Wednesday, January 20, 2010

300 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தில் புலிகள் இருந்துள்ளனர்

வன்னியில் நிலைகொண்டிருந்த ராணுவ நிலைகள் மீது 300 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் திட்டத்தில் விடுதலைப்புலிகள் இருந்ததாக தலைவர் பிரபாகரனுடன் இருந்த புலி உறுப்பினர் தமக்குத் தகவல் தந்துள்ளதாக இலங்கை போலீஸ் கூறியுள்ளது. போலீஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறும்போது, புலிகள் திட்டமிட்டபடி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்குமாயின், கடந்த வருட போரில் புலிகள் ராணுவத்தின் நகர்வைத் தடுத்து வைத்திருந்த காலத்திலும் பார்க்க கூடிய காலத்துக்கு தாக்குப்பிடித்து ராணுவ நகர்வை நிறுத்தி வைத்திருக்கும் திறனுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.ஆனால் போர் உக்கிரமடைந்தபோது இதற்கென தேர்வு செய்யப்பட்டிருந்த 300 பேரில் சிலர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துவிட்டதாகவும், இன்னும் சிலர் போரில் கொல்லப்பட்டு விட்டதாலும் தற்கொலைப் படையாளிகளின் எண்ணிக்கை போதாத காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக குறித்த புலி உறுப்பினர் தமக்குத் தெரிவித்துள்ளாராம். எனினும் இருக்கின்ற தற்கொலைப்படையாளிகளுடன் தாக்குதல் நடத்த ஒருசில புலித் தலைவர்கள் விரும்பியதாகவும் போலீஸ் கூறியுள்ளது.தமக்குக் கிடைத்த தகவலின்படி, சில தற்கொலைதாரிகள் 7 கிலோ நிறையான வெடிமருந்துகளைத் தாங்கி வெடிக்கவிருந்ததாகக் கூறும் போலீஸ், இவர்கள் வன்னி கிழக்குப் புறத்திலிருந்த ஆர்மட் போர் வாகனங்கள், ஆட்டிலரி ஷெல் மற்றும் மோட்டார் குண்டு தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவிருந்ததாகக் கூறியுள்ளது. தமக்குத் தகவல் தந்த புலி உறுப்பினர், கடந்த பல வருடங்களாக தலைவர் பிரபாகரன் அருகில் இருந்தபடியே பணியாற்றிவந்த 20 பேரில் ஒருவர் எனக் கூறுகிறது போலீஸ்.எனவே இவருக்கு புலிகள் ஆயுதங்கள் பதுக்கி வைத்த இடங்கள் குறித்த தகவல்கள் நன்கு தெரியும் என்றும் இவரின் தகவல்படி தாம் 2000 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகளை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்டுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மேற்படி 20 பேரில் 14 பேர் கொல்லப்பட்டு விட்டனராம் அல்லது காயமடைந்துவிட்டனராம், மிகுதிப்பேரைத் தாம் கைது செய்துள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேற்படி நபர்களின் தகவல்களை வைத்தே வன்னிப் பகுதியிலிருந்த தங்கத்தைத் தாம் கைப்பற்றியதாகவும் பொலிஸ் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment