Wednesday, January 20, 2010

தேய்ந்து போய் இருக்கும் சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்த அதிபர் தேர்தல் உதவும் - அமெரிக்கா நம்பிக்கை

ஜனவரி 26 ஆம் திகதி சிறிலங்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் ஏற்கனவே கசப்பான நிலையில் உள்ள அந்த நாட்டுடனான தமது உறவுகளைச் சிறப்பானதாக மாற்றிக்கொள்வதற்கு உதவுவதாக அமையும் என அமெரிக்கத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவுகளைக் கசப்பானதாக்குவதாக இருந்துள்ளன.இருந்த போதிலும், நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் என அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் முன்னெடுத்த போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் மேற்கு நாடுகளுடனான சிறிலங்காவின் உறவுகளைப் பாதிப்பதாக அமைந்திருந்தது.இந்தப் பின்னணியில் சிறிலங்காவில் நடைபெறும் தேர்தல் வோஷிங்டனுடனான அதன் உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையுமா என குறிப்பிட்ட அந்த அமெரிக்க இராஜதந்திரியிடம் கேட்ட போது, "சாதகமான ஒரு வழியில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்."கடந்த இரண்டு மாத காலத்தில் தேர்தலுடன் தொடர்புபட்டதாக பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன" என தன்னுடைய பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த இராஜதந்திரி தெரிவித்திருக்கின்றார்.சர்வதேசக் கவனத்துக்குரிய முக்கிய விடயமாக இருந்த இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலிருந்த ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொது மக்களை சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் விடுதலை செய்திருந்தது.பெருமளவிலான ஊடக சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் நீதித்துறையையும் ஏனைய முக்கிய நிறுவனங்களையும் மேற்பார்வை செய்யும் வகையிலான சுயாதீனக் குழுக்களை அமைக்கும் விடயத்திலும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா அளித்திருக்கும் வாக்குறுதிகளையிட்டு அமெரிக்க இராஜதந்திரி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்."எதிர்காலம் பற்றி எதிர்வு கூறுவதற்கு நான் தயங்குகின்றேன். ஏனெனில் வேட்பாளர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின்னர் அவற்றைச் செயற்படுத்துவதில்லை. ஆனால், ஜெனரல் பொன்சேகா சில நல்ல விடயங்களையிட்டுத் தெரிவித்திருக்கின்றார்" எனவும் குறிப்பிட்ட அமெரிக்க அதிகாரி கருத்து வெளியிட்டார்.இருந்த போதிலும், எதிர்க் கட்சிக்கு நிதி உதவிகளை அமெரிக்கா வழங்குவதாக ஆளும் கட்சியினரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார்.இதே வேளையில், "பொன்சேகா அதிபராக வேண்டும் என நாம் சொல்லவில்லை. ஆனால், அவர் வெற்றிபெற்றால் குறைந்தபட்சம் அமெரிக்காவுடனான சிறப்பான உறவுகளுக்கான கதவுகளை அது திறப்பதாகவே அமைந்திருக்கும்" என அமெரிக்காவின் Nebraska Wesleyan பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறிலங்கா விவகாரங்களுக்கான நிபுணர் றொபேர்ட் ஒப்ரெஸ்ட் [Robert Oberst] தெரிவித்திருக்கின்றார்."இராணுவத்துடன் அவர் முழுமையாகச் சம்பந்தப்பட்டிருப்பது அவரைப் பாதித்திருக்கின்றது. போர்க் குற்றங்கள் புரியப்பட்டிருந்தால் அது தொடர்பாக அவர் தெரிந்திருப்பார் என்பதுடன் அதில் அவரும் சம்பந்தப்பட்டிருப்பார்" எனவும் ஒப்ரெஸ்ட் சுட்டிக்காட்டுகின்றார்.மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் அந்த நாடு மேற்கு நாடுகளிடமிருந்து தூர விலகியே நின்றுள்ளது. சீனா மற்றும் ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசாங்கம், கடந்த வருடத்தில் மியான்மாரின் இராணுவ ஆட்சியாளரையும் வரவேற்றது.இது போன்ற நடவடிக்கைகள் சிறிலங்கா மேற்கு நாடுகளிடமிருந்து தூர விலகிச் செல்வதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்த போதிலும் நடைபெறவிருக்கும் தேர்தல் இந்த நிலைமைகளை நிச்சயமாக மாற்றியமைப்பதாக அமைந்திருக்கும் என வலியுறுத்திக் கூறுகின்றார்கள் அமெரிக்க அதிகாரிகள்.

No comments:

Post a Comment