வியாழக்கிழமை, 31 டிசெம்பர் 2009, 02:39.00 AM GMT +05:30 ]
புதிய உலக நெறிகளின்படி சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் உலக ஆதிக்க சக்திகள் தீவிரவாத முத்திரை குத்துகின்றன. தமிழர்கள் சனநாயக வழிகள் மூலம் பல தசாப்தங்களாக போராடிப் பயனளிக்காமல் இந்தியா போன்ற நாடுகளின் ஆசியோடு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பின்னர் இந்நாடுகள் இப்போராளிகளைத் தங்களது கைப்பொம்மையாகப் பயன்படுத்த முனைந்து அதில் தோல்வியுற்ற போது இப்போராளிகள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள்.
தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக அடுக்கடுக்கான பொய்ப் பரப்புரைகளைச் செய்து தமிழரின் சுதந்திர தாகத்துக்கு சாவுமணி அடிக்கப் பல எத்தனங்களைச் செய்து அதிலும் வெற்றி கண்டார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலான எமது ஆயுதப் போராட்டத்தை இந்தியா, சிறிலங்கா மற்றும் பல ஆதிக்க சக்திகள் தமது ஆயுத பலத்தினால் மௌனிக்கச் செய்தார்கள். விடுதலைக்காக போராடிய ஈழத்தமிழரான நாம் எமது மக்கள் தொகையைக் கணிப்பிடும் போது கணிசமான மக்களையும் போராளிகளையும் தியாகம் செய்துள்ளோம். இருப்பினும் ஆதிக்க சக்திகள் இவ் நாகரிக உலகில் இரக்கபட்டதாகவோ கரிசினைபட்டதாகவோ தெரியவில்லை. ஆக நாம் மீண்டும் ஒரு கடமைப்பாட்டின்கீழ் வரவழைக்கப்பட்டுள்ளோம். அதாவது மீண்டும் சனநாயக மூலமாக இவ்வுலக ஆதிக்க சக்திகளின் மனக்கதவுகளை சமாதான நெறிகளின் மூலமாக வென்றெடுக்கும் தார்மீகக் கடமை அனைத்துத் தமிழர் முன்னும் வைக்கப்பட்டுள்ளது.
திராவிடத் தமிழர் வன்முறையாளர்களா?
திராவிட நாகரிகத்தில் வந்த தமிழர் சமூகம் ஒரு பண்டைய நாகரிகத்துடன் ஒரு செழுமையான வாழ்வியலையும் தன்னகத்தே கொண்டு மற்ற சமூகத்தினருக்கு ஒரு முன்னோடியாக வாழ்ந்தனர். திரைகடல் ஓடித் திரவியம் தேடிப் பல நாடுகளில் தமது நாகரிகத்தை பரப்பினார்கள். தென்கிழக்கு ஆசியாவில் இப்போது உள்ள நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர்களினால் ஆளப்பட்டன.
காலப்போக்கில் தமிழர் திறன்கள் முடக்கப்பட்டன. பின்னர் தமிழர் செயலற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர் தமது உழைப்பினால் செழிப்பைக் கொடுத்தாலும் உரிமைகளை அவர்களிடம் அடகு வைத்தார்கள். தமிழ் நாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற சிந்தினையாளர்கள் ஓரளவு உரிமைகளை பெற்றெடுக்க முனைந்து வெற்றியும் கண்டார்கள். அதைப் போன்று ஈழத்திலும் தமிழ்த் தலைவர்கள் உயிர்ப்பெடுத்து பின்னர் சிங்கள ஆட்ச்சியாளர்களுக்கு விலைபோனதும் மற்றவர்கள் ஆண்டவன் மீது பழியைப் போட்டுவிட்டு மாண்டதும் வரலாறு.
அனைத்து நிகழ்வுகளும் நிச்சயம் இளைஞர்களைப் பாதித்தது என்பது உண்மை. அதை விட உண்மை அவர்களின் கல்வி வளர்ச்சி சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டது. எதிர்த்துப் போராடிய இளைஞர்கள் மீது அரச பயங்கரவாத ஆட்;சியாளர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்தி விட்டது. வயது வந்தோர் அனைத்தையும் ஏற்பார்கள். காரணம் அவர்களின் உடல் வலிமை போராட இடமளிக்காது. ஆனால் இள இரத்தமுள்ள இளைஞர்கள் பொறுப்பார்களா? பொறுத்தது போதும் என்று சொல்லிக் கிளம்பினார்கள் களம் காண. தமிழர் பால் உள்ள குணாதிசயங்களில் ஒன்று அவர்கள் ஒற்றுமையாக செயல்படவே மாட்டார்கள். எமது வரலாற்றில் காக்கை வன்னியன் பண்டார வன்னியனை காட்டிக்கொடுத்தது ஒரு சான்று. அதைப் போன்று ஒரு குடையின்கீழ் செயல்படுவதற்குப் பதில் பல இயக்கங்கள் உருவெடுத்தன.
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழரின் ஒற்றுமையைக் குலைக்கப் பல தமிழ்ப் போராளி அமைப்புகளை வளர்த்து ஆயுதம் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்தார். அந்த அமைப்புக்கள் சிறிலங்கா அரசிற்கு எதிராக யுத்தம் செய்ய வைத்தார். ஆனால் இயக்கங்கள் தங்களுக்குயிடையே சண்டை போட்டு இறுதியில் எதற்காக ஆயுதம் தூக்கினார்களோ அதனை மறந்தார்கள். இது சரித்திரமான உண்மை.
ஒரு மறக்கமுடியாத உண்மை என்னவென்றால் தமிழர் மற்ற சமூகத்தினரை தமது கடின உழைப்பினால் உயர்திவிடுவார்கள் ஆனால் தமது இனத்தை என்ன விலை கொடுத்தும் வீழ்த்தி விடுவர். தமிழர்களில் உள்ள நல்ல குணாதிசயங்களில் சில அவர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களின் விருந்தோம்பல் ஏனைய சமூகத்தவரையும் பார்க்க உன்னதமானவை. இதற்கு ஒரு உதாரணம் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் சமாதான காலத்தில் வன்னி சென்ற போது தமிழரின் தலைமை அவர்களுக்கு விருந்தளித்த விதம் அவ் இராஜதந்திரிகளையே வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தமது நாடுகள் திரும்பிய பின்னர் தமிழரின் விருந்தோம்பலை மெச்சிப் பேசினார்கள். இருந்தும் என்ன. பின்னாளில் அதாவது வைகாசி 2009 முள்ளிவாய்க்கால் வரை நடந்து முடிந்த கொடூர அரச பயங்கரவாதத்தினால் மக்கள் மாண்டார்கள். சரணடைந்தார்கள் இன்னமும் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்கின்றார்கள். உலக நாடுகளும் ஏன் வன்னி சென்று திரும்பிய வெளிநாட்டு தலைவர்களும் மௌனம் காத்தார்கள். உலகம் கண் மூடி மௌனியாக இருக்கின்றது.
தமிழ் நாட்டு தமிழர்களோ ஏனைய திராவிட மக்களோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சினிமா மோகத்தில் உறைந்து மீள முடியாமலுள்ளனர். அவர் தம் எதிர்காலத்தை மறந்து சினிமா மற்றும் களியாட்டங்களில் காலத்தை வீணடிக்கின்றார்கள். ஆக திராவிட இனம் இன்னும் மீளமுடியாத அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்க்கப்படுவார்களா?
ஆதிக்க சக்திகளினாலும் மற்றும் நம்பிக்கை துரோகம் இளைத்தவர்களினாலும் அடி பணிய வைக்கப்பட்ட தமிழினம் மீட்க்கப்படுமா? இதுதான் பல இலட்சம் மக்கள் முன்னுள்ள கேள்வி.
நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை பூரணப்படுத்துவதற்;கு இப்படியானதொரு மிக கசப்பான சம்பவம் நிகழாமல் இருக்குமேயானால் எமது போராட்டம் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் வீணடித்துகொண்டேயிருக்கும். நாம் சந்தித்த இழப்பு மிகவும் சோகமானவை. நிச்சயமாக எதிரிகளின் சூழ்ச்சி வலைகள் கிழித்தெறியப்பட்டு உண்மையான விடுதலை என்றால் என்னவென்று வெளியுலக மக்கள் முன் கொண்டுவரப்பட்டு உலக புதிய நெறிகளுக்குட்பட்டு ஈழ விடுதலைப் போராட்டம் வீறு கொண்டெழும். இது தான் எமது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இருப்பினும் தமிழர் புதிய புத்துணர்ச்சியுடன் மீண்டெழுந்து ஈழத்தை அமைப்பதற்கு அரசியல் மற்றும் இராசதந்திர வழிகளில் போராட வேண்டும். புலம்பெயர் தமிழர் அவர்தம் வாழும் நாடுகளில் அமைதி வழியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து மற்ற இன மக்களுக்கு ஈழத் தமிழரின் பால் உள்ள நியாயமான கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அதைப்போன்று ஈழத்திலும் மற்றும் சிறி லங்காவிலும் வாழும் தமிழர் தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சனநாயக வழிகளின் அடிப்படையில் உண்மையான எதிரிகளை இனம் கண்டு அவர்களைப் புறந்தள்ளி அரசியல் அடிப்படையில் தமிழரின் நிலையை உலகுக்கு ஆணித்தரமாக உணர்த்தவேண்டும். அதேபோன்று இந்தியாவில் வசிக்கும் ஏழு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்கள் ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து இந்தியா புலிகள் மீது போட்டிருக்கும் தடையை விலக்க வேண்டும். தலைவர் பிரபாகரன் மற்றும் போட்டு அம்மான் மீதும் போடப்பட்ட வழக்கை முடிக்க வேண்டும்.
இவை அனைத்தும் நிச்சயமாக ஈழத்தமிழரின் நீண்ட நெடிய கால அரசியல் வேட்கைகளை உறுதிப்படுத்தும். இதுவே உலகத் தமிழருக்கும் ஏன் ஒட்டு மொத்த திராவிட இனத்திக்குக்கும் வலிமை சேர்க்கும்.
ஆக நம் முன் உள்ள முக்கிய பொறுப்பு என்னவென்றால் முதலில் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போட்டுள்ள தடையை விலக்கி ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இந்திய மண்ணில் செயற்பட அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் உலக நாடுகளினால் போடப்பட்ட தடையை விலக்கி ஈழத் தமிழரின் உண்மையான விடுதலையைக் கொச்சைபடுத்தாமல் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிச்சயமாக ஈழத்தமிழரைப் பயங்கரவாதிகளாக சித்தரித்தவர்களையும் சித்தரிக்க முனைபவர்களையும பார்த்து யார் உண்மையான பயங்கவாதிகளென்று கேட்க வேண்டும். நிச்சயமாக தமிழர் பயங்கரவாதிகள் இல்லை அவர்கள் இழந்த உரிமைகளை மீட்கப் போராடும் உன்னதமான போராளிகள் என எதிர்காலம் சொல்லும். உலகத் தமிழர் ஒன்றிணைந்து செயலாற்ற உகந்த காலம் இதுவே. நிச்சயம் அறுவடை செய்யும் காலம் வெகு தொலைவிலில்லை.
அனலை நிதிஸ் ச. குமாரன்
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment