற்றதுமே இந்திய வெளியக உளவுப் பிரிவான �றோ�வின் தலைவரும், புலனாய்வுத் துறைத் தலைவரும் தனக்கு நேரடியாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு சிதம்பரம் தெளிவுபடுத்தி விட்டார்.முன்னதாக, அந்த அறிக்கைகள் அனைத்தும் நாராயணனிடமே சமர்ப்பிக்கப்பட்டு வந்தன. அவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்குவார். அவ்வாறு செய்வது நாராயணனுக்கு இலகுவானதாகவும் வசதியானதாகவும் இருந்தது.இந்த நிலையில், தான் விரும்பியபடி விடயங்கள் நடக்கவில்லை என்ற உடனேயே தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையம் [National Counter Terrorism Centre-NCTC] என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை சிதம்பரம் வைத்தார்.நாராயணனுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுதான்.அந்த முன்மொழிவுகளை எதிர்த்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வாதிடுவதற்கு முயன்றார். ஆனால், சிதம்பரம் தனது அடிகளை உறுதியாக எடுத்து வைத்தார்.அத்துடன், நாட்டின் உள்ளகப் பாதுகாப்புக்குத் தானே பொறுப்பு என்றால், அதற்குத் தேவையான, பொருத்தமான சாதனங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிதம்பரம் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் [National Technical Research Organisation], புலனாய்வுக் கூட்டுக் குழு [Joint Intelligence Committee], வான் பயணங்கள் தொடர்பான ஆய்வு மையம் [Aviation Research Centre], ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு [RAW] ஆகிய அனைத்தும் சிதம்பரம் ஏற்படுத்திய புதிய அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன.இந்த நகர்வுகள் எல்லாம் நாராயணனுக்கு வேலை இல்லாத நிலையை ஏற்படுத்தியதுடன் அவரது அதிகாரங்களையும் பெருமளவில் குறைத்தன.சிதம்பரம் - நாராயணன் இடையிலான இந்தப் பிணக்குகள் எல்லாம், தெலுங்கானா பிரச்சினைகளைக் கையாள்வதற்காக காங்கிரஸ் கட்சியால் சிதம்பரம் நியமிக்கப்பட்டதற்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தன.தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கேட்டு தெலுங்கானா ராஜ்ட்ர சமித்தி தலைவர் ரி.ஆர்.சந்திரசேகர ராவ் [Telangana Rashtra Samiti president T R Chandrasekhara Rao] காலவரையறை அற்ற உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினார்.இதனையொட்டி கடந்த நவம்பர், டிசெம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் பெரும் வன்முறைகள் வெடித்தன. இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நாராயணன் சர்ச்சைக்குரிய தகவல்களை அரசுக்கு வழங்கினார்.பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக புதுடில்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்ட புலனாய்வுத் துறை மூத்த அதிகாரியின் முடிவுகளில் நாராயணன் மிகக் காத்திரமாகச் செல்வாக்குச் செலுத்தினார் என்று சொல்கின்றன அரசியல் வட்டாரங்கள்.நாராயணனின் தகவல்களின் அடிப்படையில், தெலுங்கான தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று டிசெம்பர் 6ஆம் நாள் பின்னிரவில் சிதம்பரம் அறிவித்தார்.நாராயணனின் காய் நகர்த்தலில் விழுந்த சிதம்பரம் அதற்கான விளைவை அடுத்த நாளே எதிர்கொண்டார். எதிர்க் கட்சிகள் அவரைத் தும்புபறக்க விளாசி விமர்சித்தன. அதேசமயத்தில் தெலுங்கானா பிரச்சினையும் மேலும் தீவிரமடைந்தது.நாராயணனின் நீக்கத்துக்கான அடுத்த காரணம், 26/11 மும்பைத் தாக்குதல் தொடர்பாக அவர் பாகிஸ்தான் போஸ்ட் [Pakistan post] பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டி. பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் மீளத் தொடங்குவதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற ரீதியில் தான் மறுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் பார்வை வேறானதாக இருந்தது. பயங்கரவாதம் தொடர்பான விடயங்களைத் தீர்த்துக் கொள்வது மற்றும் இரு நாடுகள் இடையில் அமைதியை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் பேச்சுக்களை நடத்துமாறு அமெரிக்காவால் இந்தியாவுக்கு ஆலோசனையும் அழுத்தமும் கொடுக்கப்படுகிறது.நாராயணனின் ஆலோசனைகள் இந்த விடயத்தில் புறக்கணிக்கப்பட்டதுடன், ஷாம் எல்-ஷேக்கில் [Sharm el-Sheikh] கூட்டறிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இந்தச் சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும், 26/11 மும்பைத் தாக்குதலின் பின்னர் அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்த ஒரே நபர் நாராயணன்தான். தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்குப் பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் [Shivraj Patil], மகாராஷ்ரா முதல்வர் விலாஸ்ராவோ தேஷ்முக் [Vilasrao Deshmukh] ஆகியோர் பதவி விலகி இருந்தனர்.அந்தச் சமயத்திலேயே நாராயணனும் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். எனினும் மன்மோகன் சிங்குடன் அவருக்கு இருந்த நெருக்கம் அவரைக் காப்பாற்றியது.நாராயணனின் இரத்தத்தை உறிஞ்ச அப்போதே பல தரப்புக்களும் காத்துக் கொண்டிருந்த போதும் மன்மோகன் சிங் ஏன் அவரைக் காப்பாற்றினார்?தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.கருணாநிதிக்கு நெருக்கமானவர் நாராயணன் என்பதே அதற்குக் காரணம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.ஈழத் தமிழர்கள் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்காப் படைகள் நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் நாராயணனை அகற்ற மன்மோகன் சிங் விருப்பப்படவில்லை.ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் நாடு அரசு எந்த விதப் பிரச்சினைகளையும் எழுப்பக்கூடாது என்பதில் மன்மோகன் சிங் மிகக் கவனமாக இருந்தார். அதனாலேயே அன்று நாராயணனின் தலை தப்பியது.சிதம்பரம் உருவாக்கிய புதிய அமைப்பு எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.ஆனால், வெளிவிவகாரத் துறையின் கொள்கை வகுப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அவர்களின் பதவி அமையும்.இனிவரும் காலங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது ஒரு இராஜதந்திர வகிபாகத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்று புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு மேலும் தேவைப்பட்டாலும், அதற்கான வரையறைகள் வேறாக இருக்கும்.

No comments:

Post a Comment