தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். இதனை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நாம் எடுத்துக்காட்டுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சென். ஜோன்ஸ் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்திலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சம்பந்தன் பா.உ. மேலும் கூறியதாவது,
தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது ஆயுதங்களுடன் ஆரம்பிக்கப்படவில்லை. ஆயுதப் போராட்ட முடிவுடன் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவுமில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் இல்லாமல் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்ற யதார்த்தத்தை இன்று தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை தேர்தல் முடிவு மூலம் எடுத்துக் காட்டுவோம் என்றும் அவர் சொன்னார்.
தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய காலம் கனிந்துவிட்டது.
எமது நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது. அவ்வாறு வாழ்ந்தால் சுயநிர்ணய உரிமையையும், சலுகைகளையும் அவர்கள் கோருவார்கள். அவ்வாறான நிலைக்கு இடமளிக்கக் கூடாது என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையாகும்.
இன்னும் ஆறு வருட காலம் இந்த மகிந்த ராஜபக்ச அரசு நீடிக்குமானால் கிழக்கு மாகாணம் நிச்சயம் பறிபோகும். இதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதனை தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் புரிந்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, அறுந்தலாவை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் பேசினோம். தேர்தலில் வென்ற பின்னர் இது பற்றிப் பேசுவோம். இப்போது உங்களது ஆதரவைத் தாருங்கள் என்று சொன்னார்கள். இதன் பின்னரே நாங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்தோம்.
அப்போது நாங்கள் சொன்னோம் எங்களது மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். நாங்கள் விலை போகவும் மாட்டோம். எங்களது மக்களது விருப்பத்திற்கு மாறாக நாங்கள் செயற்பட மாட்டோம். நாங்கள் தமிழ் மக்களது விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே எங்களை மக்கள் தூக்கியெறிந்து விடுவார்கள்.
கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான வாக்குகளைப் பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெறுவோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு இலட்சத்து எழுபது ஆயிரம் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்றார்.
இம்முறை தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்களே இருப்பார்கள் என்பதை இந்த நாட்டிற்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் எடுத்துக் காட்டுவோம். தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு மூலம் எடுத்துக் காட்டுவோம். தமிழ் மக்கள் தமிழர் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எமது கட்சி சமூகத்திற்கான விடிவைப் பெற்றுத் தரும் என்பதுவே தமிழ் மக்களது நம்பிக்கையாகும்.
தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை விரும்பியதில்லை. எனினும் எமது இளைஞர்கள் செய்த தியாகங்களை நாங்கள் மதிக்கின்றோம். அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நீடிக்க எந்தவொரு ஆணையையும் வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.
தற்போதைய தேர்தல் பிரசார நடவடிக்கையில் எமக்கு ஜனநாயகம் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் எமது மக்களைச் சந்திப்பதற்காக நாங்கள் சென்றிருந்தபோது ஒரு முக்கியஸ்தரின் தலைமையிலான குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டோம். அந்த குழுவின் தலைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்றும் ஜனாதிபதியின் இணைப்பாளரென்றும் அறிந்தோம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. இவ்வாறு ஜனநாயகம் இல்லாத நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு வாழ முடியும் என்றார். இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எஸ். துரைரட்ணசிங்கம், செல்வி க. தங்கேஸ்வரி, பா. அரியநேத்திரன், முகமது இமாம், எஸ். கனகசபை உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment