திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம்!
ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலையில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஈடுஇணையற்ற மாவீரரை, மகத்தான தலைவரை ஈன்று புறம்தந்த பெருமைக்குரியவர் திரு. வேலுப்பிள்ளை அவர்கள். அவருடைய மரணம் இயற்கையானது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் ஒரு வீரச்சாவே ஆகும்.
தள்ளாத வயதிலும் தாய்மண்ணைவிட்டுப் பிரியாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் களமாடும் வீரம் செறிந்த அந்த ஈழ மண்ணில் புலிகளுக்கு ஊக்கமளித்துவந்த ஒரு மாவீரராகவே அவர் வாழ்ந்தார். திரு. பிரபாகரன் அவர்களின் உணர்வுகளுக்கும் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் இளம்பருவத்திலிருந்தே ஊக்கமளித்து வந்தவர் என்பதற்கு அவருடைய வாழ்க்கை ஒரு சாட்சியமாகவே விளங்குகிறது.
சிங்கள இனவெறியர்களின் வதைமுகாமில் சிக்கி தமது வாழ்வை நிறைவு செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவரும் ஒரு மகத்தான வரலாறாகப் பதிவாகியிருக்கிறார். ஈவிரக்கமற்ற இனவெறிக் கும்பல் மேதகு பிரபாகரன் அவர்களின் வயதுமுதிர்ந்த தாய், தந்தை மற்றும் மாமியார் ஆகியோரையும் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தி வரும் நிலையில் இந்த மூவரையுமாவது விடுவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனாலும் சிங்கள ஆட்சியாளர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லையயன்பது பெரும் வேதனையளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் குழுவோடு நான் இலங்கை சென்றிருந்தபோதும், அண்மையில் மறைந்த அமைச்சர் சந்திரசேகர் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொழும்பு சென்றிருந்தபோதும், பசில் இராஜபக்சேவிடம் அந்த மூவரையும் விடுவிக்க வேண்டும் என முறையிட்டேன்.
அப்போது குடும்ப உறவினர்கள் விண்ணப்பித்தால் அவர்களை விடுவிக்க முடியும் என்று பசில் பதிலளித்தார். கனடாவில் உள்ள மேதகு பிரபாகரன் அவர்களின் தமக்கையின் மூலமாக அம்முயற்சியை மேற்கொண்டிருந்த இவ்வேளையில் திடீரென திரு. வேலுப்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார் என்பதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
ஒப்புவமை இல்லாத ஒரு மாபெரும் விடுதலை இயக்கத் தலைவரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர் திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவருடைய குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
Friday, January 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment