Tuesday, January 19, 2010

முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு - புதிய தடுப்பு முகாம்களில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுவிப்பதாக் கூறிக் கொண்டு அவர்களைப் பிரதேச ரீதியாக அமைக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்படி அவர்களின் சொந்த இடங்களுக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ள தடுப்பு முகாம்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 500 முன்னாள் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ளது. இதுதொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க கூறுகையில் - "முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும், வவுனியாவில் 5 இடங்களும், வெலிக்கந்தையில் 3 இடங்களும், திருகோணமலையில் 3 இடங்களும், மட்டக்களப்பில் 4 இடங்களுமாக மொத்தம் 19 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன இவற்றில், "மெனிக் பாம்" பண்ணையில் விரைவில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதே வேளை - வவுனியா பம்பைமடுவில் 1000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் பாரிய நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளின் விருப்பத்தின் அடிப்படையில் தலா 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீன்பிடி, விவசாயம், கணினி, கால்நடை வளர்ப்பு, ஆடை தயாரிப்பு போன்ற துறைகளில் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறு வயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்கை வசதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது� என்று அவர் கூறியுள்ளார். புனர்வாழ்வு என்ற பெயரில் பிரதேச ரீதியான தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்படவுள்ள முன்னாள் போராளிகளுக்கான தொழில்சார் பயிற்சிகள் முடிந்ததும் - சிறிலங்கா அரச அதிபர் நியமிக்கும் நீதிபதிகள் குழு அவர்களை ஆராயவுள்ளது. இந்தக் குழு - ஒவ்வொருவரினதும் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு அமையவே அவர்கள் விடுதலை பற்றித் தீர்மானிக்கப்படும். தற்பொழுது 10,832 முன்னாள் போராளிகள் படையினரின் தடுப்புக் காவலில் இருக்கின்றனர். இவர்களில் 2,500க்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தையும், ஏறக்குறைய 2,500 வரையானோர் கிளிநொச்சியையும், 2,000 க்கும் அதிகமானோர் முல்லைத்தீவையும், ஏறக்குறைய 1,000 பேர் வவுனியாவையும் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 500 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment