
04 January, 2010 by admin
தான் ஆட்சிக்கு வந்தால் தடுப்புக்காவலில் உள்ள அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தனிடம் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார். இது தொடர்பான தீர்வு வரைவு ஒன்றையும் அவர் சம்பந்தன் எம்.பியிடம் கையளித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண திட்டம் என்ற தலைப்பிலான இந்த தீர்வு வரைவினை இன்று திங்கட்கிழமை தன்னை சந்தித்த சம்பந்தன் எம்.பியிடம் பொன்சேகா கையளித்துள்ளார்.
துணைப்படைகளின் ஆயுதக்களைவு, உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுதல் உட்பட வேறு பல விடயங்களுக்கும் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்கள் மற்றும் பொன்சேகா இணக்கம் தெரிவித்த விடயங்கள் ஆகியவை தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் பேச்சாளர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காலம் காலமாக ஏமாற்றிவரும் சிங்களப் பேரினவாதிகளுடன் போட்ட பல ஒப்பந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டது வரலாற்றில் உள்ளது, இது எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment