Tuesday, January 19, 2010

சோரம் போனவர்களின் சொத்தை வியாக்கியானங்கள்!

செவ்வாய்க்கிழமை, 19 சனவரி 2010, 03:49.02 AM GMT +05:30 ]
ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த கூட்டுத் தீர்மானத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தனி வழியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாடானது பலவகையிலும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடு தொடர்பான இறுதிமுடிவெடுத்தலில் பங்கெடுத்து விட்டு இன்னும் தேர்தலில் இருந்து விலகாமல் இருப்பது அவரைப்பற்றிய பல ஐயப்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைத்தீவின் அரசியலில் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலானது அழிக்கப்பட்ட தமிழினத்தின் அவலத்தை வெளிப்படுத்தவும், அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை நிலைநிறுத்தவும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. அப்படியிருந்தும் சிவாஜிலிங்கம் தமிழ்மக்களின் பொது விருப்பத்திற்கெதிராக தனித்து செயற்படுவதன் பின்னணி என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்;.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்றுவரை தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை விட்டுக்கொடுக்காமல் அதை வலியுறுத்தி வரும் ஒரேயொரு தமிழர் சக்தி. விடுதலைப்புலிகளின் பின்னடைவிற்கு பின்னர் கூட்டமைப்புப்பின் தலைமைகள் நினைத்திருந்தால் மகிந்த ராஜபக்ச அவர்களின் அழைப்பையேற்று பதவிகளைப் பெற்று சுகபோக அரசியலை செய்திருக்கலாம்.
தமிழ்த் தேசியத்தின்பால் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழர்களின் அரசியல் அபிலாசை என்ற நேர்கோட்டில் இன்றும் உறுதியுடன் பயணிக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவிற்கு பிற்பட்ட தற்போதைய நிலையில் யார் தடம் மாறிப் போனாலும் அதன் தலைவரான திரு இரா.சம்பந்தன் அவர்களும் அவரோடு இருக்கும் கூட்டமைப்பின் ஏனைய கட்சித்தலைவர்களும் அந்த துடுப்பை தெளிவாகவும், உறுதியாகவும் பிடித்துதமிழினத்தை கரைசேர்ப்பார்கள் என தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்.
அரசியலில் இருப்பவர்களிற்கு கொள்கைப் பற்றும், துணிவும், விலைபோகாத் தன்மையும், பதவிக்கும், சுகபோக வாழ்விற்காகவும், சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட நோக்கங்களுக்காக சோரம் போகாத்தன்மையுமே அடிப்படையாக இருக்க வேண்டும். அதுவும் அரசியல் உரிமைகளுக்காக நீண்ட போராட்டங்களை நடாத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் பலகோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து நிற்கும் தமிழ் மக்களின் அரசியலைப்பற்றி பேசுபவர்கள், தற்போது சிந்திக்க வேண்டியது எதைபெற்றுக் கொடுக்கவேண்டும்? அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதே? முக்கியமானது.
அதைவிடுத்து அவலவாழ்வை வாழும் மக்களை பயன்படுத்தி அவர்களிற்கு ஆசை வார்த்தைகளை கூறி தற்போது பொருத்தமில்லாத திசையில் போக்குக்காட்டியும், உணர்ச்சி வசப்படுத்தும் வார்த்தைகளை தெரிவித்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின்பால் அறியப்பட்ட சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியப் பற்றுறுதியுடன் செயற்படுபவர்களைப்பற்றி பொய் வதந்திகளைக்கூறி தமது சுகபோக வாழ்க்கைக்கும், சுயநோக்கத்திற்காகவும் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.
எப்போதும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடான தாயகம், தேசியம், சுயநிர்ணய கோட்பாடுகளை வலியுறுத்தி நிற்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அண்மையில் நடந்த தமிழரசுக்கட்சியின் அறுபதாவது ஆண்டு நிறைவு நாள் உரையிலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அடிப்படையாக கொண்டதே தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு என வலியுறுத்தி தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றகுழு தலைவருமான திரு. இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றியிருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி ராஜபக்ச அவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது “மகிந்த ராஜபக்ச அவர்களிடம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை திரு. இரா.சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தியதாகவும் இக் கோரிக்கையினூடாக தமிழர்கள் தமக்கான சுயராட்சியத்தை கோருகிறார்கள். எனவே இது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்தெரிவித்ததினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் கொள்கை வழுவாத உறுதியான முடிவைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால், வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒருபகுதியை தமிழ் மக்களிற்கு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இணக்கம் கண்டிருப்பதாக தவறான கருத்துருவாக்கத்தை செய்யும் தனி ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கத்தின் செயற்பாடு அரைவேக்காட்டுத்தனமானதும், கண்டிக்கத்தக்கதுமானதாகும். அது மட்டுமல்ல தமிழ்மக்களின் தேசியத்தை நோக்கி சரியாக செயற்படக்கூடிய தலைமைகளை பிழையாக விமர்சிப்பதனூடாக தமிழ் மக்களை தேசியத்துடன் இணைத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பலவீனப்படுத்தி தமிழ் மக்களை திக்கற்ற அரசியல் வனாந்திரத்திற்குள் தள்ளிவிடும் செயலாகவே சிவாஜிலிங்கத்தின் செயலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தேர்தலில், மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது வெற்றிக்காக தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெறுவதற்கும் தனக்கு எதிராக இருக்கக்கூடிய தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைப்பதற்குமுரிய அணுகுமுறைகளை கையாளுகின்றார். வாக்குகளைப் பெறுவதற்காக தற்காலிக சலுகைகளை வழங்கி அதைப் பிரச்சாரப்படுத்த தமிழ் விரோத சக்திகளை பயன்படுத்தும் அதேவேளை, தமிழ்த் தேசியம் நோக்கி செயற்படுவதாக அறியப்பட்டவர்களைக் கொண்டு, குறிப்பிட்ட தமிழ் மக்களின் வாக்குகளை தனக்கு (ராஜபக்ச) எதிராக திரும்பாமல் செய்வதற்கான பொறிமுறையின் வடிவமே தனி ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக நாட்டை விட்டு தப்பி சென்ற சிவாஜிலிங்கம் மீண்டும் வந்து கொழும்பில் சிறிது காலம் தங்கிவிட்டு, பின்னர் இந்தியா சென்று தமிழ் மக்கள் சார்பான தனி ஜனாதிபதி வேட்பளாராக போட்டியிடுவதாக சென்னையில் வைத்து அறிவித்திருந்தார். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பேசியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் மகிந்த அரசாங்கத்தால் சிவாஜிலிங்கம் மீது சுமத்தப்பட்டது. ஆனால் தற்போது இலங்கையில் மகிந்த அரசால் எந்தவொரு இடைஞ்சலுமில்லாமல் செயற்படுவது பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.
அதேவேளை கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர்மீது ரெலோ கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக சிறிகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதானது ஒரு சங்கடமான நிகழ்வானாலும் தவிர்க்கமுடியாத நிலைமையை கட்சித்தலைமைக்கு ஏற்படுத்தியதே இம்முடிவிற்கு காரணமாகும். கூட்டமைப்பு என்னும் அடையாளத்திற்குள் இருந்து கொண்டு ராஜபக்ச அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த நினைத்த இவரை வெளியில் விட்டது சிறந்த முடிவாகும்.
மற்றும் கிஷோர் போன்று இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களின் இருப்பரசியலை தக்கவைக்கவும், பதவிக் கதிரைகளை குறிவைத்து ராஜபக்ச அவர்களை நியாயப்படுத்தியும், மீண்டும் ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தால்; தமிழ் மக்களிற்கு நன்மை பயக்கும் என்பதுடன் அபிவிருத்திகளை செய்வார். எனவே அவருக்கு வாக்களிக்கும்படி தெரிவிக்கின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் அபிவிருத்தி செய்ய முடியும் அது வேறு விடயம். ஆட்சி மாற்றத்தை செய்வதனூடாக வரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பை ‘அபிவிருத்தி’ என்ற சிறு சிந்தனைக்குள் முடக்க முயலும் செயற்பாட்டுக்கு ஆதரவு கொடுப்பது தமிழ் மக்களிற்கு பயனைத் தராது, பொருத்தமானதுமல்ல.
அதுமட்டுமல்லாமல் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள வடமாகாண ஆளுனரின் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து ராஜபக்ச அவர்களிற்கு ஆதரவாக மௌனமாக செயற்படுகின்றார். முக்கியமாக இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்காமல் செயற்படுவதானது மகிந்தவின் நிர்ப்பந்தச் சிறைக்குள்ளிருந்து இன்னும் விடுபட முடியவில்லை என்பதைக் காட்டுகின்றது.
அத்துடன் இலங்கையின் சட்டதிட்டங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தேவையானபோது தமிழ் அரசியல்வாதிகளைக் கைது செய்து தடுத்து வைக்கின்றனர். தனது அரசியல் நோக்கத்திற்கு தேவையெனில்; குற்றச்சாட்டுக்களை சாட்டாக வைத்து அச்சுறுத்தியும், ஆசைகாட்டியும் தமிழர்களை பணிய வைத்து செயற்படவைக்கும் இச்சர்வாதிகார சிந்தனையுள்ள ராஜபக்ச அவர்களின் வெற்றியானது தமிழ் மக்களிற்கு எந்தவகையில் நன்மை பயக்கும்?. ஏற்கனவே தன்னுடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் கட்சிகளை தனது கட்சிக்குள் மிரட்டிப்பணிய வைத்ததைப்போல மீதமுள்ள தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மிரட்டிப் பணியவைத்தல், அல்லது சலுகைகளினூடாக விலை பேசுதல் போன்றவற்றை அரசியல் நகர்வாக கொள்ளும் நடைமுறையிலுள்ள இவரை ஆட்சியில் வைத்திருக்கலாமா? அச்சுறுத்தலினூடாக தமிழ்த் தேசியத்தை சிதைத்து விடமாட்டாரா? என்ற கேள்விக்கான விடையை தமிழ் மக்கள் சுயமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ்மக்களின் அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் அரசியலுக்கு வரமுன் அடிப்படையான அரசியல் அறிவையும், முக்கியமாக தென்ஆபிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் தனது இனத்தின் விடுதலைக்காக பல உயரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தும், சோரம் போகாது 27 வருடம் தனது கொள்கையில் வழுவாது சிறையிலிருந்து செய்த அர்ப்பணிப்புகளை உள்ளடக்கிய நெல்சன் மண்டேலாவின் “சுதந்திரத்திற்கான நெடும் பயணம்” என்னும் வாழ்க்கை வரலாற்றையாவது படித்து அறிந்திருக்க வேண்டும். அத்துடன் தனக்கோ தன் குடும்பத்திற்கோ என்ன ஆபத்து நேர்ந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் கொள்கைகளிற்கு பாதிப்புபை ஏற்படுத்தாமலும், கொள்கையிலிருந்து வழுவாமலும் துணிந்து செயற்படக்கூடிய தைரியத்துடன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்களைப் போன்று அரசியலில் சோரம் போய் எடுப்பார் கைப்பிள்ளையைப் போல சுகபோக, இருப்பரசியல் சிந்தனையும், பேரழிவிற்கு காரணமான ராஜபக்ச அவர்களின் வெற்றிக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்படும் தமிழ் அரசியலவாதிகளின் சொத்தை வியாக்கியானங்களைப் புறக்கணித்து, தேர்தலை புறக்கணிக்காது, பங்குகொள்வதில் ஆர்வத்தை காட்டாமல் இருப்பதை விடுத்து, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
‘சுருவில்’ காளமேகம்

No comments:

Post a Comment