Wednesday, January 27, 2010

நாடு கடந்த அரசாங்கத்தை பன்னாட்டு சமூகத்தால் நிராகரிக்க முடியாது: நோர்வே கூட்டத்தில் உருத்திரகுமார்.

வெளிப்படைத்தன்மையுடனும் பரந்துபட்ட மக்கள் பங்களிப்புடனும் ஐனநாயக விழுமியங்களுக்கு அமைய உருவாக்கப்படவுள்ள நாடு கடந்த அரசாங்கத்தினை பன்னாட்டு சமூகத்தினால் நிராகரிக்க முடியாது என உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கம் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணெலி மூலம் நேரடி உரையாற்றும் போது நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் வி. உருத்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஞாயிற்றுக்கிழமை [24-01-10] நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இப்பொதுக்கூட்டத்தில் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான மதியுரைக் குழுவின் அறிக்கையின் அறிமுகமும் கருத்துப்பரிமாற்றமும் இடம்பெற்றது.

நோர்வே செயற்பாட்டுக் குழுவின் ஒஸ்லோ தொடர்பாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நோர்வே செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் கில்லறி லியோ, மதியுரைக்குழு சார்பில் பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அறிக்கையினை அறிமுகம் செய்து வைத்ததோடு, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமார் காணொலி ஊடாக நேரடி உரையாற்றியதோடு, பொதுமக்களின் கேள்விகள், ஐயங்களுக்கும் பதில்களை வழங்கினார்.

நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான தவறான புரிதல்கள் மற்றும் மதியுரைக்குழுவின் அறிக்கை தொடர்பான திரிபுபடுத்தப்பட்ட, அபாண்டமான குற்றச்சாட்டுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உரிய விளக்கங்களும் அவரால் வழங்கப்பட்டன.

தனது உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமென்ற இந்த புதிய அரசியல் ஆடுகளத்தின் தீர்மான சக்திகள் தமிழ் மக்களே. கடந்த காலங்களில் சிறிலங்கா பேரினவாதத்தால், பன்னாட்டு சமூகங்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் மீது பரப்பப்பட்ட “பயங்கரவாத சாயம்” இந்தப் புதிய ஆடுகளத்தில் எடுபடாது.

கொடுங்கோன்மை அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இனங்களின் தன்னாட்சி உரிமை [Self-determination] பற்றிய அனைத்துலக சட்டங்களை மேற்கோள் காட்டிய உருத்ரகுமாரன் அவர்கள், அனைத்துலக அரங்கில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் புறநிலையில் சுதந்திரமும் இறைமையும் [independent and sovereign state of Tamileelam] கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கும் தமிழீழ மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ள அனைத்துலகம் தலைப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் [Internal Self-determination] அடிப்படையில் தீர்வு என்பதான கருத்தை தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

கடந்த ஆண்டு மே மாதத்துடன் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை வேரறுத்துவிட்டதாக சிங்களம் கொக்கரித்த நிலையில், தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகள் மீதான உறுதிப்பாட்டை அழித்துவிட முடியாதென்பதற்கான பதிலடியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டம், முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய ஒரு மாதத்திற்குள்ளாகவே முன்வைக்கப்பட்டது.

அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசியல் முன்னெடுப்பை வெற்றிகரமாக முன்நகர்த்திச் செல்லும் பட்சத்தில் இலங்கைத் தீவில் இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசு நிச்சயம் அமையும் என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான நோர்வே செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற விரும்புவோருக்கான அழைப்பும் இக்கூட்டத்தினூடாக விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

infonorway@govtamileelam.org

web: www.govtamileelam.org
(info@govtamileelam.org)

No comments:

Post a Comment