Tuesday, January 19, 2010

இராமர் இருக்கும் இடம் அயோத்திபோல சம்பந்தன் இருக்கும் இடமே தமிழ் கூட்டமைப்பு

[ திங்கட்கிழமை, 18 சனவரி 2010, 04:53.26 PM GMT +05:30 ]
இராமர் இருக்கும் இடம் அயோத்தி போல, இரா.சம்பந்தன் இருக்குமிடமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உறுதிப்பாடு தமிழ் மக்களிடம் உண்டென்ற உண்மை உணரப்படவேண்டியதொன்றாகும். இவ்வாறு யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஜனாதிபதித் தேர்தல் தமிழ் அரசியல்வாதிகளின் பச்சோந்தித்தனத்தை வெளிப்படுத்தி உள்ளது. வன்னி யுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலும் வந்தமையால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்பதை அறிய முடிந்ததில் தமிழ் மக்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றே கூற வேண்டும்.
வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தின் ரணங்கள் சற்றேனும் ஆறுவதற்கு முன்னதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கும் குத்துக்கரணங்கள் இப்படியும் மனிதர்களா? என்று எண்ணத் தோன்றுகின்றது. எதுவாயினும் பொதுத் தேர்தல் என்ற தீர்ப்பு பொது மக்களிடம் இருக்கும் வரை தடம்புரண்டவர்கள் அரசியல் நீரோட்டத்தில் கரையொதுங்கி முகத்திரை கிழிக்கப்பட்டு முகவரி இழப்பர் என்று சர்வநிச்சயம்.
அரசியல் என்பதை அழுக்கடையாக மாற்றபவர்கள் அதிலிருந்து பிழைக்க முடியாது என்பது அனுபவத்தின் பட்டறிவு. அரசியலில் மட்டுமல்ல; எவ்விடத்திலும் நேர்மையே நிலைத்து நிற்கும். இப்போதுகூட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் நேர்மையீனங்களும், ஊழல் குற்றச்சாட்டுக்களும் தலைவிரித்தாடுகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் கண் மண் தெரியாமல் பொது மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் கயமைத்தனமாகும்.
எனவே அரசியலில் முதலில் நேர்மைத்தனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நேர்மை, நீதி, பக்கம் சாராமை என்ற இயல்புகளுக்கு மக்களும் இறைவனும் நிச்சயம் உதவி செய்வர். இங்கு அரசியல் நேர்மை என்பது சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகளுக்கு மிகமிக அவசியமானதாகும். சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் பச்சோந்தித்தனமாக நடந்து கொள்ளுமாயின் அதனால் ஏற்படும் விளைவுகள் பேரழிவுகளாகவும், கொலைகளாகவுமே அமையும்.
சந்தர்ப்பவசமாக கிடைத்த பதவிகளைத் தொடர்ந்து காப்பாற்ற நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக தன் இனத்தை விற்று பிழைப்பு நடத்த முற்படுவது மகாபாவம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென அறிவித்துள்ளது. யாரும் எவரையும் ஆதரிக்கலாம்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் இன்னொரு பகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக் வையும் ஆதரிப்பதான அறிவிப்புகள் அபத்தமானவை. அது கூட்டமைப்பில் திட்டமிட்டு பிளவை ஏற்படுத்துவதுடன் உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாகும்.
எதுவாயினும், இராமர் இருக்கும் இடம் அயோத்தி போல, இரா.சம்பந்தன் இருக்குமிடமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உறுதிப்பாடு தமிழ் மக்களிடம் உண்டென்ற உண்மை உணரப்படவேண்டியதொன்றாகும்.

No comments:

Post a Comment