புதன்கிழமை, 06 சனவரி 2010, 04:09.34 AM GMT +05:30 ]
கடந்த காலத்தில் இலங்கையில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இலங்கையில் அனைத்துப் பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள் தமிழ் அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகின்றது. வெறுமனே சந்தேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பலர் மீது குற்றப்பத்திரிகைகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை எனினும் அவர்கள் ஒன்றரை தசாப்தங்களை சிறைகளில் கழித்துள்ளனர்.
கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரையும் விடவும் மகிந்த ராஐபக்சவின் கொடுங்கோலாட்சிக் காலத்தில் முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு மிக அதிக எண்ணிக்கையான தமிழர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறைகளில் அடைக்ப்பட்டுள்ளனர்.
இக் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி காலத்திற்கு காலம் உண்ணாவிரதங்களையும் எதிர்ப்பு போராட்டங்களையும் நடாத்தியுள்ளனர் எனினும் அவர்களது வாக்குறுதிகளை எந்த அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக மகிந்த அரசாங்கம் இவர்களது கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றப் போவதில்லை போராட்ட உணர்வுள்ளவர்கள் என்று சந்தேகிக்கும் அனைத்து தமிழ் இளைஞர்கள் யுவதிகளையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே மகிந்த சகோதரர்களின் ஒரே வெறியாக உள்ளது.
இந்நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர். இவர்களது கோரிக்கையை ஆட்சியிலுள்ள மகிந்த ராஐபக்ச அரசு ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லை.
போர் முடிவடைந்துள்ள நிலையில் ஐநா மனித உரிமை அமைப்புக்களும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் மற்றும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் கடந்த மே மாதம் 18 ம் திகதிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 12,000 ற்கும் அதிகமானவர்களையும் மற்றும் கடந்த காலத்தில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகின்றேன்.
செ.கஜேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment