Sunday, January 10, 2010

திரு.வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, மஹிந்த வழங்கிய உறுதிமொழியை, பிரபாவின் உறவுகள் நிராகரித்தன

திரு.வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, மஹிந்த வழங்கிய உறுதிமொழியை, பிரபாவின் உறவுகள் நிராகரித்தன
[ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 02:45.08 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அளித்த உறுதிமொழியை குறித்த உறவுகள் நிராகரித்துள்ளனர்.
தாம் வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வரப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
பிரபாகரனின் இரத்த உறவுகளான, டென்மார்க்கில் உள்ள மனேகரன், இந்தியாவிலுள்ள ஜெகதீஸ்வரி மற்றும் கனடாவில் உள்ள வினோதினி ஆகியோரே மஹிந்த ராஜபக்சவின் உறுதிமொழியை நிராகரித்துள்ளனர்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் இயற்கையானது என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பனாகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை, நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தமது கணவரின் பூதவுடலுடன் வல்வெட்டித்துறைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் பிரபாகரனின் மாமியாரான திருமதி ஏரம்புவையும் விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அவரும் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்று, யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேர்தல் பிரசாரங்களின் ஒரு கட்டமாக வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வல்வெட்டித்துறைக்கு செல்வதற்கான திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment