Friday, January 8, 2010

மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும்: யாழ். பல்கலை. ஒன்றிய முன்னாள் செயலாளர்

வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 12:42.46 PM GMT +05:30 ]
தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியில் மிதந்துபோயிருக்கிற தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஒன்றிய முன்னாள் செயலாளர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னாள் செயலாளர், பா.பிரதீபன், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியில் மிதந்துபோயிருக்கிற தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டியுள்ளது. கடந்த கால இலங்கைத் தலைவர்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்றி அழித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைவிதி தமிழ் மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கும் நிலையில் இன்று இருக்கிறது.
தமிழ் இன அழிப்பில் மகிந்த ராஜபக்ஷவுக்கு இணையாக பங்கெடுத்த சரத் பொன்சேகாவுக்கு எப்படி வாக்களிப்பது அல்லது ஆதரவளிப்பது? என்ற கேள்வி எழுகிறது. இருந்தபொழுதும் தற்பொழுதுக்கு மகிந்த ராஜபக்ஷவைத் தமிழ் மக்கள் தோற்கடித்து அவரது குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
தமிழ் மக்களை முகாம்களுக்குள் இன்னும் இந்த அரசு தடுத்து வைத்திருக்கிறது. மக்கள் தங்கள் தேவைகளுக்குரியவாறு வெளியேற முடியாதபடியே முகாம் நிலமைகள் உள்ளன. அங்கு பாஸ் நடைமுறைகள் கொண்டு வந்து மக்களை அரசு கஷ்டப்படுத்துகிறது. இதுவரையில் கால்வாசி மக்கள்தான் மீள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். மிகுதி மக்கள் தடுப்பு முகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் தாங்கியுள்ளார்கள்.
இந்த இரண்டு விடயத்தையும் அரசாங்கம் தன் தேர்தல் - குடும்ப - சர்வாதிகார - இருப்பு சார்ந்த அதிகாரத்திற்காக பயன்படுத்துகிறது. இந்த துஷ்பிரயோகத்திற்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் முக்கியமாக நம் முன்னுள்ளது.
சரத் பொன்சேகா தன்னுடைய தேர்தல் விஞ்ஞானபத்தில் இனப்பிரச்சினை தொடர்பாக எந்த வாக்குறுதியையும் தெரிவிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைவு மற்றும் அரசியல் உரிமை பற்றி எவுதும் குறிப்பிடவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறபோதும் த.தே.கூ வெளிப்படையான ஒப்பந்தத்தை சரத் பொன்சேகாவுடன் செய்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு துரதிஷ்டமும் அவலம் தருகிறதுமான இலங்கை அரசியலில் இந்த தேர்தல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. குழப்பத்தில் விட்டிருக்கிறது.
இந்த தேர்தல் இலங்கை ஜனாதிபதியை தீர்மானிக்கும் பலத்தை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் தேர்தலை புறக்கணித்ததின் காரணமாக நாம் துயரமான விளைவுகளை எதிர்கொண்டிருந்தோம். நிபந்தனைகளுடன் சரத் பொன்சேகாவை ஆதரித்து விளைவுகளை பரீட்சித்துப் பார்க்கவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களாகிய நாம் கூர்மையாக அறிவுபூர்வமாக இந்த ஜனநாயகப் போராட்டத்தை கையாள வேண்டும். தந்திரோபாயமாக செயல்பட வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது பொருத்தமாக இருப்பதால் எமது தமிழ் அரசியல் கட்சிகள் புத்திஜீவிகள் மாணவர்கள் மக்கள் ஒரே நிலைப்பாட்டில் நின்று எமது நிபந்தனைகளுடன் கூடிய நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.
நன்றி, இவ்வண்ணம். பா.பிரதீபன், முன்னாள் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 2006/2007

No comments:

Post a Comment