Wednesday, January 27, 2010

தேசியத் தலைமையை விலை பேசிய கூட்டமைப்பின் முகத்தில் கரியைப் பூசியுள்ள தமிழ்மக்கள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை வீதமானோர் வாக்களித்தனர் என்பது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும், வடக்கு,கிழக்கில் சராசரியான வாக்களிப்பே இடம்பெறவில்லை.

குறிப்பாக தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்வேயில்லை.

சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்ஸவும் தமிழ் மக்களுக்கு எதிராக கொடுமையான போரை நடத்தி அவர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளவர்கள்.

அத்துடன் இயல்பாகவே யாழ்ப்பாண மக்கள் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை.

அது இந்தத் தேர்தலிலும் நிரூபணமாகியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 15- 20 வீதமான வாக்குகளே பதிவாகதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.1982ம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் எப்போதுமே 21 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு யாழ்ப்பாணத்தில் நடந்தது கிடையாது.

வன்னிப் பகுதியிலும், கிழக்கிலும் கூட தமிழ் மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கவில்லை என்றே தெரிகிறது.

இதற்குக் காரணம் பிரதான வேட்பாளர்கள் மீதான வெறுப்பும், இந்தத் தேர்தல் தமக்கு எந்தப் பயனையும் தரப் போவதில்லை என்ற எண்ணமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் அதிகளவில் வாக்களிக்காது போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கைகளிலும் இரத்தக் கறையைப் பூசிக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை தமிழ்மக்கள் உறுதியாக நிராகரித்திருக்கின்றனர்.

இது அவர்களுக்கு சரியானதொரு பாடமாக அமைந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு முரணாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் இந்தத் தேர்தலின் மூலமாவது உணர்ந்து கொள்ளட்டும்.

சரத் பொன்சேகாவுக்கு அதரவளிக்கும் கூட்டத்தில் மாவீரர்களுக்கு மெனஅஞ்சலி செலுத்தி அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியது கூட்டமைப்பின் உச்சக்கட்டத் துரோகமாகும்.

ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மரணத்துக்கு காரணமான சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடுமாறு கேட்கும் கூட்டத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி நீலிக்கண்ணீர் வடித்த கூட்டமைப்புக்கு யாழ்ப்பாண மக்கள் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்.

அத்துடன் தமிழ்மக்களின் விருப்பங்களை சரியான முறையில் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தையும் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார் என்பதல்ல முக்கியம்.

எந்தளவு வாக்குகள் பதிவாகின என்பதே முக்கியமானது.

யாழ்.மாவட்த்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 72 வீதமானோருக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

ஆனால் சுமார் 20 வீதமானோரே வாக்களிப்பில் பங்கேற்றிருப்பதானது மக்களின் மனநிலை என்னவென்பதை தெளிவாக இனங்காட்டியுள்ளது.

அதேவேளை, தமிழ்மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் எடுத்த முடிவு தவறானது என்பதை உணரத் தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பு, தமக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்க நீதியான தேர்தல் நடைபெறவில்லை என்று புதிய பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற, உள்ளுராட்சித் தேர்தல்களில் இடமபெற்ற அளவுக்குக் கூட வாக்களிப்பு நடக்கவில்லை.

முன்னரை விட அதிக அச்சுறுத்தல் தற்போது இருந்ததாகக் கூற முடியாத நிலையில் வாக்களிப்பு குறைந்ததற்கு வழக்கமான சப்பை நியாயங்களை கூறமுடியாது.

அச்சுறுத்தலால் வாக்களிப்பு குறைந்து போனதாகக் கூறி தமது முடிவின் தவறை நியாயப்படுத்த கூட்டமைப்பு முற்படுகிறது.


இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவானதொரு கருத்தை சொல்லியுள்ளனர்.

தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் வதைத்தவர்களுக்கு தமது வாக்குகள் இல்லை என்பது ஒன்று.

இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தின் தலைமையைத் தீர்மானிப்பதற்கானதே தவிர எமக்கானது அல்ல என்பது இரண்டாவது.

இந்த யதார்த்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேலாவது புரிந்து நடக்குமா?

No comments:

Post a Comment