வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2010,
ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியைத் தொடர்ந்து இந்நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று தமிழ் மக்களுக்கு மிக விரைவில் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொன்சேகா மீதும், தன் மீதும் முழு நம்பிக்கை வைத்து இத் தேர்தலில் பொன்சேகாவை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று அவர் வடக்கு கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து இந் நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, பேதங்களைக் கடந்து ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணையும் வாய்ப்பு எமக்கு இப்போது கிடைத்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தல் அந்த வாய்ப்பை எமக்கு வழங்கியுள்ளது.
நாம் இந்த நாட்டை ஊழல், மோசடிகள் அற்ற சுதந்திரமான நாடாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவுஸ்திரேலியா, சுவிஸ், அமெரிக்கா போன்று இந்நாட்டையும் நாம் அபிவிருத்தி செய்யவேண்டும்.
எமது எதிர்காலச் சந்ததியினருக்கு இந்த நாட்டை நல்ல முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அந்த நோக்கத்துடனேயே நாம் இப்போது ஜெனரல் சரத் பென்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியுள்ளோம்.
பொன்சேகா வெற்றி பெற்றதும் நாடாளுமன்றத் தேர்தலை நீதியாக நடத்தி, அதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பைத் திருத்துவோம். நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியாக பொன்சேகா இருப்பார். நாடாளுமன்றம் இந்த நாட்டை ஆட்சி செய்யும்.
தனி ஒருவரிடம் அதிகாரத்தைக் கொடுக்காது நாடாளுமன்றம் அதிகாரத்தைக் கொண்டிருப்பதன் மூலம்தான் இந்த நாட்டை ஊழல், மோசடிகள் அற்ற நாடாக மாற்றமுடியும்.
குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெகுவிரைவில் நல்லதோர் அரசியல் தீர்வு வழங்கப்படும். அது இந்நாட்டு மக்கள் அனைவராலும், நாடாளுமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வாகவே அமையும்.
யுத்தத்தில் ஈடுபட்ட பொன்சேகாவிற்குத்தான் யுத்த அழிவு பற்றித் தெரியும். அவர் நிச்சயம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார்.
அதேபோல், வடக்கில் மீள்குடியேற்றமும் துரிதப்படுத்தப்படும். 2011 ஆம் ஆண்டளவில் மீள் குடியேற்றம் முடிவடைந்து விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு கிழக்கை அங்குலம் அங்குலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
என்மீதும், சரத் பொன்சேகா மீதும் நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொன்சேகாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாக ஒன்றுபட்டு அழிந்து போயுள்ள இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment