Thursday, January 28, 2010

ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

இலங்கையில் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் விடுதலைப்புலிகள் கூறி இருப்பதாவது:-

கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளை கடந்து புதிய வடிவில் விடுதலைப் பயணத்தில் பயணிக்கும் வகையில் வெளிவந்துள்ளோம். ஆனால் நமது நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த விடாத சில தீய சக்திகள் உளவியல் போரை நடத்தி வருகின்றன.

இதில் சிங்கள அரசுக்கு துணைபோகும் எமது இயக்க உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு செயல்படுபவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு குமரன் பத்மநாதன் (கேபி) என்பவரை சில வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றுள்ளது. அப்போது எமது அமைப்பு சார்பாக இயங்கி வந்த அனைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும், இயக்க உறுப்பினர்கள் சிலரும் அவரை ரகசியமாக சந்தித்து பேசியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இலங்கை அரசின் துரோக செயலுக்குள் சிக்கி, எமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இயக்கத்தை அழிக்கவும், தலைவர்கள் பற்றி அவதூறுகளை பரப்பவும், பிரதேச வேறுபாடுகளை தூண்டிவிடுவதுமான துரோகச் செயல்களை இவர்கள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களது இனதுரோக வியூகங்களை ஆதாரங்களுடன் எம்மால் வெளியிட முடியும்.

என்றாலும் தடம் மாறிய அவர்கள் மனம் திருந்தி மீண்டும் விடுதலைப்பயணப் பாதைக்கு வந்து எம்மோடு அணிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் கருத்து வேறுபாடுகளுடன் இருப்பது பிரதான எதிரிக்கு வழி அமைத்து கொடுத்துவிடும்.

எமது லட்சியம் தமிழ்த் தேசியம் மட்டுமே. இதை மனதில் நிறுத்தி ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும். நாம் அனைவரும் ஒன்று பட்டு நாம் யார் என்பதை சிங்கள பேரினவாதத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment