Monday, January 11, 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது -அரசாங்கம்

ஸ்ரீலங்கா அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரியினல் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மனிவலு எரிசக்தி துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் சுமார் 14,000 போராளிகளை வேறு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்றும் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் மிகவும்ஆபத்தான தற்கொலை போராளிகள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்றவர்களும் இருப்பதால் அவர்களால் மீண்டும் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் சரத் பொன்சேகா மீது தவறான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பு தரப்பினால் 12,000 போராளிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அந்த எண்ணிக்கை 14,000 என்று கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் உண்மையான எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment