Monday, January 4, 2010

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்
[ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2010, 06:26 GMT ] [ புதினப்பார்வை ]

தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - பெரும் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. குறிப்பாக - தமிழீழ மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் முடிவையும் - இன்னொரு காலத்தி்ன் தொடக்கத்தையும் அறிவித்துச் சென்றுள்ளது 2009. பிரபாகரனியத்தின் முடிவை அறிவித்த ஆண்டென்றும் இதனைக் குறிக்கலாம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டிற்கு பின்னான அரசியலில் ஈழத் தமிழர் மீதான ஆளுமை கொண்டவர்களாக சா.ஜே.வே.செல்வநாயகமும், வே.பிரபாகரனும் விளங்கினர். முதலாமவர் அமைதி வழியாகவும், இரண்டாமவர் ஆயுத வழியாகவும் தமிழ் பேசும் மக்கள் மீது அரசியல் ஆளுமை கொண்டு இயங்கினர். "தேசத் தந்தை" என சிறப்பிக்கப்பட்ட முதலாமவர் - "தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்ற வாக்குமூலத்துடன் அமைதி வழிப் போராட்டத்திற்கு முடிவுரையை எழுதிச் சென்றார். "தேசியத் தலைவர்" என சிறப்பிக்கப்பட்ட இரண்டாமவர் - மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாய்க்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமலேயே மறைந்து போனார்.அவரின் ஆயுத ஆளுமையால் கட்டியெழுப்பப்பட்ட பிரபாகரனியமும் - உலகத் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கான ஒருவகைப் 'படிப்பினை' ஆகி - வரலாறாக ஆகிப்போனது. மொத்தத்தில் - அவல வாழ்வும், அரசியல் வெற்றிடமும், சிந்தனைச் சிதைவும், ஆளுமைக் குலைவுமே மிகுதியாய் இருக்க - தலைமைத்துவமற்ற தமிழ்ச் சமூகம் ஒன்றையே இலங்கைத் தீவில் '2009' விட்டுச் சென்றுள்ளது. உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் வடுவாகி - வரலாறு ஆகிச் சென்றுவிட்டது 2009. அது எம்மைக் கடந்து சென்ற போது - எதிர்வரும் 2010 இல் எம் முன்னால் பல்வேறு சவால்களை மலைகளென முன்னிறுத்திவிட்டுள்ளது. 2009 வரையான நீண்ட பட்டறிவில் இருந்து எதை நாம் பெற்றுக்கொண்டோம் என்பதே இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான முன்நிபந்தனையாகும். கடந்த மே மாதத்தில் இருந்து இன்றுவரையான ஏழுமாத காலத்திலான எமது சமூக அசைவியக்கமானது எதிர்மறையானதாகவே அமைந்துள்ளது. முன்நோக்கி நகர வேண்டிய சக்கரத்தைப் பின்நோக்கி நகர்த்தி தொடக்க புள்ளிக்கு மீளக் கொணர்வதையே ஒரு சாதனை போல நாம் கொண்டாடி வருகிறோம். 'வட்டுக்கோட்டைப் பிரகடனம்', தாயகம் - தேசியம் - தன்னாட்சி, "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்", வலுச் சமநிலை - 'நடைமுறை அரசு' -- என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும். அதுவே 2010-இன் சவால்களை எதிர்கொள்ளும் வாயில்களையும் திறக்க வல்லது. அதற்கான திறவுகோல்கள் - வெளிப்படைத்தன்மை, சூழ்ச்சித்திறன், அனைத்துலக இயங்குமுறை பற்றிய புரிதல், கூட்டுவேலைத்திட்டம் என்பவையாகும். இதனை முன்னெடுக்க அறிவும் - தெளிவும் - துணிவும் முக்கியமானவை. புதினப்பலகை இதனையே முன்னெடுக்கும். புதினப்பார்வை, ஜனவரி 1, 2010
முன்னைய புதினப்பார்வைகள்:
'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்
அவர்களே தங்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும்; நாங்கள் பேசாமல் ஒதுங்கிவிட்டால் என்ன?...
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு?... பேய்க்கா?... பிசாசுக்கா?... பின்னாலே இருக்கும் பூதங்களுக்கா...?

No comments:

Post a Comment