Tuesday, January 12, 2010

சனல்-4 வீடியோ - அல்ஸ்ரனின் அறிக்கையில் இருந்து தன்னை விலக்க பான் கீ மூன் முயற்சி

புதன்கிழமை, 13 சனவரி 2010, 02:08.58 AM GMT +05:30 ]
இலங்கையில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4" ஒளிநாடா உண்மையானது என வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
பிலிப் அல்ஸ்ரனின் அறிக்கையை நான் பார்த்தேன். அவர் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் விசேட அறிக்கையாளர்.
பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர். அவரது தனிப்பட்ட அறிக்கையையும் இலங்கை அரசின் அறிக்கையையும் நீங்களும் அறிந்திருப்பீர்கள். நாங்கள் அனைத்து விடயங்களையும் ஆராய்வோம். பின்னர் ஐ.நாவால் எதனைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வோம்.
இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் முடிவடையாத பல விடயங்கள் உள்ளன.
இம்மாத இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படுதல், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பதில் சொல்லும் கடப்பாடு போன்ற விடயங்களே இன்னமும் முடிவடையாத நிலையில் காணப்படுகின்றன.
இலங்கைக்கான எனது விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இது குறித்துக் கலந்துரையாடியுள்ளேன்.
இந்த விடயங்கள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்துவேன் என்றார் பான் கீ மூன்.

No comments:

Post a Comment