Wednesday, January 13, 2010

யாருக்கு வாக்களிப்பீர்: உங்கள் மீதான போருக்கு உத்தரவிட்டவருக்கா, அந்தப் போரை நடத்தியவருக்கா?

பாரிய மனித அவலத்தை நிகழ்த்திய போதிலும் போரை முன்னின்று நடாத்திய ராஜபக்சவையும், பொன்சேகாவையும் - போரின் வெற்றிக்காகப் போற்றப் பட வேண்டியவர்கள் என்றே பெரும்பாலான சிங்கள மக்கள் கருதுகின்றார்கள். இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டுவது சிங்கள மக்கள் மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் - இருவரையுமே, போரில் வெற்றி வாகை சூடியவர்களாகவே அவர்கள் கருதுகின்றார்கள். தமிழ் மக்களின் இரத்த ஆறு ஓட வைத்து போரில் வெற்றி ஈட்டிய இவர்களுக்கு இடையேயான போட்டி சிங்களத் தேசியவாதிகளின் வாக்குப் பலத்தைச் சிதறடித்து உள்ளதால், இவர்கள் இருவருமே தாம் போர் தொடுத்த அதே தமிழ் மக்களின் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்க வேண்டிய நிலை 2010 ஆண்டுக்கான விநோதம் எனக் கருதலாம்.இவ்வாறு எழுதியுள்ளார் அனைத்துலகப் பிணக்குத் தடுப்புக் குழு-வின் கூட்டுத்-தலைமையாளர் கிறிஸ்ரோபர் பற்றன் [Christopher Patten, Co-Chair, International Crisis Group].கிறிஸ் பற்றன் அவர்கள் - ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சராகவும், பிரித்தானிய அரசாங்கத்தின் ஹெங் கொங்-ற்கான ஆளுனராகவும், பிரித்தானிய அரச அமைச்சராகவும், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக வேந்தராகவும் [Former European Commissioner for External Relations, Governor of Hong Kong and UK Cabinet Minister, Chancellor of Oxford University] முன்னர் பணிகளை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்களத் தேசியவாதிகளால் முன்னர் "வெள்ளைப் புலி" எனப் பரிகசிக்கப்பட்ட கிறிஸ் பற்றன் இன்றைய நியூயோர்க் ரைமஸ் [New York Times] ஏட்டுக்கு எழுதிய கருத்துரையில் மேலும் எழுதியிருப்பதாவது:2009 மே மாத முற்பகுதியில் 7000 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 10,000 பேர் வரை காயப்பட்டதாகவும் ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது. கடைசி இரு வாரங்களில் - மேலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. போரின் பின்பும் தமிழர்களின் அவல நிலை தொடர்ந்தது -- மூன்று இலட்சம் வரையான மக்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். தடுப்பு முகாம்களில் மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் அடைக்கப்பட்டிருந்த மக்களைச் சர்வதேச நிறுவனங்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. முட்கம்பி வேலிகளும் துப்பாக்கி தாங்கிய இராணுவமும் அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தின. தடுப்பு முகாமில் இன்னும் ஒரு இலட்சம் பேர் வரை உள்ளார்கள். இவர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்த போதும், முகாமில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் பேரில் பெரும் பகுதியினர் இன்னும் தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இப்பொழுது ஒரு தமிழரின் நிலையில் இருந்து நீங்களே எண்ணிப் பாருங்கள்; யாருக்கு வாக்குப் போடுவீர்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதிராகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அரசின் தலைவருக்கா, அல்லது அதை நடத்தி முடித்த இராணுவத் தளபதிக்கா? சமூக ஒருமைப்பாடு, இராணுவ மயமாக்கலை நீக்குதல், இயல்பு நிலைக்கு திருப்புதல் என்ற அடிப்படையிலான 10 அம்ச உடன்பாடு ஒன்றுக்கு அமைய சரத் பொன்சேகாவுக்கு ஆதவளிக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இது ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயம். அமைதி நிலைப்பதற்கு - காத்திரமான - தமிழர்களின் அபிலாசைகளை உள்வாங்கிக் கொண்ட - அரசியல் முன்னெடுப்புக்கள் அவசியம் என சில உயர் தலைவர்கள் எண்ணுகின்றனர் என்பதன் அடயாளம் இது. போரின் மூலங்களான - தமிழர்களும் மற்றைய சிறுபான்மை மக்களும் ஒரம் கட்டப்படும் காரணிகளை நீக்குவதற்கான அரசியலமைப்பு மாற்றங்களை பொன்சேகவோ அல்லது ராஜபக்சாவோ செய்வார்கள் என எதிபார்ப்பது மிகக் கடினமானதாகவே காணப்படுகின்றது. ஏனெனில் - தேர்தல் வாகுறுதிகள் பற்றிய விடயத்தில் கடந்த கால அனுபவங்கள் நம்பிக்கை ஊட்டுபவையாக இல்லை. அத்தகைய சூழல் வெறுப்புணர்வையும், இழி நிலையயும் ஒன்றிணைத்து தீவிரவாதத்தை மீண்டும் வளர்க்கவே செய்யும். தமிழ் மக்களிடம் சலனம் மிக்க கடுமையான கேள்வியாக இது இருந்தாலும், சர்வதேச சமூகத்திடம் உள்ள கேள்வியும் பதிலும் இலகுவானது. மீண்டும் வன்முறை வெடிப்பதைச் சர்வதேச சமூகம் தடுக்க விரும்பினால், தேர்தலில் வெல்பவர் யாராக இருந்தாலும், அடிப்படையான பிரச்சனைகள் திட்டவட்டமான முறையில் தீர்க்கப்பட சர்வதேச சமூகம் தன்னிடம் உள்ள அனைத்து வலுவையும் பாவிக்க வேண்டும். நிலையான அமைதியும், நிலையான அரசியல் சூழ்நிலையும் உருவாக வேண்டுமானால் - ஜனநாயக உரிமைகள் பேணப்படவும், இடம்பெயர்ந்தோர் மீளக் குடியமர்த்தப்படவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டுமானம் நடக்கவும், உதவி வழங்கும் நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும்,உறுதி செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும், அரசு சாரா நிறுவனங்களும் இந்தத் திட்டங்களின் முழுமையான அமுலாக்கலை உறுதி செய்யவும், சர்வதேச நிதியுதவி சரியாகப் பயன்படுகின்றது என்பதை உறுதிசெய்யவும் அனுமதிக்கப் படவேண்டும். உதவி பெறும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படக்கூடாது. சுருக்கமாகச் சொல்வதானால், சர்வதேச நிதி உதவி எவ்வாறு பயன்படும் என்பது திட்டவட்டமாக உறுதி செய்யப்படாமல் சர்வதேச நிதி உதவி எதுவும் வழங்கப்படக்கூடாது. ராஜபக்சவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. இவர்களுக்கு இடையே உள்ள முரண்பாடும், சிங்களத் தேசிய வாதிகளிடையே உள்ள பிளவும், எதிர்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாடும் தான் மாற்றத்துக்குரிய திட்டம் பற்றிப் பேச வைத்திருக்கின்றது. சர்வதேசப் பொறிமுறைச் செயல்பாடுகள் சரியாக நகர்த்ப்பட்டால், இந்தச் சிறிய வாய்ப்பை மேலும் அதிகரித்து - ஜனநாய முறையை மீளவும் உருவாக்குவதோடு - நாட்டிற்கு மிக அவசியமான இராணுவ மயமாக்கலை அழித்து, கொடுமையான போரின் வலியையும், வெறுப்புணர்வையும் நீங்கிவிட முடியும்.

No comments:

Post a Comment