04 January, 2010 by admin
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டுமென உத்தரவிடும் துண்டுப்பிரசுரங்களை சிறப்பு அதிரடிப்படைத் தலைமையகம் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி விநியோகித்துள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த துண்டுப்பிரசுரத்தின் ஒவ்வொரு நகல்களை நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு அதிரடிப்படை முகாம்களுக்கும் அனுப்புமாறு டிசம்பர் 11 ஆம் திகதியன்று சிறப்பு அதிரடிப் படையின் தளபதி, சிரேஷ்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த துண்டுப்பிரசுரத்தின் நகல்கள் பிரதிப் போலீஸ் மாஅதிபர் (நடவடிக்கைகள்), போலீஸ் கண்காணிப்பாளர் (நிர்வாகம், போக்குவரத்தும் தகவல்தொடர்பு, நலன்புரி மற்றும் பயிற்சி), பிராந்திய கட்டளை அதிகாரிகள் (வவுனியா, பொத்துவில், மட்டக்களப்பு, அம்பாறை) மற்றும் அனைத்து மாகாண தளபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.மஹிந்த ராஜபக்ஷ தனது சிறந்த தலைமைத்துவத்தை, மன வலிமையை, நாட்டுப்பற்றை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். ஆசிய நாடுகள் முழுவதற்குமே ஒரு வலிமையைக் கொடுத்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த அதேவேளை, நாட்டின் அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் மஹிந்ததான் இன்றைய மற்றும் நாளைய ஜனாதிபதி என அவரை வாழ்த்துவது போல அமைந்துள்ளது.ஆனால் இத்துண்டுப்பிரசுரம் குறித்து கருத்துக் கூறிய சிறப்பு அதிரடிப்படைத் தளபதி சரத்சந்திரா, தனது அலுவலகத்துக்கு இவ்வாறான எந்தவொரு துண்டுப்பிரசுரமும் கிடைக்கவில்லை எனக் கூறி இதை மறுத்துள்ளார். அரச இலச்சினையுடன் யார் வேண்டுமானாலும் போலியான துண்டு பிரசுரங்களைத் தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை பொது வேட்பாளரான சரத் பொன்சேகா மேற்படி துண்டுப்பிரசுரம் குறித்த எழுத்து மூல முறைப்பாட்டை போலீஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியாவிடம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வழங்கியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment