Thursday, January 21, 2010

நா.உ கஜேந்திரன் உடனும் நாட்டைவிட்டுச் வெளியேறவேண்டும்

21 ஜனவரி, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கும், இன்னும் சில யாழ் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் எச்சரிக்கைவிடும் துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமையும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்த இருவரே இந்த துண்டுப்பிரசுரங்களை அங்கு வீசிச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலர் வரவுள்ள தேர்தலில் தமது ஆதரவை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரிவித்து வருகின்றதாகவும், இதற்காக அவர்களைக் கண்டித்து பல்கலைக்கழக சமூகத்துக்கும் இந்த துண்டுப்பிரசுரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு நீதிபதி இளஞ்செழியன், அவரது சகோதரர் இளம்பிறையன் ஆகியோரும் கூட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் அவரின் சகோதரர் ரவீந்திரன் போலவே புலிகளுக்கு ஆதரவானவர்கள் என துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்துண்டுப்பிரசுரத்தில், கஜேந்திரன் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேறவேண்டும், அவ்வாறு வெளியேறத் தவறின் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த அச்சுறுத்தலானது இலங்கை ராணுவம் மற்றும் அவர்களுடன் இணைந்து செயலாற்றும் ஒட்டுக்குழுக்களினால் விடப்படுவதாகவும், இதேபோன்றதொரு அச்சுறுத்தலானது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட 13 பேருக்கு விடப்பட்டிருந்ததாகவும், இதில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் யாழிலிருந்து எமக்கு வந்துள்ள தகவல்கள் கூறுகின்றன.பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிடாமல் அவர்களது பெற்றோர்கள் தடுக்க வேண்டும் என பெற்றோர்களையும் எச்சரித்துள்ளதோடு, பொங்கு தமிழ் நிகழ்வில் தீவிரமாகக் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பெற்றோர் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் இத்துண்டுப் பிரசுரம் மூலம் பயமுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் இப்போது சுதந்திரமாக உள்ளனர். ஆனால் கஜேந்திரனும் பல்கலைக்கழக சமூகமும் இதைக் குழப்பி வருகிறது. கஜேந்திரனுக்கு விடும் கடைசி எச்சரிக்கை இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment