வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 04:00.35 AM GMT +05:30 ]
ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்ட ஒரு நாட்டில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் தான் இலங்கையில் இந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. ஜனநாயக கோட்பாடுகளை ஒரு கடுகளவேனும் மதியாது கோர தாண்டவமாடி ஜனநாயகத்தையே தோண்டிப் புதைத்த இரு முக்கிய வேட்பாளர்கள் அதாவது தற்போதைய ஜனாதிபதியும் அவருடன் சேர்ந்து அட்டகாசம் போட்டு பின்னர் நாட்டையாளும் ஆசையுடன் எதிர்கட்சிகளுடன் கைகோர்த்து நிற்கும் முன்னாள் இராணுவ தளபதியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழருக்காக குரல் கொடுத்ததாக கூறிக்கொள்ளும் தமிழர் மிதவாத அரசியல் தலைவர்களும் மற்றும் முன்னாள் ஈழத்துக்காக இராணுவ வழியில் போராடி, பின்னாளில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த தமிழ்ப் போராளிகளும் எதிரும் புதிருமான பாசறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்து தமிழினத்தையே கேலிக் கூத்தாக்கி அவரின் சுய உரிமைக்கான போராட்டத்தினை மழுங்கடிக்க முயலுகின்றார்கள். ஆக தமிழினம் யாருடைய கோரிக்கையை ஏற்பது என்று தெரியாது கதி கலங்கி தடுமாறி நிற்கின்றனர்.
ஜனநாயகத்திட்கு விரோதமான இலங்கை
ஜனநாயக கோட்பாடுகளின் முக்கிய காரணிகளான அதாவது எவ்வித அச்சுறுத்தல் இன்றி இடம் பெறும் தேர்தல் என்பது, பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினரை அரவணைத்து அவர்கள் மனம் கோணாமல் பராமரித்தல், பத்திரிகையாளர்களை சுயமாக செயல்படவிடுதல், அரச சார்பற்ற அமைப்புக்களை தங்கு தடையின்றி செயலாற்றவிடுதல், பொதுமக்கள் தங்கள் கருத்தை எவ்வித தயக்கமின்றி வெளிப்படுத்துதல், சட்டத்தை காக்கும் காவலர்கள் மற்றும் முப்படையினர், மக்களின் தூண்களாக இருந்து இரவு பகல் பாராது பாதுகாக்க கடமையாற்றுதல் என்பது போன்றவையே ஜனநாயக கோட்பாடுகளின் முக்கிய காரணிகளாய் இருக்கும்.
ஆக இலங்கை இவ் ஜனநாயக மரபுகளை பின்பற்றுகிறதா? இல்லையா? என்பதை மக்கள் நிச்சயமாக ஒரு கணம் சிந்தித்தால் இக்கட்டுரையின் காரணத்தை அறியலாம்.
பிரித்தானியாவிடமிருந்து நாடு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் சிங்கள பெரும்பான்மையினம் தான் நாட்டு மக்களை பிரதிநிதிப்படுத்தினார்கள். அதேசமயம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை ஒரு ஐந்தறிவு படைத்த மிருகத்திலும் கேவலமான முறையில் ஆண்டார்கள்.
சிங்கள ஆட்சியாளர்கள், அது எந்தக் கட்சி ஆனாலும் தமிழர்களையும் அவர் சார்ந்த நிலம், மொழி, கல்வி, சமயம், வரலாறு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை ஒரு சிறந்த திட்டமிட்ட சதிக்குற்பட்டே அரங்கேற்றினார்கள். அதிலும் பின்னர் வென்றார்கள். தமிழ்ப் போராளிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவுடன் அதை தமக்கு மேலும் சாதகமாக்கிய சிங்கள ஆட்சியாளர்கள், தமிழின விரோத நடவடிக்கைகளில் இறங்கி மனித இனமே இந்நூற்றாண்டில் கண்டிராத மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்தி விட்டு தமிழர்களை கேவலமான நிலைக்கு உட்படுத்தினார்கள்.
ஆக ஜனநாயக கோட்பாடுகளை பூண்டோடு அழித்து தமிழர்களை நிர்க்கதியாக்கினார்கள். மனித உரிமைகளை பற்றி பேசிய அமைப்பினரை இயங்க விடாமல் தடுத்தும், உதாரணமாய் பிரான்சை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச வலையமைப்புடன் இயங்கும் ஒரு அமைப்பின் 17 ஊழியர்களை மூதூரில் படுகொலை செய்தார்கள். இதைப் போன்று பல உள்ளுர் மற்றும் வெளியூர் அமைப்புகளையும், அந்த அமைப்புக்களின் ஊழியர்களையும் கடத்தி, துன்புறுத்தி ஏன் கொன்றும் அதற்கு மேலே சென்று நாட்டை விட்டு வெளியேற்றி ஜனநாயக கோட்பாட்டை சின்னாபின்னமாக்கினார்கள்.
கடந்த தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கூட்டுக் குழுக்களுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களை துன்புறுத்தி வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை கொன்றொழித்தார்கள். இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு விழுந்த பேரடி.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையே சுட்டு கொன்றதன் காரணம், அவர்கள் தமிழ் மக்கள் மீது நடந்தேறிய அரசின் அநியாயங்களை அம்பலப்படுத்தியதற்காகத் தான். இது ஜனநாயத்திட்கு விழுந்த மரண அடி.
நான்காம் தூணாக கருதப்படும் பத்திரிக்கைத் துறை ஒரு மிக முக்கியமானதொரு ஜனநாயக சக்தி. ஆனால் சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்கள் 25-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கொன்றும், பலரை வன்முறையினால் அடிபணிய வைத்தும், ஏன் 15-க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு ஓடி தலைமறைவாக இருக்கும் நிலையை உருவாக்கினார்கள். இதில் கேவலம் என்னவெனில், பாதிக்கப்பட்ட பலர் சிங்கள இனத்தைச சேர்ந்தவர்கள். இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று பார்த்தால், ஜனநாயக நெறிகளின் படி தங்களது ஆதங்கங்களையும் மற்றும் ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்தி விடப்பட்ட வன்முறையை எதிர்த்து எழுதினார்கள் - பேசினார்கள். மேலும் ஒரு படி மேல் சென்று பத்திரிக்கை நிறுவன நிர்வாகத்தினரையும் மற்றும் பிரதம ஆசிரியர்களையும் நேரடியாகவே எச்சரித்து, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பத்திரிக்கை தணிக்கையை மதிக்கும் படி வலியுத்தினார்கள். அவ்வாறு மதிக்காவிட்டால்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். இதற்கு பயந்து இந்நிறுவனங்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேறு வழியின்றி தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித் தாக்குதலை மூடி மறைத்தார்கள். இது ஜனநாயகத்திற்கு விழுந்த சாவுமணி.
சிறுபான்மை இன மக்களை அரவணைப்பதற்;குப் பதில், அவர்களை பாதுகாக்க அதாவது மனிதாபிமானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் அரச பயங்கரவாத யுத்தத்தை பல வெளிநாடுகளின் அணுசரணையுடன் மேற்கொண்டு அதிலும் வென்றார்கள். இதன் இறுதியில் 300;;இ000-க்கும் அதிகமான மக்களை பணயக்கைதியாக பிடித்து வந்து முட்கம்பி வேலிக்குள் வைத்து பல நூறு இராணுவ சிப்பாய்களின் இரவு பகல் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த சிறையை உலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பத்திரிகைகள் யேர்மனியின் நாசி ஹிட்லர் எப்படி எல்லாம் யூதர்களை வதைப்படுத்தி கொன்றாரோ அதே பாணியிலான அராஜக வேலையை மகிந்தா அரசு அரங்கேற்றி வருவதை வெளிக்கொண்டு வந்தார்கள். சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் மீது வெளியாருடன் உள்ள தொடர்பை துண்டித்தும் துன்புறுத்தியும், கொலைகளையும், கற்பழித்தல்களையும் ஏன் 10,000-க்கும் மேற்பட்டவர்களையும் கடத்தி என்ன செய்தார்கள் என்று தெரியாத ஒரு வெற்றிட நிலையை உருவாக்கியுள்ளார்கள்.
தற்போது, உலகை ஏமாற்றுவதற்கும் தேர்தலில், தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் மகிந்தாவும் அவரின் சகோதரர்களும் இணைந்து தமிழ் ஒட்டுக் குழுக்களின் உதவியுடன் முட்கம்பி வேலிக்குள்ளே அடைக்கபட்டிருந்த தமிழ் மக்களை விடுவிக்கின்றார்கள் அதாவது அவர்கள் நிச்சயம் மகிந்தாவுக்கு ஓட்டு போடவேண்டுமென்றும் இல்லையேல் மீண்டும் அவர்கள் மீது கடும் நடவட்டிகை எடுக்கப்படுமென்ற நிபந்தனையுடனேயே விடுவிக்கப்பட்டனர். ஆக இது ஒரு ஜனநாயகத்திற்கு விழுந்த சவுக்கடி. மொத்தத்தில் சிறிலங்கா ஒரு படுதோல்வியை கண்ட நாடு ஆகியுள்ளது. இந்த நாட்டை ஆள்பவர்கள் ஜனநாயம் பேசுவதற்கோ தேர்தலை நடத்துவதற்கோ எந்தவித தகுதியும் அற்றவர்கள் என்பதை இக்கட்டுரை ஊடாக சாமானிய மக்களினால் கூட அனுமானித்துக் கொள்ள முடியும்.
அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால் நமக்கென்ன
தமிழ் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழமொழிகள் தான் மேற்சொல்லப்பட்டவை. இவைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவையாயினும், இன்றும் வாழ்க்கைக்கு பொருத்தமானவையே.
யார் வந்தும் நமக்கு என்ன பயன். அன்றாட வாழ்க்கையாக ஒரு சான் வயிற்றுக்காக போராடும் பல இலட்சம் மக்கள், அது சிங்கள மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களாகவும் இருக்கட்டும், அவர்கள் அனைவரும் மானிட பிறவிகளே. அவர்கள் அனைவரும் சமத்துவத்துடன் வாழ யாரும் தடையேற்ப்படுத்தி விரோதிகளாக ஆக்கி விடக்கூடாது. ஆனால் அரசியல்வாதிகள் மக்களின் வாழ்க்கையில் நிச்சயம் பல இன்னல்களை உண்டு பண்ணியுள்ளார்கள்.
அப்படிப்பட்ட இந்த அரசியல்வாதிகள் ஒரு போதும் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தப் போவதேயில்லை என்பது திண்ணம். சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டை இதய சுத்தியுடன் வழி நடத்தி இருப்பார்களேயானால் இன்று சிறிலங்கா ஒரு ஆசியாவின் செல்வம் கொழிக்கும் நாடாக இருந்திருக்கும். ஆனால் தமது சொந்த நலனுக்காக ஆட்சிக்கு வந்து இன வெறுப்புணர்ச்சியை உருவாக்கி அதில் சுகம் காண எத்தனித்தார்கள். அதிலும் வெற்றி கண்டார்கள். காரணம் அவர்கள் தமது குடும்ப வளர்ச்சியை உயர்த்துவதற்கு ஏதாவது ஒரு தேசிய பிரச்சனை ஒன்றை தம் கைவசம் எடுத்து அதில் மக்கள் கவனத்தை திசை திருப்பி தமது சொந்த வளர்ச்சியில் காலத்தை செலுத்தலாம். யுத்தம் ஓன்று உருவானால் நிச்சயம் பல பேர் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக லாபம் அடையலாம். ஆதலால்தான், சிறிலங்காவில் நடக்கும் பிரச்சனை அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு பல தசாப்தங்களாக நடைபெற்று கொண்டும் இருக்கின்றது. இதில் ஒரு அநியாயம் என்னவென்றால் அப்பாவி பொது மக்கள் பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளது தான்.
இப்படிப்பட்ட இந்த நேரத்தில் உலகத் தமிழர்கள் இன்று தங்களுக்குள்ளேயே வாத பிரதிவாதங்களை வைக்கின்றார்கள். அதாவது யாருக்கு தாம் ஓட்டுப் போடுவதென்றும் எந்த அரசியல்வாதி தமக்கு விடிவை உருவாக்குவார் என்று கூறி வருவது, நிச்சயம் விதண்டா வாதமாகவே நாம் கூறவேண்டும். காரணம் சரத் பொன்சேகா யுத்தக் காலத்தில் கொக்கரித்தார் தமிழருக்கென்று இலங்கையில் ஒரு பூர்வீகம் இல்லையென்றும் அவர்கள் கள்ளத்தோணியில் சட்டவிரோதமாக குடியேறினார்கள் என்றுரைத்தார். மேலும்;, தான் புலியை வென்று அதன் தலைவரை கொன்று அவரின் சாம்பலை நந்திக்கடலில் கரைத்தார் என்று பறைசாற்றி வருகிறார்.
இந்த விஷயத்தில் பொன்சேகாவைக் காட்டிலும் ஒரு படிமேல் போய், மகிந்தா மற்றும் அவரது சகோதரர்கள் கொக்கரித்தார்கள். தமிழர்கள், தங்களை தமிழர் என்றோ, ஏன் ஈழம் என்ற சொல்லையே கூட மறந்துவிடவேண்டுமாம். இனிமேல் தமிழர்கள் தங்களை “சிறிலங்கன்” என்று தான் அடையாளப்படுத்தி கொள்ள வேண்டுமாம். ஏன் தமிழர் பிரதேசங்களில் புத்தர் கோயில்களையும், தமிழரின் கலாச்சாரக் கோட்டையான யாழ்ப்பாணத்தில் இயங்கும் பேருந்துகளில் தமிழ் எழுத்துக்களை அழித்து விட்டு தமிழர்களிட்கே புரியாத சிங்களத்தை தற்போது திணிக்கப்பட்டுள்ளனர். இது மகிந்தாவின் சிங்கள இனவெறியைக் காட்டுகின்றது. ஏன் வெளிநாடுகளில் இருந்து தமது சொந்தங்களுக்காக அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக போதைப் பொருள்களையும் மதுபானங்களையும் மற்றும் இதர கலாச்சார சீரழிவான களியாட்டங்களையும் ஏற்படுத்தி தமிழினத்தையே கலாச்சார ரீதியாக அழிப்பதற்கு சிங்களப்படையினரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
ஆக தமிழினம் ஒரு போதும் எந்தவொரு சிங்கள ஜனாதிபதி வந்தாலும் மீள முடியாத நிலையில் உள்ளது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் முன்னர் கூறுவதைப் போன்றே இன்று இந்த இரு பிரதான வேட்பாளர்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அமைந்து உள்ளன. பொன்சேகா யாழ் சென்று நல்லூர் கந்தனிடமும், மடுமாதா தேவாலயத்திலும் மற்றும் பல ஆலயங்களிலும் வழிபட்டு வந்தாலும், ஆண்டவன் உண்மையிலே இருக்கிறார் எனில் இவரை நிச்சியம் சூர சம்சாரம் செய்திருக்க வேண்டும். அதற்கு பதில் கோவிலில் உள்ள குருமார்கள்; பாவம், பண மற்றும் பதவி ஆசை பிடித்து, பொன்சேகாவுக்கு சிறப்பு பூசை செய்து தட்சணை வழங்கி ஆசிர்வதித்து கொடுத்தது, தமிழர் செய்த துர்ப்பாக்கியம். பழமொழி ஒன்று உண்டு அதாவது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லுமாம். நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே!
இந்த தோரணையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் குறிப்பாக தமிழர் தேசிய கூட்டணி பிரமுகர்கள் கூறுகின்றார்கள், ‘தமிழர்கள் நிச்சயம் பொன்சேகாவுக்கே ஓட்டு போடவேண்டுமென்று’. காரணம் சில வாரங்களுக்கு முன்னர் பொன்சேகா கூறியபோது பத்திரிகையாளர்களை கொன்றவர்களை தனக்கு தெரியும் என்றும், ஆகவே தான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அவர்களை அடையாளப்படுத்தி தண்டனை பெற்றுகொடுக்க உள்ளாராம். சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் ஒரு கேள்வி இங்கு எழுகின்றது. எதற்காக இவர் இவ்வளவு நாளும் மௌனமாக இருந்தார்? இவ்வளவு சம்பவமும் நடைபெற்றது இவர் இராணுவ தளபதியாக இருக்கும் போதுதானே? மற்றும் இவர் உன்னதமானதொரு உறவை மகிந்தா மற்றும் அவரின் சகோதர்களுடன் பேணியே வநதுள்ளார். எதற்காக இப்போது அதாவது தேர்தல் அறிவித்தபிறகு இப்படியெல்லாம் இப்போது நாடகமாடுகிறார். அதைவிட சில தினங்களுக்கு முன்னர் தமிழர் தரப்புக்கும், ஏன் வெளிப்படையாகவே கூறினார், ‘தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாத காலத்தில் அனைத்து புலி ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 10000-க்கும் மேற்பட்ட தமிழர்களையும் விடுதலை செய்வதாகவும் அல்லது தேவை ஏற்படின் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வாங்கி தருவதாக’ உறுதியளித்து வருகிறார்.
ஆக எது எப்படி இருப்பினும் இந்த இருவரில் ஒருவர் தான் நிச்சயம் அடுத்த ஜனாதிபதியாக வந்தாக வேண்டும். ஆகவே மகிந்தாவிலும் விட பொன்சேகா பரவாயில்லை. காரணம் மகிந்தா மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து நாட்டை அழித்து தமிழர்களை பலியெடுத்து வதைப்படுத்திய இவர்கள் நிச்சயமாக தண்டிக்க படவேண்டியவர்கள். இத்தருணத்தில் ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது பொன்சேகா தனது பழைய முதலாளியை எதிர்காலத்தில் பகையாளி ஆக்கிக் கொள்வாரா அல்லது இருவரும் தோழமை கொள்வார்களா? இக்கேள்விகளுக்கான பதில்கள் நிச்சியமாக அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும். எது எப்படியாயினும் தமிழினத்துக்கு விடுதலை என்பது எந்தவொரு சிங்கள தலைமைகளாலும் எட்டாக்கனி என்பது தான் மறுக்க அல்லது மறைக்க முடியாத உண்மை. ஆனால் ஒன்று மட்டும் தெட்டத்தெளிவு. அதாவது பொன்சேகா ஜனாதிபதியானால் நிச்சயம் மகிந்தாவிலும் விட தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டு சிங்கள புத்த பிக்குகளிடமும் மற்றும் இனத்துவேசத்தை கக்கும் சிங்களவர்களிடமும் தான் உக்கிரமமான சிங்களவாதி என நடவடிக்கை எடுத்து அதன் மூலமாக சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று ஐந்து ஆண்டுகளை தக்க வைத்து நாட்டை கொள்ளையடிப்பது தான் இவர்கள் அனைவரினதும் விரும்பம்.
ஆக ஜனநாயகத்தை பற்றி பேச அருகதையில்லாதவர்கள் எல்லாம் இப்போது ஜனநாயக வழிகளின் மூலமாக ஜனாதிபதியாக வர எத்தனிக்கின்றனர். நிச்சயம் பலம் வாய்ந்தவன் வெற்றி கொள்வான். அவன் மீண்டும் ஆர்ப்பரித்தெழுந்து இன்னும் பல மடங்கு உத்வேகத்துடன் தமிழருக்கெதிரான நடவடிக்கை எடுப்பதும் நிச்சயம். இருந்தும் பரவாயில்லை தமிழர் பொன்சேகாவிற்கு வாக்களித்து, இனி வரும் காலங்களில் சிறிலங்காவில் மீண்டும் ஒரு முறை ஜனநாயகம் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பார்பதற்கு ஒரே வழி-ஒரு புது தலைமையிடம் சந்தர்ப்பத்தை கொடுத்து அவர் எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்ப்பதுதான்.
அதே நேரத்தில் தமிழரை கொன்றொழிக்க கொழும்பில் இருந்து கட்டளை பிறப்பித்த மகிந்தா அவரின் சகோதரர்கள் மற்றும் தமிழர் படுகொலையை செய்த இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விசாரணை செய்வதற்கு பொன்சேகா எப்படி நடவடிக்கை எடுப்பார் என்பது அடுத்து நமக்கு எழும் கேள்வியின் காரணம், இவர் தான் ஒரு இராணுவ தளபதியாக செயலாற்றியவர் என்பதுதான். இருப்பினும் பரவாயில்லை. இவர் ஆட்சிக்கு வந்தால் எப்படி தனது மனக்கதவுகளை திறந்து கொலைகார கும்பல்களை அடையாளப்படுத்தி பக்கசார்பற்ற வெளிநாட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். தமிழர்கள் ஒன்றை மட்டும் உணரவேண்டும் அதாவது தங்களது சொந்த கை கால்கள் தான், அவர்களின் பலம். ஆகவே தமிழர்களே சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும், நரபலி எடுத்த இராணுவ அதிகாரிகளும், நிச்சயம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். ஆக மகிந்தா மற்றும் அவரின் சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு கிடைக்கும் சாவுமணிதான்; என்பது மட்டும் நிச்சயம்.
ஆகவே தமிழர்கள் நிதானமாக யோசித்து தங்கள் ஓட்டை தமிழரை நிர்க்கதிக்கு ஆளாக்கிய மகிந்தா மற்றும் அவர் சகோதரர்களுக்கு ஒரு பாடமாக உணர்த்தி ஜனநாயகத்திற்கு ஒரு புதுப்பொழிவை கொண்டுவந்து அனைத்து மக்களும் செழிப்புடன் வாழவும் ஈழத் தமிழர் தாம் தொலைத்த உரிமைகளை மீட்டு தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் மதிப்புடனும் தன்னாட்சி உரிமை பெற்று வாழ்வதே உலகத்தமிழரின் பேரவா.
அனலை நிதிஸ் ச. குமாரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment