Sunday, January 10, 2010

(2ம் இணைப்பு) Photo

ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 02:37.40 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் நடைபெற்று, அவரது பூதவுடல் முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ் செய்யப்படவுள்ளது.
அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் நேற்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் உள்ள குமரப்பா உட்பட பன்னிருவர் மயானத்திற்குச் சமீபமாக உள்ள சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சிவாஜிலிங்கம் பா.உ. தெரிவிக்கையில், அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடலை வல்வெட்டித்துறைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து தரத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர்களின் அந்தக் கோரிக்கையை நான் நிராகரித்து விட்டேன்.
பிரபாகரனின் தாயாரை எனது பராமரிப்பில் தொடர்ந்து வைத்திருப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறின்றி அவர் கனடா செல்ல விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளையும் என்னால் செய்து கொடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு திருமாவளவன் இறுதி அஞ்சலி
பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோரே தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
வல்வெட்டித்துறை மாவீரர் சதுக்கத்துக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்ட அன்னாரது பூதவுடலுக்கு பொது மக்களும் அரசியல் பிரகர்களும் தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம், துரைரத்தினசிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார், தோமஸ் வில்லியம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண சார்பில் பிரதிநிதிகளும் அன்னாருக்கு தமது இறுதி மயாதையைச் செலுத்தினர்.
வவுனியாவில் அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தபோது சிவநாதன் கிஷோர் எம்.பி. யும் அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment