Friday, January 29, 2010

கிளிநொச்சியில் வர்த்தகர் அடித்துக்கொலை

பாண்டியன்குளம் மல்லாவியைச் சேர்ந்த கிளிநொச்சி ஆனந்தபுரம் கலைகடல் வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சசிறூபன் (சுதன்) என்பவர் இனந்தெரியாதோரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இவர் கடந்த 25ம் திகதி அன்று மாலை அவரின் சகோதரனின் வீட்டுப் படலையில் வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டு பின் அவர் அணிந்திருந்த வெனியன் மூலம் கல்லோடு கட்டி அருகிலுள்ள கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஆனந்தபுர பகுதி முழத்திற்கு முழம் இராணுவத்தினரால் சூழப்பட்ட பகுதியாகும்.

கொலைசெய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நபர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்கான சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் குறிப்பிட்ட அந்நாளில் தன் சகோதரனின் வீட்டைப் பார்வையிடுவதற்காகவே சென்றிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் சென்ற இவரின் செல்லிடப்பேசி, மணிபேர்ஸ், கைக்கடிகாரம், துவிச்சக்கரவண்டி எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதவான் அலெக்ஸ்ராஜா கொலைசெய்யப்பட்டவரின் உடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய பின் புதைக்குமாறு பணிப்பு வழங்கியதை அடுத்து, வவுனியா கந்தபுரம் மயானத்தில் உலடம் புதைக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்கு முதன்நாள் நடைபெற்ற இக்கொலையினால் மீளக்குடியேறும் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

இராணுவம்,பொலிஸ் அதிகமாகவுள்ள இப்பகுதியில் இம்மர்மக்கொலையானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment