செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2010, 02:22.44 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் தற்போதைய ஜனாதிபதியே எனப் பெரும்பாலான தமிழ் மக்கள் கருதுவதால், அவருக்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களிக்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பவர்களாக யுத்தத்தினால் காயப்பட்டுள்ள தமிழர்களே விளங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள ஏ.எவ்.பி. செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
பல தசாப்த காலமாக சுதந்திர இன ரீதியிலான தனிநாடொன்றிற்காக இலங்கையில் விடுதலைப்புலிகள் போரிட்டனர். அவர்கள் கடந்த வருடம் மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.
எனினும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ் வாக்காளர்களே தீர்க்ககரமான சக்தியாக விளங்கப் போகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பிளவுபட்டுள்ள நிலையில் மிகக் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக யுத்தக் காயங்களை அனுபவித்துள்ள சுமார் இருபத்தைந்து லட்சம் தமிழர்களே ஜனவரி 26 ம் திகதி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதைத் தீர்மானிக்கப் போகின்ற சக்தியாக விளங்குகின்றனர்.
ராஜபக்ஷவும், பொன்சேகாவும் வடபகுதியில் தமிழர்களின் இதய பூமியான யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வருட காலத்திற்கு முன் இது நினைத்துப் பார்க்கமுடியாத விடயமாகக் காணப்பட்டது.
முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர் எனவும், மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவர் எனவும் உறுதியளித்துள்ளதன் மூலம் இரு வேட்பாளர்களும் தமிழர்களின் ஆதரவைப் பெற முயல்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் செல்வாக்கு இன்னமும் உண்டு
எவ்வாறாயினும், தமிழ்மக்களின் வாக்குகளே தீர்க்ககரமானவையாக அமையும் என்றார் அவர். தமிழ்மக்களே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கலாம் எனத் தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலைப்புலிகள் இல்லாதபோதிலும் அவர்களது செல்வாக்கு இன்னமும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் எனத் தாம் கருதும் மஹிந்த ராஜபக்ஷ விற்கு எதிராகப் பெரும்பாலான தமி ழர்கள் வாக்களிக்கலாம் என்றார்.
ஊழல், பொருளாதாரம், ஊடகச் சுதந்திரம் போன்ற விடயங்களே பெரும்பான்மை சிங்களவர்களைப் பொறுத்தவரை முக்கியமான விடயங்களாக அமையப்போகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
சிங்கள வாக்காளரிடையே பிளவு
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட வெற்றிக்களிப்பில் சிங்களச் சமூகம் இன்னமும் உள்ளதாக சுட்டிக்காட்டும் "ராவய' ஆசிரியர் விக்டர் ஐவன், எனினும் இரு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதில் அவர்கள் பிளவுபட்டுள்ளனர் என்கிறார்.
கடந்த 37 வருட காலத்தில் முதற் தடவையாக விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் தமிழ்ச் சிறுபான்மை சமூகம் வாக்களிக்கவுள்ளது என மேலும் தெரிவித்த அவர் அடுத்த ஜனாதிபதியைத் தமிழர்களே தீர்மானிக்கலாம் என்றார்.
எனினும், தமிழர்களில் எவ்வளவு பேர் இம்முறை வாக்களிப்பதற்கான உரிமையைப் பெறுவர் என்ற முக்கிய கேள்வி காணப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவு மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே வாக்களிப்பர் என ஜனநாயகத்திற்கான இயக்கத்தைச் சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment