வியாழக்கிழமை, 21 சனவரி 2010,
வடக்கு கிழக்கில் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் தேவையாகும். தற்போதைய அரசின் ஆட்சியிலேயே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டதுடன், சுனாமி கட்டமைப்பும் இல்லாமல் போனது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஆட்சியிலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நிபுணத்துவக் குழுவின் அறிக்கையும் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தோல்வியின் விளிம்புக்கு வந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொன்சேகாவுடன் சம்பந்தன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளதாகக் கூறி இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் நேற்று முன்நாள் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இவ்வாறு தெ>வித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்த பின்னர் எமது நிலைப்பாடு தொடர்பாகவும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை உணர்த்தும் வகையிலும் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தோம். இது ஒரு இராஜதந்திர நடவடிக்கையாகும். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் தொடர்பான விடயங்களை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
கூட்டமைப்பு எடுக்கும் முடிவானது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைவாகவே இருக்கும். இலங்கையின் தற்போதைய அரசாங்கத் தரப்பினரும் ஜனாதிபதியும் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தினால் சம்பந்தன் பொன்சேகா இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது சம்பந்தன் மஹிந்த உடன்படிக்கை என்று ஒன்றுமே பேசப்படவில்லை. நாம் ரணில், பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது இரகசிய ஒப்பந்தம் என கூறப்படுகின்றது.
சம்பந்தன் - பொன்சேகா உடன்படிக்கை செய்துள்ளதாக குற்றம் சாட்டும் அரசாங்கத் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான கனகரத்தினத்தை விடுதலை செய்வதாகக் கூறி அவரை பிரசாரத்திற்குப் பயன்படுத்துகின்றது. வட மாகாண ஆளுநரின் வதிவிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர் மல்லாவி, வன்னி ஆகிய இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதற்கு ஆட்சிமாற்றம் தேவையாகும். தற்போதைய அரசின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டன. இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வகட்சிக் குழு 110 தடவைகள் கூடிய போதிலும், அந்தக் குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.
இந்த ஆட்சியில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் கொல்லப்பட்டனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு நடுத்தெருவிற்குக் கொண்டுவரப்பட்டனர்.
முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியேற்றிய போதும் அவர்கள் தமது ஜீவனோபாயத்தைக் கொண்டுநடத்துவதற்கு ஏதுவான தொழில் இன்றி, வருமானம் இன்றி அவர்கள் துன்பப்படுகின்றனர். உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் என்பவற்றை விற்று குழந்தைகளுக்கான பால் மா வகைகள் மற்றும் சத்துணவுகளை மக்கள் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அவல நிலை வேண்டுமா? அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் படுமோசமான நிலைமை தொடரும். இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணிச்சலான முடிவினை எடுத்து பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தள்ளது.
தமிழ் மக்களும் இந்த நிலையினை உணர்ந்து பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்கு வாக்களிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment