புதன்கிழமை, 13 சனவரி 2010, 02:45.35 AM GMT +05:30 ]
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கின்ற தரப்பாக தமிழ் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பிரதேசத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுப்பதற்கு முன்னதாக பல தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து நாங்கள் பேச்சுக்கள் நடத்தினோம்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் பெரிய அளவில் பல ஏக்கர் காணிகளில் அமைக்கப்படுகின்ற இராணுவ முகாம்களை அகற்றி இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து நாங்கள் அவரது கவனத்திற்குத் தெளிவாக எடுத்துரைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆயினும் அந்த விடயங்கள் குறித்து அவரிடமிருந்து ஏனோதானோ என்ற வகையிலேயே பதில் கிடைத்தது.
அத்துடன், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறுகின்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைகள் உட்பட சில முக்கிய விடயங்களுக்கு அவரிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்தது.
இந்த நிலையிலேயே அவர் தொடர்ந்தும் ஆட்சி நடத்தக் கூடாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். இதே கருத்தைப் பொது மக்களில் பலரும் துறை சார்ந்த சக முக்கியஸ்தர்களும் எங்களிடம் வலியுறுத்தியிருந்தார்கள். எனவே தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
சரத் பொன்சேகா வெற்றிபெற வேண்டும் என்பதை விட மகிந்த ராஜபக்ஷ தோல்வியடையச் செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானது. தேர்தல் முடிந்த பின்னர் சரத் பொன்சேகா தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே வெற்றியடைந்தார் என அவரை உணரச் செய்ய வேண்டும். இதற்காக தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அடுத்து வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும்.
உங்கள் கையில் வாக்கு என்ற சக்தி வாய்ந்த பலம் இருக்கின்றது. உங்களுடைய வாக்குகள் தான் உங்களது அரசியல் பலம். அந்தப் பலத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதில் நீங்கள் தவறக் கூடாது.
அந்தப் பலத்தைக் கொண்டு நாங்கள் எமது உரிமைகளுக்காக வலுவான ஒரு நிலையில் இருந்து அரசாங்கத்துடன் பேரம் பேசி வெற்றியடைய முடியும்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய இரா. துரைரட்ணசிங்கம், சிவநாதன் கிஷோர், வவுனியா நகர சபைத் தலைவர் எஸ்.என்.ஜி. நாதன், உப தலைவர் எம்.எம். ரதன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment