Sunday, January 24, 2010

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ

30 வருடங்களுக்கும் மேற்பட்ட ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்து வெற்றி வாகை சூடியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதை குழியிலிருந்து மீண்டும் எழுந்து வந்த துட்ட கைமுனு மன்னனாகவே சிங்கள மக்களால் பார்க்கப்பட்டார், வணங்கப்பட்டார். ஊடகங்கள் புகழ் மாலை சூட்டின. ''மகிந்தவே எங்க ராஜாவே.'' என்று பாடல்கள் எங்கும் ஒலித்தன. ( பாடலை பாடிய அழகிய பெண்ணோ மகிந்தவின் மஞ்சத்தில் சிணுங்கியது வேறு கதை). இன்னும் 20 வருடங்களுக்கு இலங்கையில் இவரது ஆட்சிக்கு மாற்று கிடையாது என வெளிப்படையாகவே பேசப்பட்டது. எதிர்கட்சி அரசியல்வாதிகள், ஒன்று அரசாங்க பக்கத்திற்கு தாவி ஏதாவது புண்ணாக்கு பதவிகளை வாங்கி கொண்டு ஜென்ம சாபல்யம் பெற வேண்டும், அல்லது புத்த காயாவுக்கு துறவறம் போக வேண்டும் என்ற நிலை இருந்தது. என்ன கொடுமை இது எல்லாம் தலை கீழாக மாறிப்போய் விட்டது. ஒரு கண்கட்டு வித்தை போல பார்த்திருக்க சகலமும் மாறிப்போய்விட்டது. யாராவது மகிந்தவிற்கு சூனியம் வைத்து விட்டார்களா? என்று சாதாரண சிங்கள மக்கள் ஆச்சரியப்படும் நிலை. ஆனால் மகிந்த ராஜபக்ஷ சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டதை இப்போது முழு நாடுமே பார்த்து சிரிக்கிறது. புலிகள் பின்வாங்கி ஓட... விரட்டி விரட்டி அடித்தார் சரி, ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்றார் சரி,உணவையும் மருந்தையும் போர் ஆயுதமாக மாற்றினார் சரி, ஒரு சிறு பரப்புக்குள் இரண்டரை லட்சம் மக்களை நெருக்கி குண்டு வீச்சுகளால் நொருக்கித்தள்ளினார் சரி, காயம்பட்ட இருபதினாயிரம் மக்களை புல்டோசர்களால் சமாதி கட்டினார் சரி, எல்லாம் சரியாகத்தான் நடந்தது..... ஆனால் கடைசியில் தானே சீவி வைத்த ஆப்பின் மீதே அழகாக ஏறி உட்கார்ந்தார் மஹிந்த. அங்குதான் எல்லாம் பிழைத்துப்போனது. இலங்கையில் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 6 வருடங்கள். மகிந்தவின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றன. புலிகளை வென்ற சூட்டோடு சூட்டாக ஜனாதிபதி தேர்தலை வைத்தால் மக்கள் அள்ளிப்போடுவர்கள் என்பது அவரது கணிப்பாக இருந்தது. இந்த கணிப்பு மிக மிக சரியான ஒன்றாகவே இருந்தது. மகிந்தவிற்கு போட்டியே இருக்கவில்லை. (ரணில் எல்லாம் பாவம் பச்சப்பிள்ளைகள். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கூட இருந்த சரத் பொன்சேகாவிற்கு வைக்கப்போன ஆப்புத்தான் இப்போது மகிந்தவின் பின்புறம் சொருகி இருக்கிறது. ரணில்- புலிகள் பேச்சின் போதே ஒப்பந்தப்படி உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள குடியமர விட மாட்டேன் என வீரம் காட்டிய சரத் பொன்சேகாவை பாவித்து யுத்தத்தை வென்றார் மகிந்த. பின்னர் சரத் பொன்சேகா அவருக்கு தேவை இல்லாமல் போனார். வன்னியில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கம் என்றாலும் சரி, இன்னும் அரை நூற்றாண்டுக்கு தானும் தனது குடும்பமும் நாட்டை அடிக்கப்போகும் கொள்ளையில் என்றாலும் சரி, அதில் சரத் பொன்சேகாவுக்கும் பங்கு கொடுப்பதை மகிந்த விரும்பவில்லை. தனக்கு குறைவான செல்வாக்கோடு கூட யாரும் தனக்கு அருகில் நிற்க கூடாது, கொள்ளை அடிக்கின்ற செல்வங்கள் எல்லாவற்றையும் தானும் தனது குடும்பமும் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மகிந்தவின் பேராசைதான் அவரது இன்றைய நிலைக்கு காரணம். சரத்பொன்சேகா தூக்கி வீசப்பட்ட சூழலை அழகாக பயன்படுத்திய எதிர்கட்சிகள், சரத் பொன்சேகாவுக்கு வேப்பிலை அடித்து உருவேற்றி இப்போது மகிந்தவுக்கு எதிராக களமிறக்கி உள்ளன. மகிந்தவின் விரலை வைத்தே அவரது கண்ணை குத்தும் ஒரு அட்டகாச முயற்சிதான் இது.வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட மகிந்த இப்போது துள்ளி குதிக்கிறார். அண்மையில் கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆத்திரப்பட்டு (நடிகர் விஜய் போல) சத்தம் போட்டிருக்கிறார். மனிதருக்கு அடிக்கடி இரத்தம் கொதிப்பதும் அதை இறக்க சோமபானத்தை அதிகமாக அருந்துவதும் இப்போது ஊடகங்களில் கிசு கிசுவாகி விட்டது. செய்தி ஊடகங்கள் மகிந்தவும் தம்பிமாரும் அடித்த கொள்ளைகளை வெளிப்படையாக பேசுகின்றன. மக்கள் மத்தியிலும் அன்னாரின் மகாராஜா என்ற மாயை கிழிந்து நாறத்தொடங்கியுள்ளது. ''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே...''என்று மகிந்த புலம்ப வேண்டி வந்துவிட்டது. விக்கெட் இழப்பு இல்லாமல் 100 ஓவர்களில் 5 ரன்கள் அடித்து வெல்ல வேண்டிய போட்டியை, இப்போது கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டில் 20 ரன்களை அடித்து வெல்ல வேண்டிய நிலைக்கு மாற்றி விட்டார். அவர் வென்றாலும் கூட இப்போது அவர் அனுபவிக்கின்ற கொடுமையை அவர் ஆயுளுக்கும் மறக்க மாட்டார். நம்ப முடியாத இந்த தலை கீழ் மாற்றத்திற்கு சூனியத்தை தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்?அதுவும் மகிந்த சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்." நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்

No comments:

Post a Comment