07 January, 2010 by admin
எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததுடன் அன்னாருக்கு எனது இதயம் கனத்த அஞ்சலியைச் செலுத்துவதுடன் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் பாரியார் மற்றும் பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஐயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: |
எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தும் நடத்தி வரும் பெரும் தலைவனை எமக்கு கொடுத்திருந்தார் அமரர் வே.வேலுப்பிள்ளை. அது மாத்திரமின்றி எமது தலைவரின் போராட்ட சிந்தனைக்கு மேலும் அவர் வலுவூட்டிருந்தார். நீண்டகாலம் இந்தியாவில் வாழ்ந்தாலும் சமாதான உடன்படிக்கை கைச்சாத்தானதும் தான் தனது மண்ணில் மக்களோடு மக்களாக வாழவேண்டும் என வன்னியைச் சென்றடைந்தவர் இறுதிப்போர் நடைபெறும் வரையிலும் வன்னியை விட்டு வெளியேறாது மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்தார். இறுதியாக சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் மிகவும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் மனிதாபிமானமற்ற முறையில் கொழுப்புக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய வைத்திய வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பிரபாகரனின் பெற்றோர் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மனித உரிமை அமைப்புகளோ உறவினர்களோ பார்வையிடக் கூட சிறிலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அவர் பல உபாதைகளுக்கு மத்தியில் சிறிலங்காவின் சிறைமுகாமில் மரணமடைந்துள்ளார். அவர் நினைத்திருந்தால் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தனது பிள்ளைகளுடனோ சுகமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் இறுதி வரை தனது சொந்த மண்ணில் மக்களுடன் மக்களாக வாழவேண்டும் என்ற விடாப்பிடியுடன் இருந்தார்.
அவரின் மரணச் இச்செய்தி எனக்கு மாத்திரமின்றி எனது மாவட்ட மக்களுக்கும் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அது மாத்திரமின்றி உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் அன்னாரின் மறைவு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கின்றேன் என ஐயானந்தமூர்த்தி விடுத்துள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment